பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412
2021 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இம்மாதப் பதிவாக முகம் இதழில் என் ஆய்வினையும், களப்பணியையும் பற்றி வெளியான பதிவினை என் இரு வலைப்பூக்களிலும் பகிர்வதில் மகிழ்கிறேன். இளமைப்பருவத்தில் சில எண்ணங்களைச் சுமந்துகொண்டு வாழ்க்கையில் பயணிக்கும் அனைவரும் தாம் நினைத்தவற்றை அடைந்துவிடுவதில்லை. வாழ்க்கைச்சூழல் வேறுவேறு பாதைகளுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. இருப்பினும், எழுச்சி எண்ணங்கள் உடையோர் தமக்குக் கிடைத்த பாதையில் ஆற்றலுடன் பயணித்துப் புதிய இலக்குகளை எட்டிப் புகழ் வாழ்வில் பூரித்துப் பயணிக்கின்றனர். ஆய்வியல் (எம்ஃபில்) பட்டத்திற்கு கல்கியின் வரலாற்றுப்புதினங்களை ஆய்வு செய்த நினைத்தவர், பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற நாகப்பட்டின விகாரைப் பற்றிய சிந்தனையில் பௌத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நேர்ந்து பௌத்தவியலுக்குப் பல அருங்கொடைகள் அளித்திருக்கின்றார் முனைவர் பா.ஜம்புலிங்கம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திருவாளர் பாலகுருசாமி-திருமதி தர்மாம்பாள் இணையருக்கு 02.04.1959இல் பிறந்தவர் பா.ஜம்பு...