பெரம்பலூர் திரு இரத்தினம் ஜெயபால் வருகை

ஆகஸ்டு 2016இல் ஒரு நாள். பெரம்பலூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. திரு இரத்தினம் ஜெயபால் (மின்னஞ்சல் jayabalrathinam@gmail.com) என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். என் பௌத்த ஆய்வு தொடர்பான வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருவதாகவும், தான் எழுதவுள்ள நூல் தொடர்பாக என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். பிற நாள்களில் அலுவலகப்பணி என்ற நிலையில் அரசு விடுமுறை நாள்களில் மட்டுமே அறிஞர்களையும், நண்பர்களையும் ஆய்வு தொடர்பாக சந்தித்து வரும் நிலையில் வாய்ப்பான ஒரு விடுமுறை நாளில் வரும்படி கூறினேன். ஓய்வு நேரம் ஆய்வு நேரமே.

திரு இரத்தினம் ஜெயபால் உடன் ஜம்புலிங்கம் (இல்ல நூலகத்தில்)

இருவருக்கும் வசதியான 15 ஆகஸ்டு 2016 அன்று வருவதாகக் கூறி, அன்று வந்திருந்தார். பேரூராட்சியில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவர் தொல் பழங்காலம் முதல் தற்காலம் வரை பெரம்பலூர் வட்டார வரலாறு தொடர்பாக நூல் எழுதவுள்ளதாகவும், பௌத்தம் மற்றும் சமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செய்திளைப் பற்றி அறிய விரும்புவதாகவும் தன் ஆவலை வெளிப்படுத்தினார். பெரம்பலூரைத் தலைநகராகக் கொண்டு அமைந்துள்ள இம்மாவட்டத்தில் அரும்பாவூர், இலப்பைகுடிகாடு, குறும்பாளூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகள் அமைந்துள்ளன. பெரம்பலூர் பகுதியில் பௌத்த ஆய்விற்காக களப்பணி சென்றிருந்த நிலையில் அவர் கூறிய சில ஊர்களை நான் முன்னரே அறிந்திருந்தேன். பெரம்பலூரைப் பற்றிய அவரது ஆர்வத்தையும், செய்திகளைத் திரட்டுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சியையும் பாராட்டினேன். அந்த பகுதியைப் பற்றி அவர் கூறிய செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. பெரம்பலூரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி அனாயாசமாக பகிர்ந்துகொண்டார்.  

விவாதத்தின்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பௌத்தம் தொடர்பாக என் ஆய்வேட்டைக் காண விழைவதாகக் கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒகுளூர் மற்றும் பரவாய் ஆகிய இடங்களில் நான் பார்த்த புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினேன். அந்த சிலைகளை அவர் பார்த்துவிட்டதாகக் கூறினார். ஒரு துறை தொடர்பான செய்திகள் முழுமையாக  நூலில் இடம் பெறவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கனவாக அமைந்தன. 

என் பௌத்த ஆய்வினைத் தொடங்கிய காலகட்டத்தில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அமரர் திரு கும்பகோணம் சேதுராமன், திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி, முனைவர் இரா.கலைக்கோவன், திரு அய்யம்பேட்டை செல்வராஜ், திரு தில்லை கோவிந்தராஜன், முனைவர் ராஜா முகமது உள்ளிட்ட பல அறிஞர்களைச் சந்திக்கச் சென்றது என் நினைவிற்கு வந்தது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல ஆசிரியப் பெருமக்கள் என் ஆய்விற்கு நல்ல கருத்துகளை வழங்கினார்கள். என் நெறியாட்டியான முனைவர் க.பாஸ்கரன் (இந்நாள் துணைவேந்தர்) அவர்கள் என் ஆய்வேடு சிறப்பாக அமையக் காரணமாக இருந்தார். ஆய்வேடு உருப்பெறும் காலத்திலும் தொடர்ந்து நான் புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும்போதும் பெற்று வரும் அனுபவங்கள் என் எழுத்தையும் ஆய்வினையும் சிறப்புற அமைக்க உதவுவதை கண்டுவருகிறேன். 

