அகிம்சை நடை : 19 நவம்பர் 2017

2017 அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு "தஞ்சாவூர்ப் பகுதியிலுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்ப்பதற்காக சமண அமைப்பினர் சென்னையிலிருந்து 5 நவம்பர் 2017 அன்று வருகின்றார்கள். திரு தில்லை கோவிந்தராஜனிடம் இதுபற்றிக் கூறியுள்ளேன். நாமும் அவர்களோடு கலந்துகொள்வோம்" என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூவரும் செல்வதாகத் திட்டமிட்டோம். மழையின் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்தோம். 19 நவம்பர் 2017இல் இப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதை திரு அப்பாண்டைராஜன் உறுதி செய்தார். அவருடைய தலைமையில் 19 நவம்பர் 2017 காலை 6.45 மணியளவில் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் தெற்கு வீதியிலிருந்து வேனில் கிளம்பினோம். முன்னர் வருவதாக இருந்த மணி.மாறனும், தில்லை கோவிந்தராஜனும் விடுப்பு எடுக்க இயலா நிலை மற்றும் அவசரப்பணி காரணமாக வர இயலாமல் போனது.  
பயணத்தின்போது அவர் அகிம்சை நடையைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அவர் கூறிய பின்னர் அகிம்சை நடை தொடர்பான விவரங்களை முகநூல் பக்கங்களிலிருந்தும், குழு உறுப்பினர்களிடமிருந்தும் அறிந்தேன். சிலைகளைப் பார்ப்பதற்கு முன்பாக அகிம்சை நடையைப் பற்றி முதலில் அறிவோம். 

அகிம்சை நடையின் நோக்கமும் செயற்திட்டங்களும் 
தொன்மை வாய்ந்த மரபுச்சின்னங்களை தொன்மை மாறாது பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் உலகிற்கு வெளிப்படுத்துதல் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது. இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை உண்டாக்குதல், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரின் பார்வைக்கு வராத, பட்டியலிடப்படாத சமண தொன்மை மரபுச்சின்னங்களை பட்டியலிடச்செய்தல், பாதுகாப்பிற்குக் கொண்டுவரல், மரபுச்சின்னங்கள் உள்ள இடங்களில் அகிம்சை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துதல், பள்ளி கல்லூரிகளில் விளம்பரப்படுததுதல், அகிம்சை நெறியைப் பரப்புதல் உள்ளிட்ட பல அரிய செயற்திட்டங்களை அகிம்சை நடையினர் மேற்கொண்டுவருகின்றனர்.     

47ஆவது அகிம்சை நடை
அந்த வகையில் இவ்வாறாக இதுவரை 46 நடை பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இது 47ஆவது அகிம்சை நடை என்றும் தெரிவித்தனர். சுரைக்குடிப்பட்டி, ஒரத்தூர், நாட்டாணி ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் காப்பாற்றி பாதுகாப்பது இந்நடையின் நோக்கமாகும்.   
5 நவம்பர் 2017 திட்டமிடப்பட்டதற்கான அறிவிப்பு

சுரைக்குடிப்பட்டி (2010இல் திரு. தில்லை கோவிந்தராஜனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது) 
முதலில் சுரைக்குடிப்பட்டி சென்றடைந்தோம். அங்கு நாங்கள் சென்றபோது சென்னையிலிருந்து வந்திருந்த அகிம்சை நடை பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் கண்டோம். முன்பு நான் சந்தித்த திரு கனக.அஜிதாஸ், திரு ஸ்ரீதரன் அப்பண்டைராஜ் ஆகியோரையும், குழுமூர் புத்தர் சிலை கண்டுபிடிப்பின்போது அறிமுகமான திரு ம.செல்வபாண்டியன், முகநூலில் அறிமுகமான திரு தனஞ்செயன் உள்ளிட்டோரையும் கண்டேன். 



பல புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கிருந்த கோயிலில் காலை உணவு உண்டபின் அந்த ஊரைச் சுற்றி விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது. சமண அறக்கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டு, பண்பாட்டைப் பாதுகாக்கவேண்டியது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குகின்ற வாசகங்களை உறுப்பினர்கள் அனைவரும் கூற ஊரின் வீதிகளில் சுற்றிவந்து நிறைவு செய்தோம். 

