Friday, 1 December 2017

அகிம்சை நடை : 19 நவம்பர் 2017

2017 அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு "தஞ்சாவூர்ப் பகுதியிலுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்ப்பதற்காக சமண அமைப்பினர் சென்னையிலிருந்து 5 நவம்பர் 2017 அன்று வருகின்றார்கள். திரு தில்லை கோவிந்தராஜனிடம் இதுபற்றிக் கூறியுள்ளேன். நாமும் அவர்களோடு கலந்துகொள்வோம்" என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூவரும் செல்வதாகத் திட்டமிட்டோம். மழையின் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்தோம். 19 நவம்பர் 2017இல் இப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதை திரு அப்பாண்டைராஜன் உறுதி செய்தார். அவருடைய தலைமையில் 19 நவம்பர் 2017 காலை 6.45 மணியளவில் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் தெற்கு வீதியிலிருந்து வேனில் கிளம்பினோம். முன்னர் வருவதாக இருந்த மணி.மாறனும், தில்லை கோவிந்தராஜனும் விடுப்பு எடுக்க இயலா நிலை மற்றும் அவசரப்பணி காரணமாக வர இயலாமல் போனது.  
பயணத்தின்போது அவர் அகிம்சை நடையைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அவர் கூறிய பின்னர் அகிம்சை நடை தொடர்பான விவரங்களை முகநூல் பக்கங்களிலிருந்தும், குழு உறுப்பினர்களிடமிருந்தும் அறிந்தேன். சிலைகளைப் பார்ப்பதற்கு முன்பாக அகிம்சை நடையைப் பற்றி முதலில் அறிவோம். 

அகிம்சை நடையின் நோக்கமும் செயற்திட்டங்களும் 
தொன்மை வாய்ந்த மரபுச்சின்னங்களை தொன்மை மாறாது பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் உலகிற்கு வெளிப்படுத்துதல் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது. இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை உண்டாக்குதல், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரின் பார்வைக்கு வராத, பட்டியலிடப்படாத சமண தொன்மை மரபுச்சின்னங்களை பட்டியலிடச்செய்தல், பாதுகாப்பிற்குக் கொண்டுவரல், மரபுச்சின்னங்கள் உள்ள இடங்களில் அகிம்சை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், பள்ளி கல்லூரிகளில் விளம்பரப்படுததுதல், அகிம்சை நெறியைப் பரப்புதல் உள்ளிட்ட பல அரிய செயற்திட்டங்களை அகிம்சை நடையினர் மேற்கொண்டுவருகின்றனர்.     

47ஆவது அகிம்சை நடை
அந்த வகையில் இவ்வாறாக இதுவரை 46 நடை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது 47ஆவது அகிம்சை நடை என்றும் தெரிவித்தனர். சுரைக்குடிப்பட்டி, ஒரத்தூர், நாட்டாணி ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காப்பாற்றி பாதுகாப்பது இந்நடையின் நோக்கமாகும்.   
5 நவம்பர் 2017 திட்டமிடப்பட்டதற்கான அறிவிப்பு

சுரைக்குடிப்பட்டி (2010இல் திரு. தில்லை கோவிந்தராஜனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது) 
முதலில் சுரைக்குடிப்பட்டி சென்றடைந்தோம். அங்கு நாங்கள் சென்றபோது சென்னையிலிருந்து வந்திருந்த அகிம்சை நடை பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் கண்டோம். முன்பு நான் சந்தித்த திரு கனக.அஜிதாஸ், திரு ஸ்ரீதரன் அப்பண்டைராஜ் ஆகியோரையும், குழுமூர் புத்தர் சிலை கண்டுபிடிப்பின்போது அறிமுகமான திரு ம.செல்வபாண்டியன், முகநூலில் அறிமுகமான திரு தனஞ்செயன் உள்ளிட்டோரையும் கண்டேன். பல புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கிருந்த கோயிலில் காலை உணவு உண்டபின் அந்த ஊரைச் சுற்றி விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. சமண அறக்கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டு, பண்பாட்டைப் பாதுகாக்கவேண்டியது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குகின்ற வாசகங்களை உறுப்பினர்கள் அனைவரும் கூற ஊரின் வீதிகளில் சுற்றிவந்து நிறைவு செய்தோம். 

