ஆய்வுக்கு ஓய்வேது? : பேராசிரியர் இராம. குருநாதன்
’சோழநாட்டில் பெளத்தம்’ நூலினைப் படித்து நெடுங்காலம் ஆயிற்று. பல்வேறு அலுவல்கள், பயணங்கள், கூட்டங்கள் எனக் காலம் கழிந்தது. இப்போதுதான் அந்நூல் பற்றி எழுதக் காலம் கனிந்தது. இருப்பினும் அலைபேசி வழியே தங்களின் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறேன். ஆய்வுக்கு ஓய்வேது? அலைகளுக்கும் காற்றுக்கும் ஓய்வுண்டா? தங்களின் ஆய்வுக்கும் தேடல் முயற்சிக்கும் ஓய்வேது?. இயங்கிக்கொண்டே இருப்பது உள்ளத்திற்கு உரமல்லவா! அது உடலுக்கும் உணர்வுக்கும் மகிழ்ச்சி அளிக்குமல்லவா? அந்த வகையில் இடைவிடாத முயற்சி தங்களுடையது. அதற்கென் வாழ்த்துகள்.
நூலில் நுழைந்ததுமே பதிப்புரையில் அரிய செய்திகளைக் குறிப்பிட்டிருப்பதும், தேடலில் பயணித்ததைத் தக்க வகையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரியவை. மிகவும் பழமையான மதங்களில் புத்த மதமும் ஒன்று. புத்தரின் சிந்தனைகள் தமிழகம் மட்டுமன்றி உலகெங்கும் பயணித்தவை. சங்க காலத்திலேயே புத்தர் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியப்புலவர்களின் கருத்தோவியங்களே சான்று. சங்க காலத்திய புலவர்கள் சிலர் புத்தமதத்தையும் தழுவியிருந்தார்கள். ஒரு சொற்பொழிவுக்காக, இலங்கைக்கு நான் சென்றிருந்தபோது, நம்மூரில் விநாயகர் சிலை எங்கெங்கும் தென்படுவதைப் போல, இலங்கையில் எங்குப் பார்த்தாலும் பல்வேறு வடிவங்களில் புத்தர் சிலை இருக்கக்கண்டு வியந்தேன்.
புத்தரின் பல்வேறு கருத்துகளை அரிதின் முயன்று நூலில் தந்துள்ளீர்கள். பெளத்தம் பற்றி அறிதற்கான நல்ல ஆவணம் தங்கள் நூல். நூல் உருவாக்கத்திற்கு உதவிய நண்பர்களைச் செய்ந்நன்றி அறிதலோடு சுட்டிக் காட்டியிருப்பது போற்றுதற்குரியது.
புத்தர் சிலைத் தொடர்பாகத் தமிழகத்தில் தாங்கள் மேற்கொண்ட பயணத்தைக் குறிப்பிட்டிருப்பதும், அசோகர் சாசனங்கள் வழியே சில தகவல்களைத்தந்திருப்பதும் பாராட்டுக்குரியவை. சங்க இலக்கியத்தில் இடம் பெறும் புத்தர் தொடர்பான சில செய்திகள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, மற்றும் பெளத்தம் குறித்த பிற்காலத்திய இலக்கிய. இலக்கண நூல்கள் குறித்த தகவல்கள், வெளிநாட்டார் குறிப்புகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் முதலியவற்றைத் தொகுத்தளித்த செய்திகள் பிறவும் நூலை அணிசெய்யும் விதத்தில் அமைந்துள்ளன. கள ஆய்வில் புகாரைப் படம் பிடித்துக்காட்டியிருப்பது நூலுக்கு வலு சேர்த்துள்ளது. விகாரங்கள் பற்றிய தகவல்களை ஆழமாக உணர்த்தியிருக்கிறீர்கள்.
சூளாமணி விகாரை, சீனக்கல்வெட்டு பற்றிய செய்தி, குடந்தை ஆதி கும்பேசுவரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டு, பெருஞ்சேரி, புத்தமங்கலம், மங்கலம் ஆகிய ஊர்களில் காணப்படும் புத்தர் தொடர்பான கோயில்கள், நாகையில் கிடைத்துள்ள செப்புத்திருமேனிகள், தஞ்சை பெருவுடையார் கோயிலில் காணப்படும் புத்தர் தொடர்பான சிற்பங்கள், தாராசுரம், திருவிடைமருதூர், அரியலூர் முதலிய இடங்களில் காணப்படும் முழுமையானதும், சிதைவுற்றதுமான சிலைகள், தஞ்சை கீழவாசலில் உள்ள புத்தர் சிலையைப் பிச்சாண்டவர் என்று கூறி மக்கள் வழிபட்டுவருதல் பற்றிய கருத்து, குடந்தை நாகேசுவரர் கோயிலில் உள்ள பகவத் விநாயகர் பற்றிய அரிய தகவல் முதலியவற்றை எடுத்துரைத்திருப்பது தங்களின் ஆய்வுத் தேடலின் ஆழமான - அகலமான அரிய முயற்சி!
பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது தங்களின் களப்பணி. இந்நூலைப் படித்தறியும் போது தங்களின் வாழ்நாள் முயற்சியாக மட்டும் இது நின்று விடவில்லை. அது ஒரு தொடரோட்ட முயற்சியாகவே தோன்றுகிறது. தங்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துகள். தொடரட்டும் புத்தர் பற்றிய ஆய்வும்தோய்வும்!
இராம. குருநாதன் எம். ஏ., எம்.லிட்,. பிஎச்.டி.,
தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
மேனாள் தமிழ்ப்பேராசிரியர் , பச்சையப்பன் கல்லூரி. சென்னை.
மேனாள் பொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி, டெல்லி
மேனாள் ஆட்சிக்குழு மற்றும் கல்விக்குழு. உறுப்பினர், செம்மொழி தமிழாய்வு மைய நிறுவனம்
செயலாளர், கன்னிமரா வாசகர் வட்டம், சென்னை
செயலாளர், சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம், குடந்தை
தலைவர், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
மேனாள் தமிழ்ப்பேராசிரியர் , பச்சையப்பன் கல்லூரி. சென்னை.
மேனாள் பொதுக்குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி, டெல்லி
மேனாள் ஆட்சிக்குழு மற்றும் கல்விக்குழு. உறுப்பினர், செம்மொழி தமிழாய்வு மைய நிறுவனம்
செயலாளர், கன்னிமரா வாசகர் வட்டம், சென்னை
செயலாளர், சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம், குடந்தை


Comments
Post a Comment