சமணப்பெருமக்கள், அறிஞர்கள், உள்ளூர் மக்கள், குழந்தைகள் பேரணியில் கலந்துகொண்டனர். இடத்திற்கு வயல்வெளியில் சுமார் 2 கிமீ நடந்து சென்று சிலை இருக்கும் இடத்தை அடைந்தோம். வெயிலிலும் அனைவரும் ஆர்வமாக நடந்துவந்தனர். 2010இல் திரு தில்லை கோவிந்தராஜனுடன் வந்தபோது இவ்வளவு தூரம் நாங்கள் நடந்ததாக நினைவில்லை. அப்போது அங்கிருந்த அய்யனார் கோயிலில் இருந்த சிலை, தற்போது அக்கோயில் புதிதாகக் கட்டப்படவுள்ள நிலையில், அருகிலிருந்த குளத்தருகே இடம் மாறியிருந்தது. 




இச்சிலையுடன் சண்டேசர், தவ்வை, மாயோன், தட்சிணாமூர்த்தி, ஆகிய சிலைகளும் உள்ளன. அருகே தனியாக கருடாழ்வாரும் உள்ளார். சமண தீர்த்தங்கரர் சிலையை முதலில் பார்த்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். திரு செல்வபாண்டியன் சிற்பங்களின் கூறுகளை எடுத்துரைத்தார். வந்திருந்தோர் வழிபாடு செய்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் இச்சிலையைப் பார்த்த மன நிறைவில் குழுவினருடன் தொடர்ந்து சென்றேன். 

அங்கிருந்த அம்மன் கோயிலில் பொறுப்பாளர்களும், ஊர்ப்பெருமக்களும் சமணர் சிலையை அமைப்பது தொடர்பாக விவாதித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ மாணவிகள் ஆவலோடு அவற்றை வாங்கிச்சென்றனர். முக்கிய பிரமுகர்களுக்கு முனைவர் த.ரமேஷ் எழுதியுள்ள நடுநாட்டில் சமணம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்நூலின் படியை பெறும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.



நாட்டாணி (2015இல் திரு. மணி.மாறனுடன் மேற்கொண்ட களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது) 
அடுத்து நாட்டாணிக்குப் பயணித்தோம். 2015இல் திரு மணி.மாறனுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அதிக சிரமங்களுக்கிடையே புதர்களையும், முள் காட்டையும் கடந்து பார்த்த சிலை இப்போது இடம் மாறியிருந்தது. 



அனைவரும் எளிதில் பார்ப்பதற்கு வசதியாக இந்த சமண தீர்த்தங்கரரை தற்போது அங்கேயுள்ள அம்மன் கோயில் அருகே பாதுகாப்பாக வைத்துள்ளனர். உடன் வந்த உறுப்பினர்கள் அந்த சிலையைப் பார்க்க ஆவலாக உடன் வந்தனர். அவர்கள் அச்சிலைக்கு வழிபாடு நடத்தினர். அச்சிலையினை உரிய இடத்தில் வைத்துப் பாதுகாப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறித்து விவாதித்தனர். வந்திருந்த அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். கிளம்பும்போது மழைத்தூறல் ஆரம்பித்தது. 


ஒரத்தூர் (2011இல் திரு தில்லை கோவிந்தராஜன் குழுவினரோடு மேற்கொண்ட களப்பணியில் பார்க்கப்பட்டது)
நாட்டாணியிலிருந்து பயண நிறைவு இடமான ஒரத்தூர் சென்றோம். 2011இல் குளத்தின் கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் நாங்கள் பார்த்த இந்த சமண தீர்த்தங்கரர் அங்கு காணப்படவில்லை. 
டிசம்பர் 2011இல் சென்றபோது
அந்த மரம் தனியாக நின்றுகொண்டிருந்தது. ஒரத்தூரில் இறங்கியபோது மழை தூறல் ஆரம்பித்தது. உடன் வந்த ஆர்வலர்களுக்கும் அகிம்சை நடை உறுப்பினர்களும் இந்த மழை ஒரு பொருட்டாகவே அமையவில்லை.

விசாரித்தபோது அரச மரத்தின் அடியிலிருந்த சிலை அருகிலிருந்த குளத்தில் போடப்பட்டிருந்ததாகவும், 2014 வாக்கில் இந்த தீர்த்தங்கரரை மறுபடியும் குளத்தில் இறங்கி வெளியில் எடுத்து வைத்ததாகவும் கூறினர். பாதுகாப்பிற்காக அருகிலுள்ள மற்றொரு அரச மரத்தின் கீழ் வைத்துள்ளனர். அங்கு சென்று தீர்த்தங்கரரைப் பார்த்தோம். அகிம்சை நடை பெருமக்கள் பிற சமண தீர்த்தங்கரருக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தியதைப் போலவே இங்கும் நடத்தினர். 