சமணப்பெருமக்கள், அறிஞர்கள், உள்ளூர் மக்கள், குழந்தைகள் பேரணியில் கலந்துகொண்டனர். இடத்திற்கு வயல்வெளியில் சுமார் 2 கிமீ நடந்து சென்று சிலை இருக்கும் இடத்தை அடைந்தோம். வெயிலிலும் அனைவரும் ஆர்வமாக நடந்துவந்தனர். 2010இல் திரு தில்லை கோவிந்தராஜனுடன் வந்தபோது இவ்வளவு தூரம் நாங்கள் நடந்ததாக நினைவில்லை. அப்போது அங்கிருந்த அய்யனார் கோயிலில் இருந்த சிலை, தற்போது அக்கோயில் புதிதாகக் கட்டப்படவுள்ள நிலையில், அருகிலிருந்த குளத்தருகே இடம் மாறியிருந்தது. 
இச்சிலையுடன் சண்டேசர், தவ்வை, மாயோன், தட்சிணாமூர்த்தி, ஆகிய சிலைகளும் உள்ளன. அருகே தனியாக கருடாழ்வாரும் உள்ளார். சமண தீர்த்தங்கரர் சிலையை முதலில் பார்த்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். திரு செல்வபாண்டியன் சிற்பங்களின் கூறுகளை எடுத்துரைத்தார். வந்திருந்தோர் வழிபாடு செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் இச்சிலையைப் பார்த்த மன நிறைவில் குழுவினருடன் தொடர்ந்து சென்றேன். 

அங்கிருந்த அம்மன் கோயிலில் பொறுப்பாளர்களும், ஊர்ப்பெருமக்களும் சமணர் சிலையை அமைப்பது தொடர்பாக விவாதித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவிகள் ஆவலோடு அவற்றை வாங்கிச்சென்றனர். முக்கிய பிரமுகர்களுக்கு முனைவர் த.ரமேஷ் எழுதியுள்ள நடுநாட்டில் சமணம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்நூலின் படியை பெறும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.நாட்டாணி (2015இல் திரு. மணி.மாறனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது) 
அடுத்து நாட்டாணிக்குப் பயணித்தோம். 2015இல் திரு மணி.மாறனுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அதிக சிரமங்களுக்கிடையே புதர்களையும், முள் காட்டையும் கடந்து பார்த்த சிலை இப்போது இடம் மாறியிருந்தது. அனைவரும் எளிதில் பார்ப்பதற்கு வசதியாக இந்த சமண தீர்த்தங்கரரை தற்போது அங்கேயுள்ள அம்மன் கோயில் அருகே பாதுகாப்பாக வைத்துள்ளனர். உடன் வந்த உறுப்பினர்கள் அந்த சிலையைப் பார்க்க ஆவலாக உடன் வந்தனர். அவர்கள் அச்சிலைக்கு வழிபாடு நடத்தினர். அச்சிலையினை உரிய இடத்தில் வைத்துப் பாதுகாப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து விவாதித்தனர். வந்திருந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பும்போது மழைத்தூறல் ஆரம்பித்தது. 


ஒரத்தூர் (2011இல் திரு தில்லை கோவிந்தராஜன் குழுவினரோடு மேற்கொண்ட களப்பணியில் பார்க்கப்பட்டது)
நாட்டாணியிலிருந்து பயண நிறைவு இடமான ஒரத்தூர் சென்றோம். 2011இல் குளத்தின் கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் நாங்கள் பார்த்த இந்த சமண தீர்த்தங்கரர் அங்கு காணப்படவில்லை. 
டிசம்பர் 2011இல் சென்றபோது
அந்த மரம் தனியாக நின்றுகொண்டிருந்தது. ஒரத்தூரில் இறங்கியபோது மழை தூறல் ஆரம்பித்தது. உடன் வந்த ஆர்வலர்களுக்கும் அகிம்சை நடை உறுப்பினர்களும் இந்த மழை ஒரு பொருட்டாகவே அமையவில்லை.

