23ஆவது பௌர்ணமி பெருவிழா
சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் என் வலைத்தளத்தினை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், நான் குறிப்பிட்டுள்ள பெரண்டாக்கோட்டை புத்தரைக் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து, அந்த இடம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தனர். அவர்கள் வரும்போது நானும் அவர்களுடன் வந்து அந்த புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டிருந்தனர். என்னுடைய சொந்தப் பணிகள் காரணமாக நான் வர இயலா நிலையைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் குழுவாக அங்கு சென்று பெரண்டாக்கோட்டையிலுள்ள புத்தரைப் பார்த்து வந்த அனுபவங்களை என்னிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து 3 நவம்பர் 2017இல் அவர்களுடைய சங்கத்தில் நடைபெறவுள்ள 23ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு என் பௌத்த ஆய்வு தொடர்பாக சிறப்புரையாற்றும்படி அழைப்பு விடுத்தனர்.
குறுகிய கால இடைவெளியில் நண்பர்களுக்குத் தெரிவிக்க இயலா நிலையில் நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமே தெரிவித்திருந்தேன். அவர் நிகழ்விற்கு வந்ததோடு அதனைப் பதிவாகத் தன் தளத்தில் படங்களுடன் பதிவிட்டிருந்தார்.
எனக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், உதவி பதிவாளர் – ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முனைவர் திரு B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களை ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்தான் முதன்முதல் தெரியும். தமிழ் வலையுலகில் அவர் எழுதி வரும் முனைவர் ஜம்புலிங்கம், சோழநாட்டில் பௌத்தம் (Buddhism in Chola Country) ஆகிய இரண்டு வலைப்பதிவுகளில், பௌத்தம் பற்றிய கட்டுரைகளை ஆர்வமுடன் படிப்பதில் அவருடனான தொடர்பு ஏற்பட்டது. முதன்முதல் அவரது பௌத்தம் சம்பந்தமான கட்டுரைகளைப் படித்தபோது அவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர் (Buddhist) என்றே நினைத்திருந்தேன். 2014இல் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப் பயிற்சி பட்டறையில்தான் அவர்களை முதன்முதல் நேரில் சந்தித்தேன். அவர் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்ட சைவ சமயத்தவர்.
கூட்டத்திற்கான அழைப்பு
நேற்று முன்தினம், தஞ்சையிலிருந்து ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தனது செல்போனில் ”திருச்சியில் நாளை மாலை (03.11.2017 – வெள்ளிக்கிழமை) திருச்சியில் ஒரு சிறப்புரை கூட்டம். என்னை பேச அழைத்து இருக்கிறார்கள்” என்று விவரம் சொன்னதோடு, அடுத்தநாள் வாட்ஸ்அப்பில் (Whatsapp) எனக்கு அழைப்பும் விடுத்தார். முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களைப் படித்த, திருச்சியிலுள்ள மகாபோதி சங்கத்தினர், தங்களது 23 ஆவது, பவுர்ணமி விழாவில் இவரை சிறப்புரை ஆற்றும்படி அழைத்து இருந்தனர்.
சென்னையில் கடும் மழை, வெள்ளம் என்று ஊடகங்கள், செய்திகள் வாசித்துக் கொண்டு இருந்த நிலையில், திருச்சியில் மழை வருவதும் நிற்பதுமாகவே போக்கு காட்டிக் கொண்டு இருந்தது. இருந்த போதும், கூட்டம் நடைபெறும் BHEL – SCUU சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன் நான் சென்றபோது எனக்குப் பழக்கமான நண்பர்களும் அங்கு இருந்ததில் மகிழ்ச்சி. அங்கே முன்னதாகவே வந்துவிட்ட ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எல்லோருமே புதியவர்கள். மேலும் நாங்கள் இருவருமே இந்த சங்கத்து உறுப்பினர்கள் இல்லை.
அன்றைய கூட்டத்தில் போதி அம்பேத்கர் மற்றும் திரு தங்கசாமி ஆகியோர் வழிகாட்ட, புத்தர் திருவுருவச் சிலைக்கு முன்னர் விளக்கேற்றுதல், புத்த வந்தனம் ஆகியவற்றிற்குப் பிறகு திரு சிவானந்தம் (BHEL) அவர்கள் முனைவர் பற்றி அறிமுகம் செய்திட திரு B.ஜம்புலிங்கம் அவர்கள் தனது சிறப்புரையை செய்தார்.
- தனது எம்ஃபில் (M.Phil) பட்டத்திற்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததையும், முனைவர் (Doctorate) பட்டத்திற்கு சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் சுவைபட சில நிகழ்வுகளோடு சொன்னார்.
- மேலும் 1993இல் தொடங்கி தொடர்ந்து தான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது தனக்கு ஏற்பட்ட, பல அனுபவங்கள் குறித்தும், ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் விவரித்தார்.
- இன்னும், பௌத்த சமய வரலாற்றில் சங்க காலத்தில் பௌத்த காவிரி பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும் சிறப்பான இடத்தை வகித்தமை,
- சோழ நாட்டில் மக்கள், புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைத்து வழிபாடு செய்து வருவது குறித்தும்
- கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பவுத்தம் இருந்ததற்கான சான்று (கல்வெட்டு) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கிறது என்பதனையும்,
- மீசையுடன் கூடிய புத்தர் சிலை மற்றும் தலையில்லாத புத்தர் சிலை பற்றிய தகவல்கள்.
- மேலும், தனது ஆய்வின்போது, சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பலவற்றை மக்கள் புத்தர் என அழைப்பதையும் சுவைபடச் சொன்னார். இருந்த போதும் அருங் காட்சியகத்தில் இருக்கும் சில புத்தர் சிலைகள், தனது களப் பணிகளால் வெளிக் கொணர்ந்து தகவல்கள் தந்திருந்த போதும் தனது பெயரை அங்கு குறிப்பிடவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படச் சொன்னார்.
கூட்டத்தின் முடிவில் திரு தமிழ்தாசன் (BHEL) அவர்கள் நன்றி கூறிட, இனிய இரவு சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திரு செல்வம் (BHEL) அவர்கள் செய்து இருந்தார்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திருச்சி மகாபோதி சங்கம்,
எனது எண்ணங்கள் திரு தமிழ் இளங்கோ வலைப்பூ
-------------------------------------------------------------------------------------------
19 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.
முனைவர் அவர்களின் 100 ஆவது பதிவிற்கு வாழ்த்துகளும் நன்றியும்.
ReplyDelete100-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா.
ReplyDelete100 வது பகிர்வு இலட்சங்களாய் இலட்சிய வீதியில் பயணிக்கட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா..
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநூறு நூறாய் பதிவுகள் தொடரட்டும்
தம=1
உங்களின் பதிவுகள் அதற்கான முயற்சிகள் மிகவும் பாராட்டதக்கது
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDelete100 ஆவது பதிவை இந்ததளத்தில் தொட்டமைக்கு முனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
ReplyDeleteதொடரட்டும் தங்களது பணி.
100-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா
ReplyDelete