பௌத்த நல்லிணக்க சிந்தனைகள்

முந்தைய பதிவுகளில் பௌத்தம் தொடர்பாக களப்பணிகள் குறித்தும், பௌத்தம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இப்பதிவில் பௌத்தம் போற்றும் நல்லிணக்கச் சிந்தனைகளைக் காண்போம். பௌத்தம் போதித்த முதன்மையான நன்னடத்தைகள் அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம் ஆகியவையாகும். இவற்றில் அன்புறு நேயம் முதலிடத்தைப் பெறுகிறது. இவ்வாறான நேயம் காணப்படும்போது வாழ்வில் நிம்மதியைக் காணமுடிகிறது. அது வீட்டையும் நாட்டையும் மேம்படுத்தும்.

நல்லிணக்கத்தின் அடிப்படை அன்பு
நல்லிணக்கம் பேணப்படுவதற்கு அன்பு அடிப்படையாக அமைகிறது. நல்ல சிந்தனைகள் மேம்படும் நிலையில்  நல்லிணக்கம் நிலவும். அவ்வாறான நல்லிணக்கத்தை பல நிலைகளில் உருவாக்கிக்கொள்ள முடியும்.

பகைமை தவிர்த்தல்
"இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்8ல. பகைமை அன்பினாலோய தணியும். இதுவே பண்டைய நெறி" என்கிறது பௌத்த அடிப்படை நூலான தம்ம பதம்"தாய் தன் சேயை அரவணைத்துப் போற்றுவது போல, உங்கள் அன்பு உலகிலே பரவட்டும், ஒவ்வோர் உயிரையும் அரவணைத்துக் கொள்ளட்டும், தடையற்ற சுதந்திரத்துடன் அது உயரேயும் கீழேயும் பறக்கட்டும், துவேஷமும், பகையும் விலகி ஒழியட்டும் என்கிறது பௌத்த நூலான சுத்த நிபாதம்

கோபத்தை அடக்குதல்
"வாக்கினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும். நா அடக்கத்தில் பழகவேண்டும். வாக்கினால் உண்டாகும் தீமையை அழித்து நல்லொழுக்கத்தைதப் பேணி வருக" என்றும், "மனத்தினால் வரும் கோபத்தை அடக்கிக் காக்கவும், மன அடக்கத்தில பழகவேண்டும். மனத்தில் உண்டாகும் தீமையை ஒழித்து நல்ல ஒழுக்கத்தைப் பேணி வருக" என்றும் தம்ம பதம் கூறுகிறது. எது நல்லது, எது தீயது என்பதைக் கண்டறிய கௌதம புத்தர் ஓர் எளிய வழியைக் காட்டியுள்ளார். "தங்களின் செயற்பாடுகள் தங்களுக்கோ பிறருக்கோ துன்பமிழைக்காவிட்டால் அதனை மேற்கொள்ளுங்கள். அவை திறனுடையவை, முழு நிறைவானவை, நல்லவை" என்பதே அவர் காட்டிய வழி.

துன்பம் தரா செயல்பாடுகள்
எவருக்கும் துன்பமிழைக்கா வகையில் அமையும் செயல்பாடுகள் அனைத்தும் நல்லிணக்கத்தில் முடியும். அச்சூழலில் சாத, சமயம், இனம், குலம் என்ற எந்தப் பிரிவுகளும் ஒரு தடையாக இருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இல்லாத நிலையில்தான் மனித நேயம் மாய்க்கப்பட்டு, நல்லிணக்கம் என்ற ஆணிவேர் ஆட்டம் காண்கிறது. இதன் இறுதி நிலை வன்முறையில் வந்துமுடிகிறது. "வன்முறை விளைவிப்பது அச்சமே. தேசமே சச்சரவில் மூழ்கிவிடும். கொடூரமாய் மக்கள் திரிவதைக் காணுங்கள். பேராசை, வெறுப்பு, தற்பெருமை போன்றவற்றைக் கடக்கும் நிலையில் மக்கள் எங்கும் எப்போதும் இன்பமும் அமைதியும் அடையலாம்" என்கிறது சுத்த நிபாதம்.  

மானுடத்தின் ஒருமை
வாசெட்ட சுத்தம் எனப்படும் பௌத்த நூல் அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் என்று கூறுகிறது. "தாவரங்களுக்கிடையேயும், விலங்குகளுக்கிடையேயும், பறவைகளுக்கிடையேயும், மீன்கள், பூச்சிகள், பாலூட்டிகள் ஆகியவற்றுக்கிடையேயும்  பல வகைகளும் இனங்களும் உள்ளன. ஆனால் மனிதரிடையே வேறுபாடு இல்லை". பிறப்பால் எவ்வித வேறுபாடும் இல்லாத நிலையில், ஒருவர் செய்யும் செயல்களே அவரை மேன்மக்களாக்கும். அவ்வாறான செயல்கள் நல்லிணக்கத்தை வளர்ப்பதாய் அமைய வேண்டும்.  

