இராஜராஜசோழரின் 1038ஆவது முடிசூட்டுப் பெருவிழா : மும்முடிச்சோழன் விருது

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கமும் இணைந்து 3 ஆகஸ்டு 2023ஆம் நாள் இராஜராஜசோழர் முடி சூடிய 1038ஆவது ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சாவூர் பெரிய கோயில் பெத்தண்ணன் கலையரங்கில் நடத்தின.





இராஜராஜ சோழரின் புகழுரையை தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் கோ.தெய்வநாயகம் நிகழ்த்தினார்.

வணக்கத்துக்குரிய மேயர் திரு சண்.இராமநாதன் தலைமையுரையாற்றினார். குழுவின் தலைவர் மருத்துவர் திரு சா.உதயசங்கர் நோக்கவுரையாற்றினார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் அமரர் திரு என்.சேதுராமன் (சகோதரர் சிவராமன் பெற்றுக்கொண்டார்), பேராசிரியர் திரு சு.இராஜவேலு, திரு கி.ஸ்ரீதரன் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டன.



(வலமிருந்து) ஜம்புலிங்கம், உதயசங்கர், கோ.தெய்வநாயகம், சிவராமன், ஸ்ரீதரன், சண்.இராமநாதன், இராஜவேலு, கோவிந்தராஜ், துளசேந்திரன், ஜான் பீட்டர், செ.இராமநாதன் 




குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் திரு ஆ. ஜான்பீட்டர், தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் முனைவர் திரு துளசேந்திரன், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் திரு ச.இரவி, தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் (ப.நி) முனைவர் திரு பா.ஜம்புலிங்கம், அறம் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் திரு அறம் கிருஷ்ணன், கயிலைமாமணி திரு செ.இராமநாதன், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் (ப.நி) திரு கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக செயற்குழு உறுப்பினர் திரு கபிலன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் திரு ஆண்டவர் கனி நன்றி கூறினார். தொடர்ந்து மரபு நடையும் நடைபெற்றது.

விழா மேடையில் எனக்கு வழங்கப்பட்ட
மும்முடிச்சோழன் விருது

என்னுடைய உரையில் ராஜராஜசோழன் பௌத்தத்திற்கு அளித்த ஆதரவினைப் பற்றியும், ஆய்வின்போது மேற்கொண்ட களப்பணியில் எதிர்கொண்ட அனுபவங்களையும், அண்மைக் கண்டுபிடிப்பான பழையாறையில் பார்த்த புத்தர் சிலையைப் பற்றியும் பேசினேன்.

தொடர்ந்து, வாழ்நாள் சாதனையாளர் விருதாளர்களுடனான என்னுடைய ஆய்வு அனுபவங்களை பகிர்ந்துகொண்டேன்.

அமரர் திரு குடந்தை சேதுராமன் அவர்கள் என் ஆய்விற்குப் பாராட்டுத் தெரிவித்ததோடு பொன்னி நாட்டில் பௌத்தம் என்று தலைப்பினை வைத்திருக்கலாம் என்றார். கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள, திருவிளந்துரையில் பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்றான, கல்வெட்டின் படியைத் தந்து அது இருக்கும் இடத்தையும் தெரிவித்து உதவினார்.

திரு ஸ்ரீதரன் அவர்கள் திருச்சி மாவட்டம் முசிறியில் மீசை புத்தர் கண்டுபிடிக்க உதவியதோடு, பெரண்டாக்கோட்டை புத்தரைப் பற்றிய 1978ஆம் ஆண்டின் தி மெயில் இதழின் நறுக்கினை அனுப்பியிருந்தார்.

திரு இராஜவேலு அவர்கள், பூம்புகாரிலிருந்து எடுக்கப்பட்ட புத்த செப்புத்திருமேனியின் ஒளிப்படத்தைப் பெற உதவினார். பின்னாளில் அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னர் பட்டுக்கோட்டை அருகில் உள்ள விக்ரமத்தில் உள்ள புத்தர் சிலையினைப் பற்றிய குறிப்பினை தொலைபேசியில் அவர் என்னிடம் கேட்டபோது, அந்த புத்தர் சிலையைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தேன்.

காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்ற விழாவில் ஆய்வாளர்கள், குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்த சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவிற்கும், தஞ்சாவூர் தமிழ்ச்சங்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.





ஆடிப்பெருக்கு நாள் என்றதும் கும்பகோணத்தில் காவிரியாற்றுக்கு ஆடிப்பெருக்கன்று சப்பரம் ஓட்டிச் சென்ற நினைவு வந்தது. வேகமாக சப்பரத்தை போட்டி போட்டுக்கொண்டு இழுத்துச்சென்றதும், சப்பரங்களை ஆங்காங்கே படித்துறைக்கு வெளியில் நிறுத்திவைத்ததும்,  காவிரியாற்றின் படிகளில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்டோர் காவிரிக்கு வழிபாடு நடத்தியதும், அவர்கள் ஆற்றில் பழங்களையும், காசுகளையும் தூக்கிப்போட்டதும், அதை அங்கு குளிக்கும் இளைஞர்கள் நீந்திச் சென்று எடுத்ததும் நினைவிற்கு வந்தன. அந்த நினைவுகளுடன் பெரிய கோயிலின் அருகேயுள்ள புது ஆறு சென்றேன். புது ஆற்றுப் படித்துறையில் ஆடிப்பெருக்கினைச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். சிறிது மணித்துளிகள் அந்நாள் நினைவுகளை மனதில் கொண்டுவந்து, இந்நாளை ரசித்துவிட்டு, பின்னர் விழா அரங்கை நோக்கிச் சென்றேன்.




விழா ஒளிப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு



6 ஆகஸ்டு 2023இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. நிகழ்வுகள் சிறப்பு...

    ReplyDelete
  2. அக்காலத்தில் "ஹிந்து" எல்லாம் கிடையாது என்பதையும் "உணர" வேண்டும்...

    ReplyDelete

Post a Comment