விசாரித்தபோது அரச மரத்தின் அடியிலிருந்த சிலை அருகிலிருந்த குளத்தில் போடப்பட்டிருந்ததாகவும், 2014 வாக்கில் இந்த தீர்த்தங்கரரை மறுபடியும் குளத்தில் இறங்கி வெளியில் எடுத்து வைத்ததாகவும் கூறினர். பாதுகாப்பிற்காக அருகிலுள்ள மற்றொரு அரச மரத்தின் கீழ் வைத்துள்ளனர். அங்கு சென்று தீர்த்தங்கரரைப் பார்த்தோம். அகிம்சை நடை பெருமக்கள் பிற சமண தீர்த்தங்கரருக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தியதைப் போலவே இங்கும் நடத்தினர். ஊரிலுள்ள பெரியவர்கள் இச்சிலையைப் பாதுகாப்பாக அமைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி, அவ்வாறு அமைக்க உதவுவதாகத் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் அங்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டில் முன்னட்டையில் பகவான் மகாவீரரைப் பற்றிய குறிப்பும், பின்னட்டையில் அகிம்சை நடையின் நோக்கமும், செயற்திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.  

ஊர் பெருமக்களின் உரையைத் தொடர்ந்து பயணம் இனிதாக நிறைவுற்றது. நிறைவு நிலையில் பஞ்ச ஸ்தோத்திரம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அடுத்த அகிம்சை நடை ஆர்ப்பாக்கம் என்று திரு தனஞ்ஜெயன் தெரிவித்தார். நிறைவாக திரு அப்பாண்டைராஜன் நன்றி கூறினார். அங்கிருந்து அனைவரும் தத்தம் ஊர்திகளில் மன நிறைவாக, பிரியா விடை தந்து அங்கிருந்து கிளம்பினோம்.

மறக்க முடியாத அனுபவம்
முதன்முதலாக இந்த அகிம்சை நடைப்பயணத்தில் கலந்துகொண்டது எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்திருந்த உறுப்பினர்களின் ஈடுபாடும், ஆர்வமும், தளரா முயற்சியும் என்னை வியக்க வைத்தன. ஆங்காங்கே மழைத்தூறல் இருந்தபோதிலும் வந்திருந்த குழந்தைகள் உட்பட யாரிடமும் எவ்வித சோர்வோ காணப்படவில்லை. பயணத்தின் தொடக்கத்தில் இருந்த ஆர்வத்தினை நிறைவு வரை அப்படியே காணமுடிந்தது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கிய முறை நாமும் ஒரு பள்ளி மாணவராக இருந்திருக்கக்கூடாதோ என்று எண்ண வைத்தது. ஆங்காங்கே கூட்டம் நடத்தப்பட்டபோது அனைவரும் ஆர்வமாக இருந்து பொறுமை காத்தனர். அனைத்திற்கும் மேலாக இந்த அகிம்சை நடை வருவதற்கு முன்பாகவே முக்கிய பொறுப்பாளர்கள் இந்த சிலைகளையும் முன்கூட்டியே வந்து பார்த்து, வரும் வழியைத் தெளிவாகப் பார்த்து பிற உறுப்பினர்களுக்குத் தெரிவித்த விதம் பாராட்டும் வகையில் இருந்தது.