வீழ்ச்சிக்கான காரணங்கள்
"தீயோரை விரும்புவதும் நன்னடத்தையை வெறுப்பதும், பிறப்பு, செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு பெருமைப்பட்டுப் பிறரைத் தூற்றுதலும், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுதலும் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் பராபவ சுத்தம் என்ற பௌத்த நூல் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்று கூறுகிறது.

தாழ்வுற்ற மனிதன்
பௌத்தம், பிறப்பால் எவரும் தாழ்வுற்ற மனிதன் இல்லை என்றும், பிறப்பால் எவரும் உயர்ந்த மனிதன்  இல்லை என்றும் கூறுகிறது. வசல சுத்தம் என்ற பௌத்த நூல், "எவனொருவன் முன்கோபமுடையவனோ, வஞ்சகனோ, தன்னலமுடையவனோ, உயிர்களை வதைப்பவனோ, கருணையற்றவனோ, நல்லறிவுரைகளை மறந்துவிடுகின்றவனோ, பிறரைத் தவறாக வழிநடத்துகின்றவனோ, தீயவை புரிந்துவிட்டு நன்மை புரிந்ததுபோல நடக்கின்றவனோ, தற்பெருமையால் தன்னை உயர்த்திப் பேசிப் பிறரைத் தாழ்த்துகின்றானோ அவனே கீழான மனிதன்" என்று கூறுகிறது.

சமத்துவ நிலை
குலம், சாதி, இனம் என்ற பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கும்போது அமைதியின்மை ஏற்படுகிறது. அதுதவிர பொறாமை, கோபம், வஞ்சம் போன்ற குணங்களும் பற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து விடுபட சமத்துவ நிலையில் இருக்கவேண்டும் என்கிறது பௌத்தம். "சமத்துவ நிலைச் சாதனையைப் பயில்வாயாக. அதனால் எதிர்ப்புணர்ச்சியெல்லாம் கைவிடப்படும்" என்கிறது பௌத்த நூலான மத்யம நிகாயம். 

பிறர்க்குத் துன்பமோ, இன்பமோ எது நேர்ந்தாலும், அது தமக்கு நேர்ந்ததாகக் கருதக்கூடிய அளவு மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறான மனப்பக்குவம் நல்லிணக்கத்தை நம்முள் மேம்படுத்தும். இது போன்ற கோட்பாட்டினைத் தீர்மானிக்கும்போது புத்தர் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்துகிறார். இவற்றை நாம் மனதில் கொள்வோம். நல்லிணக்கச் சிந்தனைகளை மேம்படுத்துவோம்.

"நல்லோர்க்கு நான் நன்மை செய்கிறேன்.
தீயோர்க்கு நான் நன்மை செய்கிறேன். 
எனவே நான் நான்மையே செய்கிறேன்
-----------------------------------------------------------------------------
21.3.2010இல் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரியில் நடைபெற்ற மத நல்லிணக்கக் கருத்தரங்கில் அளிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.
-----------------------------------------------------------------------------



தி இந்து நாளிதழின் ஆண்டு விழாவையொட்டி, அவ்விதழைப் பற்றி நான் எழுதிய கடிதம் 27.9.2015 அன்று வெளியாகியுள்ளது. வெளியிட்ட தி இந்துவுக்கு நன்றி.

Comments

  1. நல்லிணக்க சிந்தனைகள் அறிந்தேன் ஐயா
    ஒவ்வொருவரும் இதனைப் பின்பற்றினால் எப்படியிருக்கும்
    இந்து நாளிதழ் செய்தியினை அன்றே பார்த்துவிட்டேன் ஐயா
    வாழ்ததுக்கள்
    தொடரட்டும் தங்களின் பணி
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete

  2. அருமையான பதிவு ஐயா. மனதில் பட்டதை சொல்லிவிடுகின்றேன். இந்த பதிவை படித்தவுடன் மனதில் என்னமோ .. சில திருக்குறள்களை தாங்கள் அலசி எடுத்து போட்டது போல் தோன்றியது. நீங்கள் மட்டும் பௌத்தம் என்று சொல்லி இல்லாவிடில் அடியேன் இதனை குறளின்அர்த்தம் என்று தான் எண்ணி இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. முதன்முதலாக இக்கட்டுரைக்கு விவரங்கள் சேகரிக்கும்போது தாங்கள் உணர்ந்ததையே நான் உணர்ந்தேன்.

