தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் : தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்த சமய எச்சங்களாகக் காணப்படுபவை ஒரு கல்வெட்டும், புத்தர் சிலைகளும்,  நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் ஆகும். விகாரங்கள் இருந்ததற்கான சான்றுகள் எவையும் இப்பகுதியில் காணப்படவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம் (திருக்கோயில்பத்து), கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி உள்ளிட்ட இடங்கள் புத்தர் சிலைகள் உள்ள/இருந்த இடங்களாகும்.

கோபிநாதப்பெருமாள்கோயில் அருகில் இருந்த புத்தர் சிலை

பெரண்டாக்கோட்டை புத்தருடன் 

தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்தில், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தருடன்

இவற்றில் சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், மதகரம், மாத்தூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களில் உள்ளன.

அய்யம்பேட்டை நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி தொடர்பான செய்தி நறுக்கு

அய்யம்பேட்டையில் வழிபாட்டில் உள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி

நின்ற நிலையிலுள்ள நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், அமர்ந்த நிலையிலுள்ள நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி அய்யம்பேட்டையில் முனீஸ்வரன் என்ற பெயரில் வழிபாட்டிலும் உள்ளன. இவ்வகைத் திருமேனிகள் சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்திலும், வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பெரண்டாக்கோட்டையில் சாம்பான் என்றும், விக்ரமத்தில் செட்டியார் என்றும் வழிபடுகின்றனர். விக்ரமத்தில் வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களில் வழிபாடு நடத்துகின்றனர்.


பகவ விநாயகர் கோயிலில் உள்ள பகவர் சிலை

கும்பகோணம் பகவர் விநாயகர் கோயிலுள்ள பகவர் சிலை, பூமாலை வைத்யநாதர் கோயிலில் உள்ள பிச்சாண்டவர் என்ற குறிப்போடு உள்ள சிலை, திருநாகேஸ்வரம் சிவன் கோயில் அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் உள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகள் புத்தர் சிலைகள் என்று கூறப்படுகின்றன.  

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள, செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டு திருவிளந்துறையில் புத்தர் கோயில் இருந்ததை உணர்த்தும் சான்றாக உள்ளது. திருவிளந்துறையில் தற்போது புத்தர் கோயிலோ, கோயில் இருந்ததற்கான தடயங்களோ காணப்படவில்லை.

இப்பகுதியில் காணப்படுகின்ற சிலைகளில் பெரும்பாலானவை பழையாறைப் பகுதியில் இருந்துள்ளன/இருக்கின்றன. அவற்றை நோக்கும்போது பழையாறையில் பௌத்தத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என எண்ணத்தோன்றுகிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள் மூலமாக பல புதிய செய்திகளைக் கொணரமுடியும். 

தஞ்சாவூர்ப் பகுதியில் காணப்படுகின்ற பெரும்பாலான புத்தர் சிலைகள் பிற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. அதனடிப்படையில் நோக்கும்போது சோழர் காலத்தில் பௌத்தம் நல்ல நிலையில் இருந்ததை அறியமுடிகிறது.  

20 ஜூலை 2022ஆம் நாள், தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி நடத்திய இணைய வழிக் கருத்தரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் பேசிய உரையின் சுருக்கம்.  



 

Comments

  1. தொடரட்டும் தங்களது சமூகப்பணி.

    ReplyDelete
  2. அருமையான பணி... ஆய்வு தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரும்பணி உங்களுடையது..நன்றி ஐயா .

    ReplyDelete

Post a Comment