களப்பணியில் பார்த்த சமண தீர்த்தங்கரர் சிலைகள் 
கடந்த 25 ஆண்டு களப்பணியின்போது கங்கைகொண்ட சோழபுரம், காரியாகுடி, கோட்டைமேடு, பெருமாத்ர், செங்கங்காடு, தஞ்சாவூர், அடஞ்சூர், செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, பஞ்சநதிக்குளம், தோலி, கவிநாடு, நாட்டாணி, ஜாம்பவானோடை,  நாகப்பட்டினம், சிராங்குடிபுலியூர், வைப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை தனியாகவும், பிற நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் பார்த்துள்ளேன் என்பதை அகிம்சை நடைப் பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விழைகின்றேன். இவற்றில் பல சிலைகள் தற்போது காணப்படவில்லை. இவற்றைப் பற்றி என் வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அரிய பணியை மேற்கொண்டுவருகின்ற அகிம்சை நடை பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகிம்சை நடையில் நான் கலந்துகொள்ள வாய்ப்பளித்த பேருள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

நாங்கள் பார்த்த, கண்டுபிடித்த சமணர் சிலைகளைப் பற்றிய பதிவுகளை பின்வரும்
இணைப்புகளில் காணலாம்.
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள், 20 ஆகஸ்டு 2011
சமண சுவட்டைத்தேடி : திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், 20 நவம்பர் 2011
சமண சுவட்டைத்தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள், 10 டிசம்பர் 2011
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமணதீர்த்தங்கரர் சிற்பங்கள்(1993-2003), 1 மே2012
பௌத்த சுவட்டைத் தேடி : நாட்டாணி,  1 ஏப்ரல் 2015உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
Charles Allen எழுதியுள்ள Coromandel: A Personal History of South India என்ற நூலில் (Little Brown Book Group, London, 2017) 1993 முதல் நான் மேற்கொண்டுவருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வு, கண்டிரமாணிக்கம் மற்றும் கிராந்தியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, 60க்கு மேற்பட்ட புத்தர் சிலைகள் இக்காலகட்டத்தில் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன. இந்நூலில் என் முனைவர் பட்ட ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

11 ஏப்ரல் 2018இல் மேம்படுத்தப்பட்டது

Saturday, 18 November 2017

திருச்சி மகாபோதி பௌத்த சங்கம் : 3 நவம்பர் 2017 : சிறப்புரை

சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் 100ஆவது பதிவு
எழுத்திற்குத் துணைநிற்கும் வலைப்பதிவர்கள், நண்பர்கள், உறவினர்கள், 
ஊடகத்துறை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் என் வலைத்தளத்தினை தொடர்ந்து வாசித்து வருவதாகவும், நான் குறிப்பிட்டுள்ள பெரண்டாக்கோட்டை புத்தரைக் காணவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து, அந்த இடம் இருக்கும் இடத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தனர். அவர்கள் வரும்போது நானும் அவர்களுடன் வந்து அந்த புத்தர் சிலையைப் பார்க்கவேண்டும் என்றும் கேட்டிருந்தனர். என்னுடைய சொந்தப் பணிகள் காரணமாக நான் வர இயலா நிலையைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் குழுவாக அங்கு சென்று பெரண்டாக்கோட்டையிலுள்ள புத்தரைப் பார்த்து வந்த அனுபவங்களை என்னிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுடைய சங்கத்தில் நடைபெறவுள்ள 23ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு என் பௌத்த ஆய்வு தொடர்பாக சிறப்புரையாற்றும்படி அழைப்பு விடுத்தனர். 
குறுகிய கால இடைவெளியில் நண்பர்களுக்குத் தெரிவிக்க இயலா நிலையில் நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் மட்டுமே தெரிவித்திருந்தேன். அவர் நிகழ்விற்கு வந்ததோடு அதனைப் பதிவாகத் தன் தளத்திலும் பதிவிட்டிருந்தார். அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.    


