சோழ நாட்டில் புத்தர் வழிபாடு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தரைப் பலவாறான பெயர்களில் மக்கள் அழைப்பதோடு, புத்தர் மீது பல நம்பிக்கைகளையும் கொண்டு வழிபடுகின்றனர். திருச்சி (ஆயிரவேலி அயிலூர், பேட்டைவாய்த்தலை, மங்கலம்) திருவாரூர் (இடும்பவனம், உள்ளிக்கோட்டை, திருநாட்டியத்தான்குடி, திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி), பெரம்பலூர் (ஒகளூர், பரவாய்), புதுக்கோட்டை (கரூர்), நாகப்பட்டினம் (கிராந்தி, புத்தமங்கலம், புஷ்பவனம்), மயிலாடுதுறை (குத்தாலம், பெருஞ்சேரி), அரியலூர் (குழுமூர், பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்கிரமங்கலம்), தஞ்சாவூர் (பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம்) ஆகிய மாவட்டங்களில் அவ்வாறான முறைகளைக் காணமுடிகிறது. இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகள் புத்தர் கோயில்களிலும் (புத்தமங்கலம், பெருஞ்சேரி), பிற கோயில்களிலும் (மங்கலம், மன்னார்குடி, கரூர், பட்டீஸ்வரம், மானம்பாடி), வீட்டின் அருகிலும் (ஆயிரவேலி அயிலூர், திருப்பாம்புரம், புதூர், குழ...