முதல்வர் மில்லர் அறக்கட்டளைச் சொற்பொழிவு 9 மார்ச் 2022

9 மார்ச் 2022இல்  சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடத்திய முதல்வர் மில்லர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்துகொண்டு பொழிவினை நிகழ்த்தினேன். இணையவழி நடைபெற்ற இப்பொழிவின் சுருக்கத்தைப் பகிர்கிறேன்.  

சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் 10 முதல் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அவற்றிலும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகளே அதிகம். நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவே.

புத்தர் சிலைகள் தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களிலும், பொதுவிடங்களிலும் உள்ளன. சிலைகளில் சில தலையின்றி உள்ளன. சிலவற்றின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. சில இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. புத்தரைப் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கின்றனர்.

புத்தமங்கலத்திலும், பெருஞ்சேரியிலும் புத்தர் கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் புத்தர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

பூம்புகாரில் விகாரையின் எச்சங்கள் இன்னும் உள்ளன.  நாகப்பட்டின விகாரை இருந்ததற்கான எச்சத்தைக் காணமுடியவில்லை.

நாகப்பட்டினத்தில் விகாரை இருந்ததாகக் கூறப்படுகின்ற இடத்திலும், அருகிலும் 350க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டு இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், உலகின் பல அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  கடந்த 20 ஆண்டுளில் இப்பகுதியில் பல இடங்களில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் அதன் அமைப்பினையொத்த திருமேனிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர், தாராசுரம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் கோயில்களில் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் கோயிலில் புத்தரின் ஓவியம் உள்ளது.

இச்சான்றுகள் பௌத்தம் பல்வேறு காலகட்டங்களில் செழித்திருந்ததை உணர்த்தும் சான்றுகளாக இருப்பதோடு, பௌத்தம் இன்னும் பரவலாக இருப்பதை உணர்த்துகின்றன. 

1993 முதல் தொடங்கி நடத்தப்பெறுகின்ற ஆய்வின்போது பல இடங்களில் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய களப்பணியில் கண்ட பல சிலைகள் காணாமல் போனதையும் காணமுடிந்தது. இருக்கின்ற சிலைகளைப் பாதுகாத்துவைப்பதே வரலாற்றுக்கும்,  வரும் சந்ததியினருக்கும் செய்யும் பேருதவியாக இருக்கும்.



(அழைப்பிதழில் 2021 என்றுள்ளது)



துறைத்தலைவர் (பொ) முனைவர் எம்.வெங்கடாஜலபதி உடன்

10 மார்ச் 2022இல் நடைபெற்ற பணிப்பட்டறையில் (RUSA 2.0, Developing an Information system to Optimise Religious Tourism in Tamil Nadu, Designing an Information System, 10-11 March 2022) கலந்துகொண்டு பௌத்தம் தொடர்பாகக்  கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 




குழுத்தலைவர் பேரா.வி.சந்திரகுமார், 
ஆய்வுத்திட்ட உதவியாளர் முனைவர் ரா.புருஷோத்தமன் உடன்

வாய்ப்பினைத் தந்த சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைக்கும், குழுத்தலைவர் உள்ளிட்டோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

1 ஏப்ரல் 2022 மதியம் மேம்படுத்தப்பட்டது. 

Comments

  1. தங்களது சமூகப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களது சிறப்பான பணி தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  3. அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. தங்கள் பணிமேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மரியாதைக்குரிய பௌத்த ஆய்வாளர் முனைவர் B. ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு என் மெய்நிகர் வணக்கம்.

    முதன் முதலில் பௌத்தம் கள ஆய்வுப் பற்றி இணையத்தில் தேடும்போது பௌத்தத்திற்க்கான உங்கள் பங்களிப்பு தான் என் கண்ணில் பட்டது. புத்தர் சிலைகளைப் பற்றி செய்தித்தாளில் வெளியான பிரசுரங்கள், சில ஆய்வு இதழில் வெளியான கட்டுரைகள், நீங்கள் பல இடங்களில் பேசிய யூடூப்பில் காணொளிகள் இவைகள் தான் எனக்கு பௌத்த கள ஆய்வில் இயங்க ஒரு நம்பிக்கையைக் கொடு(த்தது)க்கிறது.

    பல்வேறு தகவல்கள், உங்கள் கள அனுபவங்கள் எனக்கு எல்லாம் ஒரு முன்னோடி; மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவைகள் ஒரு புறம் இருக்கட்டும்.

    உங்களை எல்லாம் நேரில் பார்ப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
    நீங்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்தது. தத்துவத் துறையில் முதல்வர் மில்லர் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஆற்றியது. ரூசா 2.0 ஆய்வுத்திட்ட பயிற்சிப்பட்டறையில் பௌத்தத் துறை வல்லுனராக வந்து உரையாற்றி, பல்லேறு விடயங்கள் பகிர்ந்துக் கொண்டது; உணவு உண்டது பல்வேறு வகையில் நீங்க தனிப்பட்ட முறையில் ஆய்வு சம்பந்தமாக ஊக்கம் தந்தது எல்லாம் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது....

    உங்கள் பங்களிப்பு தமிழ் சமூகத்திற்க்கு தேவை.

    தொடர்ந்து என் எண்ணங்களைப் பகிர்வேன்....

    நன்றி!

    இப்படிக்கு
    முனைவர் இரா. புருஷோத்தமன்
    ஆய்வுத்திட்ட உதவியாளர்
    சென்னைப் பல்கலைக்கழகம்

    ReplyDelete

Post a Comment