அந்நிலையில் பெரம்பலூர் தொடர்பாக வெளியாகியுள்ள நூல்களை முடிந்தவரைப் பார்க்கும்படி கூறினேன். முகநூலில் தொடர்ந்து பதிவுகளை எழுதும் திரு ஆறகழூர் வெங்கடேசன் (https://www.facebook.com/venkatesanpon) மற்றும் திரு ம. செல்வபாண்டியன் (https://www.facebook.com/mahathma.selvapandiyan) ஆகியோரைப் பற்றியும் அவர்கள் புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றிய பதிவுகளைத் தொடர்ந்து எழுதுவதைப் பற்றியும் கூறினேன். உடனே அவர் அவ்விருவரையும் சந்தித்ததாகக் கூறினார். குழுமூரில் புத்தர் சிலையைக் கண்டுபிடிக்க திரு செல்வபாண்டியன் உதவியாக இருந்தார். பல்துறை சாராத பலர் இவ்வாறாக மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு பிரமிப்பை ஊட்டுவனவாக உள்ளன. பௌத்த ஆய்வில் நான் இறங்கியபோது பலர் அந்த நிலையில் என்னைப் பாராட்டியது இன்னும் என் நினைவில் உள்ளது. 
திரு பெரியார்தாசன் உடன் ஜம்புலிங்கம் (28.2.2002)

சுமார் 15 வருடங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கிற்காக எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களைச் சந்தித்தேன். என் ஆய்வைப் பற்றி ஆர்வமாகப் பேசி, களப்பணியைக் குறித்து பாராட்டினார். விவாதத்தின் நிறைவில் அவர், என்னிடம்,  "நீங்கள் என்ன பணிநிலையில் இருக்கின்றீர்கள்" என்றார். அப்போது நான், "ஐயா, நான் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "என்னைப் போன்ற ஆசிரியரைவிட உங்களைப் போன்றோரால்தான் இவ்வாறாக சாதிக்க முடியும்" என்று கூறி என் ஆய்விற்கு வாழ்த்து தெரிவித்தார். திரு ஜெயபால் அவர்களுடன் பேசும்போது அதனை நான் உணர்ந்தேன். அரசுத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற அவருடைய சுறுசுறுப்பையும், ஈடுபாட்டையும் கண்டு வியந்தேன். தேவையான விவரங்களைக் கேட்டறிந்த அவர், வாய்ப்பு கிடைக்கும்போது தன் ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அவரது நூலின் அச்சுப்பணி சிறப்பாக அமையவும் வாழ்த்து தெரிவித்தேன்.  வரலாற்று ஆர்வலர் ஒருவருடன் அந்த காலைப்பொழுது இனிமையாக அமைந்தது.  

2018இல் இவர் பெரம்பலூர் தொடர்பாக ஒரு நூல் வெளியிட்டதாக நண்பர்களின் முகநூல் பதிவுகள் மூலமாக அறிந்தேன். 

7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. போற்றுதலுக்கு உரிய மனிதர்

    ReplyDelete
  2. இரு துருவங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி தொடரட்டும் வெற்றி
    த.ம.1

    ReplyDelete
  3. சிறந்த மனிதரைப் பற்றிப் பகிர்ந்த
    தங்களின் பதிவுக்கு நன்றி
    தொடருங்கள்

    ReplyDelete
  4. இருபெரும் மனிதர்களின் சந்திப்பு தமிழ் வளர்ச்சிக்கான ஓரு வாய்ப்பு.
    நன்றி

    ReplyDelete
  5. இனிய சந்திப்பு....
    தம 2

    ReplyDelete
  6. உங்கள் //(இல்ல நூலகத்தில்)// பார்த்தாலே பயமாக இருக்கிறது!!

    ReplyDelete
  7. கற்றோரைக் கற்றாரே காமுறுவர் என்பது நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  8. திரு இரத்தினம் ஜெயபால்அவர்களின் நூல் ,உங்களின் வழிகாட்டலுடன் விரைவில் வெளி வர வாழ்த்துகள் :)

    ReplyDelete
  9. இனிய சந்திப்பு. ஆய்வு நூலுக்காக நிகழ்ந்த சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!
    த ம +1

    ReplyDelete
  10. நிறைவான சந்திப்பு ஐயா...

    ReplyDelete

Post a Comment