1993இல் ஆய்வுக்களத்தில் இறங்கியபோது தஞ்சாவூர் மாவட்டத்திலும், சோழ நாட்டிலும் உள்ள பௌத்த சமயம் தொடர்பான சான்றுகளை வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்டோரின் நூல்களிலும் கண்டேன். கள எல்லைக்கு அப்பாற்பட்டு பிற இடங்களைக் காண விருப்பம் இருந்தபோதிலும் பொருளாதார சூழல், நேரமின்மை காரணமாகச் செல்லும் வாய்ப்பு எழவில்லை. என்னுடைய ஆய்வுக்கு முதலில் நான் எடுத்துக்கொண்டது மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலாகும். அதில் அவர் கூறியிருந்த இடங்களில் என்னை அதிகம் ஈர்த்தது காஞ்சிபுரம் பகுதியாகும். காஞ்சிபுரத்தில் உள்ள, அவரும் அவருக்குப் பின் வந்த அறிஞர்களும் குறிப்பிட்டுள்ள, புத்தர் சிலைகளைக் காண ஆவல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanajvur district, Madurai Kamaraj University, Madurai, 1995), முனைவர்ப் பட்ட (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) ஆய்வேடுகளையும், (என் ஆய்வு நூலின் தமிழ்ப்பதிப்பையும் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம் , புது எழுத்து, காவிரிப்பட்டிணம், 2...