அருமொழி சோழன் விருது

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும் இணைந்து 3 ஆகஸ்டு 2025ஆம் நாள் இராஜராஜசோழர் முடி சூடிய 1040ஆவது ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சாவூர் பெரிய கோயில் பெத்தண்ணன் கலையரங்கில் நடத்தின. இவ்விழாவில் அருமொழி சோழன் விருதினைப் பெற்றேன்.






(வலமிருந்து) உதயசங்கர், ச.கிருஷ்ணமூர்த்தி, பெ.வெங்கடேசன்,  பாபாஜி ராஜா போன்ஸ்லே, செ.இராமநாதன், ஜான் பீட்டர், ஜம்புலிங்கம், சொ.சாந்தலிங்கம்,க.பன்னீர்செல்வம், வி.ப.யதீஸ்குமார் உள்ளிட்டோர்



தஞ்சாவூர், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மைசூர் இந்தியத் தொல் ஆய்வுத்துறை பேரறிஞர் முனைவர் க.பன்னீர்செல்வம், குழுத்தலைவர் மருத்துவர் சா.உதயசங்கர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் திரு வி.ப.யதீஸ்குமார், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் துறைத்தலைவர் முனைவர் ச.இரவி, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர், அறம் வரலாற்றாய்வு மையத் தலைவர் திரு அறம் கிருஷ்ணன், திரு செ.இராமநாதன், இந்து சமய அறநிலையத்துறையின் பணிநிறைவு பெற்ற நிர்வாக அலுவலர் திரு டி.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

இராஜராஜ சோழரின் புகழுரையை தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் கோ.தெய்வநாயகம் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் வரலாற்றுப் பேரறிஞர் அமரர்.திரு.தி.வை.சதாசிவ பண்டாரத்தாருக்கு வரலாற்று மாமேதைக்கான "இராஜராஜ சோழர் விருது" வழங்கப்பட்டது. அவரது சார்பாக ஐயா அவர்களின் பெயரன் மற்றும் கொள்ளுப் பெயரன் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். இந்தியத்தொல் பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் திரு பெ.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலர் திரு ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காகச் சிறந்த வரலாற்று ஆய்வு நூலுக்கான விருதினைப் பெற்றேன். சிறந்த வரலாற்றுப் புதினத்திற்கான அபிராமி பாஸ்கரன் நினைவு விருது திரு யுகபிரம்மனுக்கு வழஙகப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீநந்தா நாட்டியாலயா குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. 


முன்னதாக குழுவின் பொருளாளர் திரு ஆண்டவர் கனி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் திரு இரா.கபிலன் தொகுத்து வழங்கி, நன்றி கூறினார்.  தொடர்ந்து மரபு நடையும் நடைபெற்றது.

என்னுடைய உரையில் 1990களின் இடையில் ஆய்வில் அடியெடுத்து வைத்தது முதல் களப்பணி அனுபவங்களையும், சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடானது அதே தலைப்பில் நூலாக்கம் பெற மேற்கொண்ட முயற்சிகளைப் பகிர்ந்துகொண்டேன்.

காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்ற விழாவில் ஆய்வாளர்கள், குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விருது வழங்கிய சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவிற்கும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.






-------------------------------------------------------------------------------------------
நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------

Comments