அயோத்திதாசர் ஆதவன் விருது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் 19ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் ஏப்ரல் 2025இல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் அயோத்திதாசர் ஆதவன் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றேன். 24 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 4.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விழா, அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது.
என்னுடைய ஏற்புரையில் இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். இவ்விழாவில் நிகழ்வில் பல துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
ஓர் அரசியல் கட்சி இவ்வாறாக ஓர் ஆய்வாளனைத் தேடி விருது தந்தமைக்கு நன்றி கூறினேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தராக இருந்த என்னை ஆய்வாளராகப் பரிணமிக்க வைத்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவித்தேன். ஆய்வில் தடம்பதிக்கும்போது எதிர்கொண்ட சூழல்களையும், களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர், சமணத் தீர்த்தங்கரர் சிலைகளைப் பற்றியும் என் எண்ணங்களைப் பகிர்ந்தேன். தொடாத ஒரு துறையில் ஈடுபட்ட எனக்கு ஊக்கம் தந்த பேரறிஞர்களை நன்றியோடு நினைவுகூர்ந்தேன். கோயில்களைப் பின்புலமாகக் கொண்ட, கும்பகோணத்தில் நான் பிறந்து வசித்து வந்த எங்கள் வீட்டின் அருகில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலில் பௌத்தம் தொடர்பான கல்வெட்டு இருக்கின்ற செய்தியை என் இளமைக்கால அனுபவத்துடன் பகிர்ந்தேன். சில மார்ச் 2025இல் இளவந்திகைத் திருவிழாவில் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதினைப் பெற்றதை நினைவுகூர்ந்தேன். ஆய்வினைத் தொடர்வேன் என்று என் உரையை நிறைவு செய்தேன்.
நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும், சமூக வலைதளங்களிலும், நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், ஊடகத்திற்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே உறவினர்களும், நண்பர்களும் அதைப் பார்த்து மகிழ்ந்ததாக நெகிழ்ச்சியுடன் என்னிடம் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நிகழ்விற்கு வந்து என்னை வாழ்த்தியதோடு, 8.10.2025இல் எழுச்சித்தமிழர் அவர்களிடம் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலை வழங்கிய நண்பர் முனைவர் சீமான் இளையராஜாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
தொடர்புடைய இணைப்புகள்:
- பண்டிதர் அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கான விருது பெறும் சான்றோருக்கான (பா.ஜம்புலிங்கம்) தகுதி உரை, சமத்துவ குரல்
- "என்னுடைய ஆய்வுக்கு பல நூல்கள் துணையாக இருந்தன"-பா.ஜம்புலிங்கம், வெளிச்சம் டிவி
- Thol Thirumavalavan honours Pondy Ex-CM Vaithilingam, He also honoured B.Jambulingam a former Assistant Registrar of Tamil University, DT Next, 25.1.2025
12.1.2026இல் மேம்படுத்தப்பட்டது.



















Comments
Post a Comment