3 நவம்பர் 2017இல் திருச்சி மகாபோதி பௌத்த சங்கத்தில் நடைபெற்ற 
23 ஆவது பௌர்ணமிப் பெருவிழாவில் கலந்துகொண்டு நான் ஆற்றிய சிறப்புரையை திரு தமிழ் இளங்கோ அவர்கள் எனது எண்ணங்கள் என்ற தன் தளத்தில் பதிந்துள்ளார். 
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

எனக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில், உதவி பதிவாளர் – ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, முனைவர் திரு B.ஜம்புலிங்கம் அய்யா அவர்களை ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்தான் முதன்முதல் தெரியும். தமிழ் வலையுலகில் அவர் எழுதி வரும்http://drbjambulingam.blogspot.com முனைவர் ஜம்புலிங்கம் மற்றும் http://ponnibuddha.blogspot.com சோழநாட்டில் பௌத்தம் (Buddhism in Chola Country) ஆகிய இரண்டு வலைப்பதிவுகளில், பௌத்தம் பற்றிய கட்டுரைகளை ஆர்வமுடன் படிப்பதில் அவருடனான தொடர்பு ஏற்பட்டது. முதன்முதல் அவரது பௌத்தம் சம்பந்தமான கட்டுரைகளைப் படித்தபோது அவர் புத்தமதத்தைச் சேர்ந்தவர் (Buddhist) என்றே நினைத்திருந்தேன். 2014இல் புதுக்கோட்டையில் நடந்த இணையத் தமிழ்ப் பயிற்சி பட்டறையில்தான் அவர்களை முதன்முதல் நேரில் சந்தித்தேன். அவர் பௌத்தம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்ட சைவசமயத்தவர். 

கூட்டத்திற்கான அழைப்பு
நேற்று முன்தினம், தஞ்சையிலிருந்து ஜம்புலிங்கம் அய்யா அவர்கள், தனது செல்போனில் ”திருச்சியில் நாளை மாலை (03.11.17 – வெள்ளிக்கிழமை) திருச்சியில் ஒரு சிறப்புரை கூட்டம். என்னை பேச அழைத்து இருக்கிறார்கள்” என்று விவரம் சொன்னதோடு, அடுத்தநாள்  வாட்ஸ்அப்பில் (Whatsapp) எனக்கு அழைப்பும் விடுத்தார். முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களின் பௌத்த ஆய்வு தொடர்பான கட்டுரைகள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களைப் படித்த, திருச்சியிலுள்ள மகாபோதி சங்கத்தினர், தங்களது 23 ஆவது, பவுர்ணமி விழாவில் இவரை சிறப்புரை ஆற்றும்படி அழைத்து இருந்தனர். 

கூட்டம் துவங்குவதற்கு முன்னர் 

சென்னையில் கடும் மழை, வெள்ளம் என்று ஊடகங்கள், செய்திகள் வாசித்துக் கொண்டு இருந்த நிலையில், திருச்சியில் மழை வருவதும் நிற்பதுமாகவே போக்கு காட்டிக் கொண்டு இருந்தது. இருந்த போதும், கூட்டம் நடைபெறும் BHEL – SCUU சங்க அலுவலகக் கட்டிடத்திற்கு குறித்த நேரத்திற்கு சென்று விட்டேன் நான் சென்றபோது எனக்குப் பழக்கமான நண்பர்களும் அங்கு இருந்ததில் மகிழ்ச்சி. அங்கே முன்னதாகவே வந்துவிட்ட ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு எல்லோருமே புதியவர்கள். மேலும் நாங்கள் இருவருமே இந்த சங்கத்து உறுப்பினர்கள் இல்லை.

கூட்டம் துவங்கும் முன் எடுத்த படங்கள் (கீழே)
  


முனைவரின் சிறப்புரை

 அன்றைய கூட்டத்தில் போதி அம்பேத்கர் மற்றும் திரு தங்கசாமி ஆகியோர் வழிகாட்ட, புத்தர் திருவுருவச் சிலைக்கு முன்னர் விளக்கேற்றுதல், புத்த வந்தனம் ஆகியவற்றிற்குப் பிறகு திரு சிவானந்தம் (BHEL) அவர்கள் முனைவர் பற்றி அறிமுகம் செய்திட திரு B.ஜம்புலிங்கம் அவர்கள் தனது சிறப்புரையை செய்தார்.