      Delete
  3. Good post sir. Happy to read such good thoughts.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. புத்த அற நூல்களின் சாரத்தை தொகுத்து தந்தமை சிறப்பு ஐயா. எல்லா மதங்களும் நல்லிணக்கத்தையே வற்புறுத்துகின்றன,

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அனைத்து மதங்களும் நல்லிணக்கத்தையே வலியுறுத்துகின்றன. நன்றி.

      Delete
  5. நல்லிணக்கம் அறிவுறுத்தும் புத்த மத நூல்கள் பற்றிய பகிர்விற்கு நன்றி ஐயா.
    எல்லா மதமும் அன்பை வலியுறுத்த மனிதனுக்கு ஏனோ மதம் பிடித்து விடுகிறது

    ReplyDelete
    Replies
    1. மனிதனுக்கு மதம் பிடித்துவிடுகிறது. அதிலிருந்து விடுபட அவன் முயற்சிப்பதில்லை.

      Delete
  6. வணக்கம் ஐயா !
    அன்பு காருண்யம் பொறுமை அத்தனையும் தரும் பயன் யாவும் எண்ணி மகிழத் தந்த அருமையான படைப்புக் கண்டு பேரானந்தம் உற்றேன் ஐயா ! மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இவை போன்ற பகிர்வுகள் மென் மேலும் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுடன் இவை போன்ற பதிவுகள் தொடரும்.

      Delete
  7. புத்தரால் ஏற்பட்ட பெருமை .... அவர் ராமரை கும்பிடுங்கள் சிவனை கும்பிடுங்கள் என்று போதனை செய்யவில்லை. ஆதலால், அவரே கடவுளானார்.

    ReplyDelete
  8. நன்மையே செய்கின்றேன்,,
    உண்மைதான் ஐயா, நல்ல சிந்தனை ,,,, தாங்கள் தொகுத்த கொடுத்துள்ள விதம் அருமை,,,,,
    நன்றிங்க ஐயா,

    ReplyDelete
    Replies
    1. கட்டுரை எழுதும்போது என் மனதில் ஆழப்பதிந்தது இந்த கடைசி சொற்றொடர்களே..நன்மையே செய்கிறேன்.....நன்றி.

      Delete
  9. அறிந்து கொள்ள வேண்டிய சிந்தனைகளை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

      Delete
  10. அனைத்து மதங்களும் நல்லிணக்கத்தையே போதிக்கின்றன. எந்த சாவினிசமும் இல்லாமல் வாழ்தல் அவசியம் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  11. மதநல்லிணக்கம் பேணுவோம் என்ற கருத்தினுக்கு வலு சேர்க்கும் பவுத்த சிந்தனைகளைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து களப்பணி, நூல் மதிப்பீடு என்ற நிலையில் சற்றே வித்தியாசமாக எழுதவேண்டும் என்ற நிலையில் இக்கட்டுரை. வருகைக்கு நன்றி.

      Delete
  12. வணக்கம் முனைவரே படிக்க படிக்க ஆச்சர்யமாக இருந்தது எத்தனை உயர்ந்த சிந்தனைகள் மதங்கள் நல்லவைகளைத்தான் போதிக்கின்றன மனிதனின் புரிதல்தான் தவறாக இருக்கின்றது வாழ்த்துகள்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. தவறான புரிதலே நம்மை சிக்கலுக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன. நன்றி.

      Delete
  13. வணக்கம்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் வருக. கருத்துக்களைப் பதிக.

      Delete
  14. வேலைப்பளுவின் காரணமாய் தாமதம்...

    அருமையான பகிர்வு! நிறைய அழகான சிந்தனைகளை அறிய முடிந்தது. ஒவ்வொரு மதமும் அதன் குருவும் நல்ல போதனைகளைத்தான் போதிக்கின்றார். நாம்தான் அதைத் தவறான வழியில் புரிந்து கொண்டு நமது சுற்றத்தையும் நம்மையும் நிம்மதி இழக்கச் செய்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. தாமதமாக வந்தாலும் அருமையான கருத்தினைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

      Delete
  15. கௌதம புத்தர் இத்தனை அழகாக எடுத்துக் கூறியும் -
    பௌத்தர்கள் - ஒரு இனம் பெருங்கேடுகளால் துன்புறக் காரணமானார்களே!..