ஊரிலுள்ள பெரியவர்கள் இச்சிலையைப் பாதுகாப்பாக அமைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறி, அவ்வாறு அமைக்க உதவுவதாகத் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்குப் பின்னர் அங்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டில் முன்னட்டையில் பகவான் மகாவீரரைப் பற்றிய குறிப்பும், பின்னட்டையில் அகிம்சை நடையின் நோக்கமும், செயற்திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.  

ஊர் பெருமக்களின் உரையைத் தொடர்ந்து பயணம் இனிதாக நிறைவுற்றது. நிறைவு நிலையில் பஞ்ச ஸ்தோத்திரம் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அடுத்த அகிம்சை நடை ஆர்ப்பாக்கம் என்று திரு தனஞ்ஜெயன் தெரிவித்தார். நிறைவாக திரு அப்பாண்டைராஜன் நன்றி கூறினார். அங்கிருந்து அனைவரும் தத்தம் ஊர்திகளில் மன நிறைவாக, பிரியா விடை தந்து அங்கிருந்து கிளம்பினோம்.

மறக்க முடியாத அனுபவம்
முதன்முதலாக இந்த அகிம்சை நடைப்பயணத்தில் கலந்துகொண்டது எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்திருந்த உறுப்பினர்களின் ஈடுபாடும், ஆர்வமும், தளரா முயற்சியும் என்னை வியக்க வைத்தன. ஆங்காங்கே மழைத்தூறல் இருந்தபோதிலும் வந்திருந்த குழந்தைகள் உட்பட யாரிடமும் எவ்வித சோர்வோ காணப்படவில்லை. பயணத்தின் தொடக்கத்தில் இருந்த ஆர்வத்தினை நிறைவு வரை அப்படியே காணமுடிந்தது. பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கிய முறை நாமும் ஒரு பள்ளி மாணவராக இருந்திருக்கக்கூடாதோ என்று எண்ண வைத்தது. ஆங்காங்கே கூட்டம் நடத்தப்பட்டபோது அனைவரும் ஆர்வமாக இருந்து பொறுமை காத்தனர். அனைத்திற்கும் மேலாக இந்த அகிம்சை நடை வருவதற்கு முன்பாகவே முக்கிய பொறுப்பாளர்கள் இந்த சிலைகளையும் முன்கூட்டியே வந்து பார்த்து, வரும் வழியைத் தெளிவாகப் பார்த்து பிற உறுப்பினர்களுக்குத் தெரிவித்த விதம் பாராட்டும் வகையில் இருந்தது.

களப்பணியில் பார்த்த சமண தீர்த்தங்கரர் சிலைகள் 
கடந்த 25 ஆண்டு களப்பணியின்போது கங்கைகொண்ட சோழபுரம், காரியாகுடி, கோட்டைமேடு, பெருமாத்ர், செங்கங்காடு, தஞ்சாவூர், அடஞ்சூர், செருமாக்கநல்லூர், சுரைக்குடிப்பட்டி, பஞ்சநதிக்குளம், தோலி, கவிநாடு, நாட்டாணி, ஜாம்பவானோடை,  நாகப்பட்டினம், சிராங்குடிபுலியூர், வைப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை தனியாகவும், பிற நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் பார்த்துள்ளேன் என்பதை அகிம்சை நடைப் பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விழைகின்றேன். இவற்றில் பல சிலைகள் தற்போது காணப்படவில்லை. இவற்றைப் பற்றி என் வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அரிய பணியை மேற்கொண்டுவருகின்ற அகிம்சை நடை பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களும் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகிம்சை நடையில் நான் கலந்துகொள்ள வாய்ப்பளித்த பேருள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

நாங்கள் பார்த்த, கண்டுபிடித்த சமணர் சிலைகளைப் பற்றிய பதிவுகளை பின்வரும்
இணைப்புகளில் காணலாம்.
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள், 20 ஆகஸ்டு 2011
சமண சுவட்டைத்தேடி : திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், 20 நவம்பர் 2011
சமண சுவட்டைத்தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள், 10 டிசம்பர் 2011
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமணதீர்த்தங்கரர் சிற்பங்கள்(1993-2003), 1 மே2012
பௌத்த சுவட்டைத் தேடி : நாட்டாணி,  1 ஏப்ரல் 2015



உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
Charles Allen எழுதியுள்ள Coromandel: A Personal History of South India என்ற நூலில் (Little Brown Book Group, London, 2017) 1993 முதல் நான் மேற்கொண்டுவருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வு, கண்டிரமாணிக்கம் மற்றும் கிராந்தியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, 60க்கு மேற்பட்ட புத்தர் சிலைகள் இக்காலகட்டத்தில் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல செய்திகள் காணப்படுகின்றன. இந்நூலில் என் முனைவர் பட்ட ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