 

தனது எம்ஃபில் (M.Phil) பட்டத்திற்கு, ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்ததையும், முனைவர் (Doctorate) பட்டத்திற்கு ”சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் சுவைபட சில நிகழ்வுகளோடு சொன்னார்.
மேலும் 1993இல் தொடங்கி தொடர்ந்து தான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது தனக்கு ஏற்பட்ட, பல அனுபவங்கள் குறித்தும், ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் விவரித்தார். 
இன்னும், 
பௌத்த சமய வரலாற்றில்  சங்க காலத்தில் பௌத்த காவிரி பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும்  சிறப்பான இடத்தை வகித்தமை,
சோழ நாட்டில் மக்கள், புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைத்து வழிபாடு செய்து வருவது குறித்தும்
கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பவுத்தம் இருந்ததற்கான சான்று (கல்வெட்டு) கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருக்கிறது என்பதனையும்,
மீசையுடன் கூடிய புத்தர் சிலை மற்றும் தலையில்லாத புத்தர் சிலை பற்றிய தகவல்கள்.
மேலும், தனது ஆய்வின்போது, சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் பலவற்றை மக்கள் புத்தர் என அழைப்பதையும் சுவைபடச் சொன்னார். இருந்த போதும் அருங் காட்சியகத்தில் இருக்கும் சில புத்தர் சிலைகள், தனது களப் பணிகளால் வெளிக் கொணர்ந்து தகவல்கள் தந்திருந்த போதும் தனது பெயரை அங்கு குறிப்பிடவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படச் சொன்னார்.
கூட்டத்தின் முடிவில் திரு தமிழ்தாசன் (BHEL) அவர்கள் நன்றி கூறிட, இனிய இரவு சிற்றுண்டிக்குப் பிறகு விழா இனிதே முடிந்தது, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  திரு செல்வம் (BHEL) அவர்கள் செய்து இருந்தார்.   

Wednesday, 1 November 2017

மீண்டும் கவிநாடு சமணர்

அக்டோபர் 2013இல் புதுக்கோட்டை அருகே சமணர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முனைவர் சந்திரபோஸ் அவர்கள் பார்க்கச் சென்றபோது தலையுடன் இருந்த சிலை, சில நாள்கள் கழித்து அவரோடு நான் சென்றபோது தலையில்லாமல் இருந்தது. அந்த சிலை புத்தர் சிலை என்று கூறப்பட்டு, பின்னர் களப்பணியின்போது சமண தீர்த்தங்கரர் என்று உறுதி செய்யப்பட்டது. அந்த சிலையின் கண்டுபிடிப்பு தொடர்பான அனுபவங்களை பௌத்த சுவட்டைத் தேடி : கவிநாடு என்ற தலைப்பில் முன்னர் வாசித்துள்ளோம். 
2013இல் கவிநாடு சமணர் சிலையுடன்,
புகைப்படம் நன்றி: முனைவர் சந்திரபோஸ்

முதன்முதலாக அக்டோபர் 2013இல் கண்டுபிடிக்கப்பட்டபோது 
நாளிதழ்களில் வந்த செய்திகள்
(தினமணி, தி இந்து, தினத்தந்தி, தினகரன், 
Times of India, The Hindu, The New Indian Express)

 

1 அக்டோபர் 2017 அன்று  அச்சிலையின் தலைப்பகுதி புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை திரு கஸ்தூரிரங்கன் அவர்களின் முகநூல் பதிவு வழியாக அறிந்தேன். தொலைபேசிவழி தொடர்பு கொண்டு அவருக்கும் மரபு நடை குழுவினருக்கும் நன்றி தெரிவித்தேன்.  தொடர்ந்து முக நூலிலும் பதிவிட்டேன். 

திரு கஸ்தூரி ரங்கன் முகநூல் பதிவு 30 செப்டம்பர் 2017
இச்சிலை, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது போல செய்தி வெளியாகியிருந்தது. செய்தி நறுக்குகளை முகநூல் பக்கங்களிலும் காணமுடிந்தது. முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பற்றிய விவரங்களோ, மேற்கோளோ இவற்றில் காணப்படவில்லை.

அக்டோபர் 2017இல் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த செய்திகள்
(தி இந்து, புதிய தலைமுறை, தினகரன், தினமணி, Indian Express)

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் சிதைந்த நிலையில் சமணர் சிலை கண்டெடுப்பு : வரலாற்று ஆர்வலர்களின் மரபு வழி நடை பயணத்தின்போது கிடைத்தது,  தி இந்து, 1 அக்டோபர் 2017

புதுக்கோட்டையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை கண்டுபிடிப்பு, 
புதிய தலைமுறை, 1 அக்டோபர் 2017

புதுகை அருகே கவிநாடு கண்மாய் பகுதியில் 3 துண்டாக உடைந்த நிலையில் சமணர் சிலை கண்டெடுப்பு, தினகரன், 1 அக்டோபர் 2017


புதுகை அருகே பழங்கால சமணர் கற்சிலை பாகங்கள் கண்டெடுப்பு, 
தினமணி, 2 அக்டோபர் 2017

Archaeologists discover 1,000-year-old statue, Indian Express
இச்சிலை 2013இல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி மரபு நடை குழுவினருக்கு  தெரிவிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செய்தி மறுபடியும் நான்கு ஆண்டுகள் கழித்து வந்தபோதிலும், அதனைப் பாதுகாக்க மரபு நடை குழுவினர் மேற்கொண்டுள்ள முயற்சி போற்றத்தக்கதாகும். 


1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள ஆய்வின்போது 16 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர்  சிலைகளைக் கண்டுபிடித்தபோதிலும் ஒரு சில சிலைகளே பாதுகாப்பான இடத்திற்கும், அருங்காட்சியகத்திற்கும் சென்று சேர்வதை அறியமுடிகிறது. அந்த வகையில் இச்சிலையின் தலைப்பகுதி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்து மகிழ்கின்றேன். விரைவில் முழு பகுதியையும் ஒப்படைக்க அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறினர். வரலாற்றில் நம்மவர் கொண்டுள்ள எல்லையற்ற ஆர்வத்தையும், மக்களுக்கு அதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஈடுபாட்டையும் இதன் மூலமாக உணரமுடிகிறது. இந்த தலைப்பகுதி அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதற்குத் துணை நின்ற அனைவருக்கும் ஓர் ஆய்வாளன் என்ற நிலையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலையின் உடல் பகுதியினை அருங்காட்சியகத்தில் சேர்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 

தென்னகத் தொல்லியல் ஆய்வுக்கழகத்தார் தம்முடைய வலைப்பூவில் இந்த சிலையானது 2013இல் கண்டுபிடிக்கப்பட்டதைப் பகிர்ந்துள்ளமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
கவிநாடு மரபு நடையின்போது குழுவினரால் மீட்கப்பட்ட  சமணர் சிலை 2013லேயே கண்டுபிடிக்கப்பட்டது

நன்றி  
  • திரு கஸ்தூரிரங்கன் மற்றும் திரு மணிகண்டன் உள்ளிட்ட மரபு நடை குழுவினர் 
  • தினமணி, தி இந்து, தினத்தந்தி, தினகரன், The New Indian Express, The Hindu, Times of India (அக்டோபர் 2013)
  • தி இந்து, புதிய தலைமுறை, தினகரன், தினமணி, The New Indian Express (அக்டோபர் 2017)
  • தென்னக தொல்லியல் ஆய்வுக்கழக வலைப்பூ
Brief of the write up in English:
This statue was first referred as Buddha and then identified as Tirtankara in October 2013, during my trip with Dr Chandrabose. Some newspaper clippings of October 2017 cited this as found during October 2017. Now the head portion has been handed over to the Museum authorities by the efforts taken by members of Heritage Walk, for which we thank them. Expecting the remaining portions to be handed over to them shortly. 

2 நவம்பர் 2017இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 2 November 2017