சோழ நாட்டில் பௌத்தம் : மதிப்புரை : பேராசிரியர் அ.மார்க்ஸ்
என் நூலுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் (அலைபேசி 94441 20582) அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். பேராசிரியர் அ.மார்க்ஸ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் அவர்களின் மிகச் சமீபத்தில் வெளிவந்துள்ள நூல் இது. பெரிய அளவில் கெட்டி அட்டையில் ஏராளமான புத்தரின் திரு உருவச் சிலைகளின் துல்லியமான படங்களுடன் இது வந்துள்ளது. 'சோழ நாட்டில் பவுத்தம்' எனும் பெயரில் அவர் தன் ஆய்வுகளின் ஊடாகக் காண நேர்ந்த புத்தர் சிலைகள் குறித்து உரிய படங்களுடன் வந்துள்ள நூல். பெரிய வடிவில் (277 mm x 240 mm) வெளிவந்துள்ள இதன் விலை குறித்த தகவல்கள் இறுதியில். சோழ நாடு முழுவதும் ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் பௌத்தம் மற்றும் சமணம் ஆகியன தழைத்திருந்ததற்கு ஆதாரமாக ஏராளமான புத்த சிலைகளும், சமண ஆலயங்களும் இன்றுவரை ஆங்காங்கு தமிழகம் முழுவதும் உள்ளன. சமண ஆலயங்கள் உரிய முறைகளில் வணங்கப் படுவதும், பௌத்த அடையாளங்கள் ஆங்காங்கு இப்படி அவ்வப்போது கிடைத்து வருவதும் குறித்து நான் கண்ணில் படும்போதெல்லாம் பதிந்து வருவதையும் ஒரு...