பௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்
13 மே 2018 சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதாகவும், அதன் புகைப்படம் இருப்பின் அனுப்பிவைக்கும்படியும் கூறினார். 2007இல் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது காணப்பட்ட இந்த சிற்பத்தைப் பற்றி நாளிதழில் வந்த செய்தியை அனுப்பிவைப்பதாகக் கூறினேன். 14 மே 2018 மறுநாள், வலைப்பூ வாசகரான திரு அருள்முத்துக்குமரன் முகநூலில் தன் பக்கத்தில் அந்த புத்தர் சிற்பத்தைப் பார்க்கச் சென்றதையும், அது இரண்டு ஆண்டுக்கு முன்பாக திருடப்பட்டுவிட்டதாக அறிந்ததையும் குறிப்பிட்டு, திரு திருவள்ளுவன் அவர்களைச் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். 1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த களப்பணியின்போது சோழ நாட்டில் பல புதிய புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைக் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி, நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் ஆர்வம் காரணமாக அவர்களுடைய உதவியுடன் ஆய்வு எல்லைக்கு அப்பாலும் சில சிற்பங்களைக் காணமுடிந்த...