பௌத்த ஆய்வு : 30 ஆண்டுகள் நிறைவு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் பதிவு செய்ய ஆகஸ்டு 1993இல் விண்ணப்பம் அனுப்பி, அந்த ஆய்வினை நிறைவு செய்து, தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்வது என்பது நினைவில் நிற்கின்ற அனுபவமாகும்.
அனுபவத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பாக, ஆய்வின்போது பன்மொழிப்புலவர் திரு மு.கு.ஜகந்நாதராஜா அவர்களிடமிருந்து பெற்ற கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக அவர் வந்திருந்தபோது சந்தித்தேன். பௌத்தம் குறித்து பல அரிய தகவல்களைக் கூறிய அவர், அங்கு அளித்த கட்டுரையின் படியை எனக்குத் தந்தார். அவருக்கு அக்கட்டுரையை என் ஆய்விற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவு கேட்டு கடிதம் எழுதினேன். அவர் அதற்கு மறுமொழி அனுப்பியிருந்தார்.
தாத்தாவுக்குப் படித்துக் காண்பித்த நிலையிலும், பள்ளிக்காலம் முதல் பொன்னியில் செல்வன் புதினம் படித்துவந்த நிலையிலும் கல்கியின் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டின் தற்காலிகத் தலைப்புகளாக "கல்கியின் பார்த்திபன் கனவு-ஒரு வரலாற்றியல் பார்வை", "கல்கியின் சிவகாமியின் சபதம்-வரலாற்று நோக்கு", "தமிழ்ப்பண்பாட்டில் வரலாற்றுச் சிறப்பு" என்ற தலைப்புகளைக் குறிப்பிட்டு, கடிதம் எழுதினேன். ஆங்கிலத்தில் ஆய்வேடு அளிக்கப்படவேண்டும் என்று அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.
கால தாமதத்தைத் தவிர்ப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்றேன். வரலாற்றுத்துறைத்தலைவர் முனைவர் டி.ஆர்.ராஜேஸ்வரி அவர்களைச் சந்தித்தேன். துறையில் நான் அளித்திருந்த தலைப்புகளைப் பற்றி உரையாடியபோது, கல்கியின் புதினங்கள் தொடர்பாக ஆங்கிலத்தில் ஆய்வேடு அளிப்பது சிரமமானது என்பதை உணர்ந்தேன். தொடர்ந்து கல்கியின் புதினங்களைப் பற்றிய விவாதத்தின்போது கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற இடங்களைப் பற்றிப் பேசினோம். அப்போது நாகப்பட்டின விகாரை என்ற பேச்சு வந்தவுடன் பௌத்தம் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள விரும்பி, "தமிழ்நாட்டில் பௌத்தம்" என்ற தலைப்பினைக் கூறினேன். அப்போது துறைத்தலைவர் ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டிற்கான எல்லை அளவில் சிறியதாக அமைவது சிறந்தது, ஆகவே ஆய்வாளரின் (என்னுடைய) சொந்த ஊர், பகுதியை எல்லையாகக் கொள்ளலாம் என்று கூறினார். "கும்பகோணத்தில் பௌத்தம்", "தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்" என்ற தலைப்புகளை நான் கூறியபோது அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் ("Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District") என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வேட்டினை அளிக்க இசைவு தந்தார்.
1995இல் ஆய்வேட்டினை அளித்து, தொடர்ந்து தலைப்பை சற்றே விரிவாக்கி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற தலைப்பில் 1999இல் ஆய்வேட்டினை அளித்தேன். இரு ஆய்வேட்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையப் பேராசிரியர் முனைவர் க.பாஸ்கரன் அவர்கள் நெறியாளராக இருந்தார். ஆய்வு மேற்கொண்ட காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்விதழான தமிழ்க்கலை (மார்ச்-திசம்பர் 1994) இதழில் என்னுடைய முதல் கட்டுரை வெளியானது.
முனைவர் பட்ட ஆய்வேடானது, சில மாற்றங்களுடன் புது எழுத்து பதிப்பகத்தின் திரு சுகவன முருகன் அவர்களின் முயற்சியால் மிகவும் சிறப்பாக செப்டம்பர் 2022இல் வடிவம் பெற்றது.
1993இல் ஆரம்பித்த பௌத்த ஆய்வு தொடர்பாக இந்த வலைப்பூவிலும், ஆய்விதழ்களிலும், பிற இதழ்களிலும் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 21 புத்தர்+13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு என்ற வகையில் இன்றும் தொடர்கிறது. அண்மையில்கூட பழையாறையில் ஒரு புத்தர் சிலையின் தலையைக் கண்டுபிடித்தோம். இந்த வகையில் நண்பர்கள், ஆர்வலர்கள், குடும்பத்தார் ஒத்துழைப்புடன் ஆய்வு தொடர்கிறது. துணை நிற்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
(ஆவணங்கள் 1997 பகுதி 2/எம்ஃபில் ஆய்வு)
16 ஆகஸ்டு 2023 இரவு மேம்படுத்தப்பட்டது.
Comments
Post a Comment