11 ஏப்ரல் 2018இல் மேம்படுத்தப்பட்டது

Comments

  1. இத்துனைபேர் ஒன்றிணைந்து ஒரு பயணம்
    வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. பல வரலாற்றுப் புத்தகங்களை படிக்கும் சமயத்தில் வரலாற்றை பின்னோக்கி கற்பனையில் சென்று பார்ப்பதுண்டு. குறிப்பாக கடந்த 200 ஆண்டுகளில் கல்வி எந்த அளவுக்கு இங்கே இருந்தது. ஆதிக்கம் செலுத்தியது. மறைக்கப்பட்டது. மறுக்கப்பட்டது போன்றவற்றை கடந்த சில மாதங்களாக சில புத்தகங்களின் வாயிலாக படிக்கும் போது அந்தந்த சமயங்களில் நடந்த நிகழ்வுகளை வைத்து அப்போது இந்தப் பகுதிகள் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துக் கொள்வதுண்டு. இப்போது உங்கள் பதிவைப் படித்தவுடன் நான் மனதில் நினைத்ததை உங்கள் செயல்பாடுகள் மூலம் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. இக்குழுவினருக்கு இந்த சமூகம் கடன் பட்டு இருக்கிறது.

    தங்களுக்கும் எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்ப்பா

    ReplyDelete
  5. ஐயா எனக்கு நீண்ட நாட்களாகவே எழும் ஐயம் இது புத்தர் சிலைகளுக்கும் சமண தீர்தங்கரர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை பற்றி ஒருபதிவு விரிவாகஎழுதுங்களேன் சரவண பெலகுளாவில் இருக்கும் கோமடீஸ்வரர் இதில் யாருடன் தொடர்பு
    இவையெல்லாமே ஒரே மாதிரியான பிம்பத்தை உருவாக்குகிறதே

    ReplyDelete
  6. தங்களுக்கும் ஆய்வுக் குழுவினருக்கும்
    பாராட்டுகள்

    ReplyDelete
  7. "பசுமை நடை" குழுவினர்களுடன் மதுரையில் சமணர்கள் வாழ்ந்த இடத்தை போய் பார்த்து வந்தது நினைவுக்கு வந்தது.
    அவர்களும் சமணர்கள் பற்றிய விவரங்கள் அவர்கள் குடியிருப்புகளை மீட்டு எடுக்கும் பணிதான் செய்கிறார்கள்.

    அகிம்சை நடை குழுவினர்களின் களபணியை அறிந்து கொண்டேன்.

    குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கியது மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. திரு அப்பாண்டைராஜ் (மின்னஞ்சல்வழி : c.appandairaj@gmail.com)
    அன்புடையீர், வணக்கம்.அகிம்சை நடைப்பயணம் பற்றிய பதிவு அருமை. வாழ்த்துக்ககள். நன்றி

    ReplyDelete
  10. மிக அருமை. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா,

    மிக்க மகிழ்ச்சி.

    அகிம்சை நடை 47 - ஆம் நிகழ்ச்சியில் தங்கள் வருகை மற்றும் தங்களின் அனுபவங்களை தாங்கள் பகிர்ந்து கொண்டது பற்றி
    அறிந்தேன். சில பணிகளால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமற் போனது வருத்தம்.

    நேற்றைய அகிம்சை நடை நிகழ்ச்சியில் கணிகிலுப்பை கிராமம், (காஞ்சிபுரம் மாவட்டம்) அழகிய புத்தர் சிலையைக் கண்டு மகிழ்ந்தோம்.
    அங்கு தங்களின் களப்பணி பற்றி திரு.கனக. அஜிததாஸ் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

    வாய்ப்பு கிடைக்கும் போது அகிம்சை நடையில் பங்கேற்க ஆவலுடன் அழைக்கின்றோம்

    மிக்க நன்றி ஐயா.

    வி.சசிகலா தேவி

    ReplyDelete
  12. இந்த நடையில் கலந்துகொள்ள இயலாமல் போனது ...தாங்கள் கலந்துகொண்டதால் சிறந்தது . நல்ல பதிவு. தொடரட்டும் ...!

    உண்மையிலேயே தமிழ்ச்சமணர்களின் ஈடுபாடும் பங்களிப்பும் இன்றைய நாளிலும் தொடர்வதை நானும் நேரில் கண்டுணர்ந்தேன் .

    ReplyDelete

Post a Comment