    நல்ல கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றில் வேதனை தரும் பக்கங்கள் அவை. வருகைக்கு நன்றி.

      Delete
  16. வணக்கம் முனைவர் அய்யா!
    தாமதத்திற்கு மன்னிக்கவும்!
    நல்லதொரு நல்லிணக்க பதிவு
    நலம்பெற அன்பின் வழியில்
    செல்வதே மேன்மை பயக்கும்.
    உள்வாங்கி படித்து மகிழ்வுற்றேன்.
    பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!
    ""தீயோரை விரும்புவதும் நன்னடத்தையை வெறுப்பதும், பிறப்பு, செல்வம், குலம் ஆகியவற்றைக் கொண்டு பெருமைப்பட்டுப் பிறரைத் தூற்றுதலும், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படுதலும் ஒரு மனிதனின் வீழ்ச்சிக்குரிய காரணங்கள்
    பராபவ சுத்தம் என்ற பௌத்த நூல்
    வீழ்ச்சிக்கான காரணங்களாக கூறியிருப்பது முற்றிலும் உண்மையான கருத்தை உலகுக்கு சொன்ன நூலை அறிவுறுத்தியமைக்கு நன்றி அய்யா!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. உள்வாங்கிப்படித்து, அதனை அலசி மறுமொழி தந்துள்ள விதம் அருமை. நன்றி.

      Delete
  17. வணக்கம் பௌத்த நல்லலிணக்க சிந்தனைகள் அறிந்தேன். நல்ல மகான்களைக் குருவாக கொண்டு பின்பற்றினால் உலகத் துன்பங்களிலிருந்து விடுபட வழியிருக்கிறது என்பதற்கு இச்சிந்தனைகளே சான்று. தங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  18. பௌத்த மதத்தின் நல்லிணக்க சிந்தனைகளை பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா. எங்கும் இது போன்ற நற்சிந்தனைகள் பரவியிருந்தால் குற்றங்கள் நடவாது.

    ReplyDelete
    Replies
    1. நற்சிந்தனைகள் பலவகைகளில் நலம் தரும். நன்றி.

      Delete
  19. பதிவு அருமை! தங்கள் ஆய்வு அனைத்தும் புத்ககமா வெளிவர ஆவன செய்ய வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நூலாக்க ஆவன செய்வேன். தங்களின் கருத்திற்கு நன்றி.

      Delete
  20. நல்ல எண்ணங்களையும் நல்வழிகளையும்தான் மதங்கள் போதிக்கின்றன.

    புரிதலில்தான் வேறுபாடும் வேற்றுமையையும் நம்மிடையே!
    அறியாதன அறிகின்றேன் ஐயா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தவறான புரிதல்களால் தடம் மாறும் நிலையே. வருகைக்கு நன்றி.

      Delete
  21. திரு சு.ம.பெருமாள் மின்னஞ்சல் மூலமாக (Perumal S M )
    Hi Sir, I read your message about translation article in The Hindu(tamil) it is useful

    ReplyDelete
  22. பௌத்தமதக்கருத்துகள் அதன் மேன்மையை பறை சாற்றுகின்றது அய்யா...நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  23. அருமையான கருத்துகள். எல்லா மதங்களும் அன்பையும் அமைதியையுமே போதிக்கின்றன. எடுத்துக் கொள்ளும் மனிதர்களின் பார்வையில் இருக்கிறது வேறுபாடு.

    சமீபத்தில் படிக்க ஆரம்பித்துள்ள ஒரு புத்தகத்தில் பௌத்த கருத்துகளுக்கு பிறகுதான் கீதை பிறந்தது என்று படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள்.

      Delete
  24. அருமையான கட்டுரை ஐயா...
    ஹிந்து நாளிதழில் தங்கள் கருத்து வெளியானமைக்கு வாழ்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  25. அருமையான கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  26. நல்லிணக்கச் சிந்தனைகளைத் தொகுத்து வழங்கியதில் நன்மை இருக்கிறது.
    இதன் மூலம் பௌத்தம் கூறும் நல்லெண்ணத்தை அறிய முடிகிறது.

    இத்தளத்தை எனது விருப்பத் தேர்வில் இணைத்துவிட்டேன்.
    புதிய புதிய பதிவுகளுடன் கருத்திட வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தங்களது விருப்பத்தேர்வில் எனது தளம் இணைக்கப்பட்டதறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்.

      Delete
  27. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அடியொற்றி உள்ளது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான கருத்துக்கள் இவ்வாறான நீதிகளையே கொண்டமைந்துள்ளன. வருகைக்கு நன்றி.

      Delete

Post a Comment