பௌத்த சுவட்டைத் தேடி : எழுமகளூர்
2022 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 14 ஆகஸ்டு 2018 நாளிதழில் வெளியான (கடம்பூர் விஜயன், "இரத்த சம்பந்தமான வியாதிகளை நீக்கும் அற்புதத் திருத்தலம்" , தினமணி , 14 ஆகஸ்டு 2018) கட்டுரையில் மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் (கொல்லுமாங்குடிக்கு முன்னதாக வலது புறச்சாலை) எழுமகளூர் என்ற ஊர் சப்தகன்னிகளுக்காகப் பெயர் பெற்றது என்று படித்தேன். இக்கோயிலைப் பற்றி எவ்வித பதிவும் விக்கிப்பீடியாவில் இல்லாததால் அதனைப் பற்றி கட்டுரை எழுதுவதற்காக விவரங்களைத் திரட்ட அவ்வூருக்குச் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன். . 1 அக்டோபர் 2021 சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் சென்று, அங்கிருந்து புதூர் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தில் ஏறினேன். வழக்கம்போல பேருந்தில் ஏற ஆரம்பித்த முதல் உரிய இடத்திற்குச் சென்று சேரும் வரை செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு ஏதாவது புத்தர் சிலை இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே சென்றேன். கிளியனூர் நிறுத்தத்தில் இறங்கி அங்...