ஏடகம் ஞாயிறு முற்றம் : 11 மார்ச் 2018 : சோழ நாட்டில் பௌத்தம்

ஏடகம் அமைப்பு மாதந்தோறும் நடத்துகின்ற ஞாயிறு முற்றத்தின் மார்ச் மாதச் சொற்பொழிவு 11 மார்ச் 2018 ஞாயிறு மாலை நடைபெற்றது. வழக்கம்போல ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் எழுதிவரும் நிலையில் இம்மாதப் பதிவாக, என்னுடைய உரையினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 

8 அக்டோபர் 2017இல் தொடங்கப்பட்ட ஏடகம், ஞாயிறு முற்றம் சார்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பான சொற்பொழிவுகளை நடத்திவருகிறது. அவ்வகையில் என் களப்பணி தொடர்பாக உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். இவ்விழாவில் தலைமையுரையாற்றிய அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பே.வே.நவேந்திரன், தமிழகத்தில் பௌத்தம் தொடர்பான இலக்கியச் சான்றுகளையும், பூம்புகார் மற்றும் நாகப்பட்டின புத்த விகாரைகளைப் பற்றியும்  எடுத்துரைத்தார்.
வரவேற்புரை : ஆதிபராசத்தி தணிக்கைக்குழு உறுப்பினர் திரு கு.சிவராஜா
தலைமையுரை : அறந்தாங்கி நகராட்சி ஆணையர் திரு பே.வே.நவேந்திரன்






நன்றியுரை : முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி டி. பவானி


நிகழ்ச்சித்தொகுப்பு : செல்வி இராச.பாரதிநிலா
அடுத்து சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற கள ஆய்வின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன்.

"வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும் (1940) என்ற நூலில் சோழ நாட்டில் 10 இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 1993 முதல் மேற்கொண்டு வருகின்ற தொடர்ந்த களப்பணியின்போது அந்த 10 சிலைகள் உள்ளிட்ட சுமார் 70 புத்தர் சிலைகளைக் கண்டறியமுடிந்தது. பல்வேறு காலகட்டங்களில் தழைத்திருந்த பௌத்த சமயத்திற்கு பக்தி இயக்கக் காலத்தில் பின்னடைவு ஏற்பட்டபோதிலும் சோழர் காலத்தில் நல்ல நிலையில் பரவியிருந்ததை இங்கு காணப்படுகின்ற அக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள் தெளிவுபடுத்துகின்றன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் காணப்படுகின்ற கி.பி.1580ஆம் ஆண்டைச் சேர்ந்த செவ்வப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டின் மூலமாக கும்பகோணம் அருகே திருவிளந்துறை என்னுமிடத்தில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றாக உள்ளது."
    
“களப்பணியின்போது ஒரு பொருண்மையில் ஆழ்ந்து நோக்குதல், ஒரே இடத்திற்குப் பல முறை செல்லல், வரலாற்றறிஞர்களின் கருத்துகளைக் கேட்டல், வரலாற்று நூல்களிலிருந்து சான்றுகளைத் திரட்டுதல், நாளிதழ் செய்திகளை தொடர்ந்து வாசித்தல், மாற்றுக்கருத்துகளை ஆராய்தல், பெறப்படும் சிறிய தகவலாயினும் அதனை உரிய நாளிட்டு குறித்துக்கொள்ளுதல், களப்பணியில் உதவியர்களுக்கு அஞ்சலட்டை மூலம் நன்றி தெரிவித்தல் போன்ற உத்திகள் அதிகமாக உதவின. புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலை வேறுபாட்டினையும், புத்தர் சிலைகள் இடம் பெயர்ந்ததையும், பாதுகாப்பாக அருங்காட்சியகங்களுக்குக் கொண்டுவரப்பட்டதையும், வழிபாட்டில் உள்ளதையும் காணமுடிந்தது.  இந்த 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது தனியாகவும், ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் துணையுடனும்,  15 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் புதிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது“.

“சோழ நாட்டில் பரவலாகக் காணக்கிடைக்கின்ற புத்தர் சிலைகள் பௌத்த சமயம் இப்பகுதியில் தழைத்திருந்த நிலையை எடுத்துரைக்கின்ற சான்றுகளாக உள்ளன. புத்தரை ரிஷி, செட்டியார், சமணர், அமணர், சிவனார், சாம்பான், பழுப்பர், நாட்டுக்கொட்டை செட்டியார் என்று பல இடங்களில் அழைக்கின்றார்கள்.  மங்கலம், ஒகுளூர், பட்டீஸ்வரம், புஷ்பவனம், புதூர், புத்தமங்கலம், விக்ரமம், விக்ரமங்கலம், கிள்ளியூர் உள்ளிட்ட பல இடங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் நேர்த்திக்கடனாக முடியெடுத்தல், தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு போன்ற நாள்களில் சிறப்பு பூசைகள் செய்கின்றனர்.  சில இடங்களில் புத்த பூர்ணிமாவின்போது சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி பூஜைகள் நடத்துகின்றனர்.  சோழ நாட்டில் பௌத்த சமயத்தின் போற்றப்படுவதை இதன்மூலம் உணரமுடிகிறது“.

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் பிப்ரவரி 2018இல் வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள 82 சமணர் துணைத் தளங்கள் உள்பட 464 சமணர் தளங்களை ஆவணப்படுத்தியுள்ள, தமிழகச் சமணத் தளங்கள் என்ற குறுந்தகட்டில் ஆய்வுக்காலத்தில் கண்டுபிடித்த 10க்கும் மேற்பட்ட சமண தீர்த்தங்கரர்களுடைய சிலைகளின் புகைப்படங்கள் உரிய குறிப்புடனும் ஒப்புகையுடனும் இடம்பெற்றுள்ளன. 

முன்னதாக ஆதிபராசக்தி தணிக்கைக்குழு உறுப்பினர் கு.சிவராஜா வரவேற்றார். டி.பவானி நன்றியுரையாற்றினார். இராச.பாரதிநிலா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.  

ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பினை அளித்த ஏடகத்திற்கும், பொறுப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியம், வரலாறு, சுவடியியல் போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பினை ஆற்றிவருகின்ற ஏடகத்தின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி : தி இந்து, 15 மார்ச் 2018

அந்தப் பொழிவின்போது நான் பேசியதை திரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய வலைப்பூவில் மீசை வைத்த புத்தர் என்ற தலைப்பில் 17 மார்ச் 2018இல் பகிர்ந்துள்ளார். அப்பதிவிற்கு நண்பர்களும், அறிஞர்களும் சிறப்பாகப் பின்னூட்டம் அளித்திருந்தனர். அனைவருக்கும் நன்றிகூறுகிறேன்.


மீசை வைத்த புத்தர், 17 மார்ச் 2018
10 ஆகஸ்டு 2018 அன்று மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. முனைவர் அவர்களுக்கு...
    எமது வாழ்ய்துகளும்...

    தங்களின் சேவை இன்னும் வளரட்டும்.

    ReplyDelete
  2. மகிழ்ந்தேன் ஐயா
    தங்களின் பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஐயா. தங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.

    ReplyDelete
  4. முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் எழுதிய இது சம்பந்தமான பதிவினில் எனது கருத்தினையும் பதிவு செய்துள்ளேன்.

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஐயா! கரந்தை சகோ அவர்களின் பதிவும் வாசித்தோம். தங்களின் பணி மேலும் மேலும் தொடரவும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  6. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்புதானேசார்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐயா...
    அருமை...
    தங்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  8. Mr E.Anban (thro: anbumalar89@gmail.com)
    Namo buddhaya ...valthukkal ...thanks

    ReplyDelete
  9. வாழ்த்துகள் ஐயா. தங்களின் சிறப்பான பணி தொடர்ந்திடவும் வாழ்த்துகள்.

    துளசிதரன்

    ReplyDelete
  10. தங்கள் ஆய்வுப் பணி
    பயனுள்ள சிறப்புப் பணி
    பாராட்டி வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  11. பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டோம்
    - மும்பை இரா. சரவணன்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ஐயா...
    அருமை...
    தங்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஐயா...
    அருமை...
    தங்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment