பௌத்த சுவடுகளைத் தேடி : களப்பணி

முனைவர் பா.ஜம்புலிங்கம்
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பாக 31.8.2013 அன்று நடைபெற்ற   அருள்திரு ச.இராசநாயகம் சே.ச.அறக்கட்டளைச்சொற்பொழிவின்போது ௌத்த சுவடுகளைத்தேடி என்ற தலைப்பில்        ஆற்றப்பட்ட உரை

 சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வருகின்ற களப்பணியின்போது பலவிதமான அனுபவங்களைப்பெற முடிந்தது. சோழ நாடு என்ற நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆய்வின் களமாக அமைந்தது.

முதலில் இப்பொருண்மை தொடர்பாக எந்த நூல்களைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனை வரவே பிற நண்பர்களுடனும், அறிஞர்களுடனும் விவாதித்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. இத்துறையில் முன்னவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் நூல்களைத் தேடும் முயற்சியில் இறங்கியபோது மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), மீனாட்சி (1979), டி.என். வாசுதேவராவ் (1979), சிவராமலிங்கம் (1997) ஆகியோர் எழுதியுள்ள நூல்களில் சோழ நாட்டு பௌத்தம் தொடர்பான செய்திகளைக் காணமுடிந்தது.  களப்பணியின்போது பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இப்பகுதியினைச் சார்ந்த 16 புத்தர் சிலைகளின் புகைப்படங்களைக் கொண்டுள்ளதைக் காணமுடிந்தது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப்பகுதியில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்பினைக் காணமுடிந்தது. இவை தவிர அவ்வப்போது  பல ஆய்வாளர்கள் ஆங்காங்கே சில புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து வரலாற்றுலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ள விவரங்களும் தொகுக்கப்பட்டன. அன்றாடம் செய்தித்தாளில் இந்த ஆய்வு தொடர்பாக வரும் செய்திகளும் சேர்க்கப்பட்டன. இவ்வாறான ஒரு பின்புலத்தில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் காணப்படும் இடங்கள் பட்டியலிடப்பட்டன.  இப்பட்டியலின் அடிப்படையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

அருங்காட்சியகங்கள்
முதலில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புத்தர் சிலைகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்க தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களுக்குக் களப்பணி மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்த புத்தர் சிலைகளைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சிலையின்கீழ் குறிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்துக் கொள்ளப்பட்டன.

பின்னர் முந்தைய அறிஞர்கள் புத்தர் சிலைகள் இருந்ததாகக் கூறப்படும் இடங்களுக்குக் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 1993இல் தொடங்கப்பட்ட களப்பணி இன்னும் தொடர்கிறது. இவ்வாறான களப்பணியின்போது பெறப்பட்ட சில அனுபவங்கள் மறக்கமுடியாதவையாக உள்ளன. ஒவ்வொரு களப்பணியும் ஒவ்வொரு பாடமாக அமைந்தது. அவ்வாறான அனுபவங்களில் சிலவற்றை இங்கு காண்போம்.

அய்யம்பேட்டை
திரு அய்யம்பேட்டை திரு செல்வராஜ் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டைக்குத் தெற்கே வையச்சேரி கிராமத்தின் குளக்கரையில் சுமார் ஒரு அடி உயரமுள்ள புத்தர் சிலையின் தலை மட்டும் இருந்ததாகக் கூறி புகைப்படத்தை அனுப்பிவைத்திருந்தார். அவர் தந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு அப்பகுதியில் பல முறை களப்பணி மேற்கொண்டும், அருகிலுள்ளோர்களிடம் விசாரித்தும் அந்த புத்தர் சிலையின் தலைப்பகுதியைக் காணமுடியவில்லை. எப்படியும் ஒரு களப்பணியின்போது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலையைப் பார்க்கமுடியாவிட்டாலும், அந்த புகைப்படம் ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்ததை உணர்த்தியது அய்யம்பேட்டையில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியாகும்.

அரியலூர்
அரியலூர் புத்தர், புகைப்படம்: பா. ஜம்புலிங்கம்

பேராசிரியர் இல. தியாகராஜன் அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில் களப்பணி மேற்கொண்டபோதுஅரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது. பின்னர் சில வருடங்கள் கழித்துச் சென்றபோது அச்சிலையை அங்கு காணமுடியவில்லை. அச்சிலை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டதை களப்பணியின்போது அறியமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும களப்பணியின் மூலம்  சிலை இடம் மாற்றம் பெற்றதை அறியமுடிந்தது.


கிள்ளியூர்
உரகபுரம் என்ற தலைப்பிலான 1987இல் வெளியான ஒரு கட்டுரையில் வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள், நன்னிலம் வட்டத்தில் திருப்பாம்புரம் அருகே கிள்ளியூர் என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகவும், இச்சிலை உள்ள இடத்தில் பாம்புரம் நகரத்தைச் சேர்ந்த பௌத்தப்பள்ளி இருந்திருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 1999இல் அவருடன் அங்கு களப்பணி சென்றபோது அச்சிலையைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அறிஞர் கண்டுபிடித்த சிலையை அவருடைய துணையுடன் மறுபடியும் காணும் வாய்ப்பு இக்களப்பணி மூலம் கிடைத்தது. அந்த புத்தரைச் சிவனார் என்று கூறி உள்ளூரில் வழிபாடு நடத்தப்பட்டு வருவதைக் காணமுடிந்தது. கட்டுரையில் வந்த செய்தி ஒரு புத்தரைக் கண்டுபிடிக்க உதவியதை இக்களப்பணி தெளிவுபடுத்தியது. 

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கும்பகோணம் (அமரர்) சேதுராமன் கூறிய செய்தியின் அடிப்படையில் சென்றபோது அக்கல்வெட்டு இருக்கும் இடத்தை அறியமுடியவில்லை. மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுற்றிச்சுற்றி வந்து பல முறை தேடியபோதும் கல்வெட்டு இருக்கும் இடத்தைக் காணமுடியவில்லை. மறுபடியும் அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கல்வெட்டு இருக்கும் இடத்தைத் தெளிவாகக் கூறி கல்வெட்டின் படியையும் கொடுத்து உதவினார்.  அறிஞர்களிடம் தெளிவு பெற்றுப் பின்னர் களப்பணி மேற்கொள்வதன் தேவை கும்பகோணம் களப்பணியின்போது பெற்ற அனுபவமாகும்.

கும்பகோணம் பகவ விநாயகர் கோயில்
கும்பகோணம் பகுதியிலுள்ள புத்தர் சிலைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், மயிலை சீனி வேங்கடசாமி தன் பெளத்தமும் தமிழும் (1940) நூலில், கல்வெட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி கும்பகோணம் என்ற உட்தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்ததைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. "கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டுகள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்". டி.என்.வாசுதேவராவ் (1979) மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்தை அப்படியே கூறியுள்ளார். தமிழ்நாட்டு வரலாறு (1998) நூலில் மயிலை சீனி வேங்கடசாமியை மேற்கோள் காட்டி புத்தர் சிலைகள் உள்ள இடங்களில் ஒன்றாகக் கும்பகோணம் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் சென்று அந்தக் கோயிலில் பார்த்தபோது அச்சிலை இருந்தது. அது புத்தர்  சிலை என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறிய கருத்தை அடிப்படையாக வைத்து ஆய்வியல் நிறைஞர் பதிவேட்டில் பதியப்பட்டது. பின்னர் முனைவர் பட்ட ஆய்விற்காகக் களப்பணி சென்றபோது சுமார் 50 புத்தர் சிலைகளைப் பற்றி அறியமுடிந்தது. அவற்றின்  அமைப்பை வைத்துப் பார்க்கும்போது கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை புத்தர் இல்லை என உறுதியாக உணர முடிந்தது. புத்தருக்கும் இங்கு உள்ள பகவர் சிலைக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை. முந்தைய அறிஞர் கூறிய கருத்திலிருந்து முற்றிலும் மாறாக புதிய கருத்தை வெளிப்படுத்த உதவியது நேரடியாக மேற்கொள்ளப்பட்ட களப்பணியேயாகும். 

கோபிநாதப்பெருமாள்கோயில்
பட்டீஸ்வரம் திருவலஞ்சுழி சாலையில் கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு தமிழ்கூர் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்செய்தியைப் பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தார் அச்சிலையை  நேரில் பார்க்கவேண்டும் என்று கூறி அழைத்துச்சென்றனர். களத்தில் தொலைக்காட்சிக் குழுவினருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது குழுவில் ஒருவர் மிக அருகில் சிதைந்த நிலையில் மற்றொரு புத்தர் சிலை இருப்பதைக் காண்பித்தார். முன்னர் பல முறை அந்த இடத்திற்குச் சென்றபோதும்கூட அருகருகே இரு சிலைகள் இருப்பதைக் காண உடன் வந்த ஒருவர் தெரிவித்ததால் காணமுடிந்தது. ஆய்வாளரைப் போலவே துணைக்கு வருபவர்களும் ஈடுபாட்டோடு இருப்பதன் பயனை இக்களப்பணி உணர்த்தியது.

பெரண்டாக்கோட்டை
பெரண்டாக்கோட்டை புத்தர், புகைப்படம்: பா. ஜம்புலிங்கம்

தொல்லியல் அறிஞர் திரு கி.ஸ்ரீதரன் அவர்கள் தி மெயில் ஆங்கில இதழில் 1978இல் வெளிவந்த புத்தர் புகைப்படத்தை அனுப்பி அச்சிலை தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் பெரண்டாக்கோட்டை என்னுமிடத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். அவர் அனுப்பியிருந்த புகைப்படத்தில் புத்தரின் தலைப்பகுதி மட்டுமே இருந்தது. அவர் கூறிய தகவலின் அடிப்படையில்  களப்பணி மேற்கொண்டபோது அச்சிலையை அங்கு காணமுடிந்தது.  நேரில் சென்றபோது அத்தலைப்பகுதியைக் காணமுடிந்தது. உள்ளூர் மக்கள் அந்த புத்தரின் தலையைச் சாம்பான் எனக் கூறி வழிபட்டு வருகிற்னர். அய்யம்பேட்டை வையச்சேரியில் புத்தரின் தலையைக் காணமுடியாவிட்டாலும், பெரண்டாக்கோட்டையில் சிலையைக் காணமுடிந்தது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய பத்திரிக்கைச் செய்தி இவ்வாறாக களப்பணியின்போது உதவியது. 

பெருமத்தூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூரில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு களப்பணி மேற்கொள்ளப்பட்டபோது 24" உயரமுள்ள சமண தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த அந்தச் சமண சிலையினை உள்ளூரில் புத்தர் என்று கூறிவருவதைக் காணமுடிந்தது. மற்ற சிலையிலிருந்து சற்று மாறுபட்ட கலையமைப்பில் உள்ள அந்தச் சமண சிலையைப் பல அறிஞர்கள் புத்தர் என்று கூறுகின்றனர். அச்சிலைக்கு வழிபாடு எதுவும் நடத்தப்படவில்லை.களப்பணி மூலமாகவே அச்சிலை சமணர் என்பதை உறுதியாகக் கூறமுடிந்தது. 

பேட்டவாய்த்தலை

பேட்டவாய்த்தலை புத்தர், புகைப்படம்: பா. ஜம்புலிங்கம்

களப்பணியின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய செய்திகளில் ஒன்று பேட்டவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய செய்தியின் அடிப்படையில் பேட்டவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சிலையைப் பார்க்க சற்றொப்ப சமண தீர்த்தங்கரரைப் போலவே இருக்கும். சிலையைப் பார்த்துவிட்டு, திருச்சி அருங்காட்சியகக் காப்பாட்சியருக்கு இவ்வாறாக ஒரு சிலை இருக்கும் விவரம்  அஞ்சலட்டை வழியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.  அவருடைய சீரிய முயற்சியால் அந்தச் சிலை திருச்சி அருங்காட்சியகத்தில் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டது. பல வருடங்களுக்குப் பின் சந்தித்தபோது அவர், பேட்டவாய்த்தலை புத்தர் திருச்சி வருவதற்குக் காரணம் அந்த அஞ்சலட்டையே என்று கூறினார். செய்தியை உடன் பகிர்ந்துகொள்வதன் பயனை இக்களப்பணி தெளிவுபடுத்தியது.

ஜெயங்கொண்டம்
மயிலை சீனி வேங்கடசாமி தொடங்கி பல அறிஞர்கள் ஜெயங்கொண்டத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஒரு புத்தரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சிலையைப் பார்க்கச் சென்றபோது ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன்  உதவியாக இருந்தார். புத்தர் சிலை உயரமான ஒரு மேடையின்மீது வைக்கப்பட்டிருந்தது. புத்தரைப் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது அவர் மற்றொரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறி மேல வெள்ளாளத்தெரு-கோனார் தெரு சந்திப்பிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. களப்பணியின்போது புகைப்படக் கருவியை எடுத்துச்செல்ல மறந்துவிட்டதால் அந்தச் சமண தீர்த்தங்கரரைப் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்தது. 20" உயரமுள்ள அச்சிற்பத்தில் இருந்த முக்குடை மற்றும் பிற கூறுகளின் வழியாக அச்சிலை சமண தீர்த்தங்கரர் என முடிவு செய்யப்பட்டது. அடுத்த பயணத்தின்போது புகைப்படம் எடுக்கத் தயாராகச் சென்றபோது ஒரு பெரியஅதிர்ச்சி காத்திருந்தது. முன்னர் அங்கிருந்த  சமண தீர்த்தங்கரர் சிலை அவ்விடத்தில் காணப்படவில்லை. அருகிலிருந்தவர்களை விசாரித்தபோது அச்சிலை திருட்டுப்போய்விட்டதாகக் கூறி வேதனைப்பட்டனர். முந்தைய களப்பணியின்போது புகைப்படக்கருவியை எடுத்துச்செல்லாமல் சென்றதால் ஒரு அழகான சமண தீர்த்தங்கரர் சிலையைப் பற்றிய பதிவினை மேற்கொள்ள இயலாமல் போனது.
இவ்வாறாக ஒவ்வொரு களப்பணியின்போது ஒவ்வொரு அனுபவத்தைப் பெற முடிகிறது. நாளிதழ், ஆய்விதழ், நூல்கள் ஆகியவற்றில் வந்துள்ள செய்திகள் களப்பணிக்குத் துணை நிற்கின்றன. சரியான புரிதலும், தெளிவான ஒப்புநோக்கும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் களப்பணியும் ஓர் ஆய்வினை நல்ல நிலைக்கு எடுததுச்செல்லும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். 1940இல் வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி சோழ நாட்டில் 10 புத்தர் சிலைகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2013வரை 65 சிலைகளைக் கண்டதற்குக் காரணம் இவ்வாறாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் களப்பணியும் அவை தரும் அனுபவங்களுமேயாகும்.

தஞ்சாவூர் காவேரி சுழற்சங்கம் சார்பாக 14.9.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றப்பட்டது. 
புகைப்படம் : திரு செல்வம்

In search of imprints of Buddha: Field study
Every field work taught me a lesson. I deal with such type of lessons which I learnt during the past two decades. English version of the article will appear on 15th of this month.

Comments

  1. Dear Jambu sir,Congratulations.I've come across so many research scholars in this field,but only a few like you and Pulavar Raju sir,remember the persons behind the scene.Thank you sir.

    ReplyDelete
  2. கள ஆய்வுப்பணி என்பது சாதரணமானதல்ல என்று தங்கள் உரையிலிருந்து தெரிகிறது. அதிலும் தாங்கள் எடுத்துக்கொண்ட பொருள் அபூர்வமானதன்றோ?

    ReplyDelete
  3. பௌத்தச் சுவடுகளைத் தேடி, தங்களின் அயராத, தளராத களப்பணி தொடர வாழ்த்துகிறேன் ஐயா.

    ReplyDelete
  4. தங்களின் அயராத களப்பணி தொடர வாழ்த்துகிறேன் ஐயா

    ReplyDelete
  5. நன்றி ஐயா.
    உங்களது பதிவின் இணைப்பை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் பதிவு விபரங்களை திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் பதிவில் பார்த்தேன். உங்கள் பதிவை படித்து அவ்வப்போது பகிர்கிறேன்.
    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment