வருங்கால ஆய்வு மாணவர்களுக்கான பாடம் : ந. பழநிதீபன்
எனது நண்பர், தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி, தனது கடின உழைப்பாலும் நேர்மையாலும் பணி உயர்வு பெற்று உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வுப் பெற்று இருப்பவர் முனைவர் திரு. பா ஜம்புலிங்கம் அவர்கள்.
அவர் என் முகநூல் நண்பர் மட்டுமல்ல நான் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது அலைபேசியில் உரையாடி மகிழும் அன்பரும் ஆவார்.
அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் "சோழ நாட்டில் பௌத்தம்" என்கிற இந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணமாகும்.
ஆசிரியர் குளிர்சாதன அறைக்குள் இருந்து, பல்வேறு புத்தகங்களை அருகில் வைத்துக் கொண்டு அவைகளிலிருந்து ஆங்காங்கே சில செய்திகளை உருவி உருவாக்கிய புத்தகம் அல்ல இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நண்பரின் கடின உழைப்பும் அவரது நேர்மையும் அவரது வியர்வையும் நமக்கு வியப்பை ஏற்படுத்தி அன்னாரை அண்ணாந்து பார்க்க வைக்கும்!
எனது நண்பர், தனது கள ஆய்வின்போது சோழ நாட்டுப் பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது நேரடி கள ஆய்வின் வழியாக 19 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர்கள் சிலைகளையும் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனியையும் கண்டெடுத்து இந்த நூலில் ஆவணப்படுத்தி உள்ளார்.
அவைகளை அழகியலோடும் அச்சும் அசலும் பிசகாமலும் அப்படியே நூலில் வெகு நேர்த்தியாக கொண்டு வந்திருப்பது, ஆசிரியரின் உழைப்பையும் அவரது செய் நேர்த்தியையும் காட்டுகிறது.
ஒரு பல்கலைக்கழகம் முன்னின்று செய்ய வேண்டிய பணியையை தான் ஒருவரே "One man army" ஆக செயல்பட்டு செய்து முடித்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.
ஒரு சமயத்தின் இருப்பு என்பவை அதன் அடையாளங்கள். அதனை மிகவும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் எனது நண்பர்.
அவரிடம் காணப்படும் ஓர் அரிய குணங்களில் ஒன்று அவரது நேர்மை. எதையும் தனக்கு நம்பகமாக இருந்தால் அன்றி அதை பதிவு செய்வதை தவிர்த்து விடுவார் அவர். அந்த நேர்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் அவர் சேகரித்த குறிப்புகளை அடிக்கோடிட்டு ஆங்காங்கே புத்தகத்தில் சொல்லி இருப்பது, வருங்கால ஆய்வு மாணவர்களுக்கு ஒரு பாடமாகவே வைக்கலாம். வைக்க வேண்டும்!
புத்த விகாரையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்படி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பதை நாம் பார்த்திருக்க மாட்டோம். அத்தகைய ஒரு புத்த விகாரையை பூம்புகாரில் நேரடி கள ஆய்வின் மூலம் கண்டறிந்து, அதை புத்தகத்தின் அட்டையில் மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.
வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் ஆர்வலர்கள், பௌத்த சமய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், வெளிநாட்டினர் என யாவரும் கண்டு பயன் பெறும் வகையில் புத்தகம் எளிமையாகவும் அதேவேளையில் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது, இந்த நூலின் தனிச்சிறப்பாகும்.
தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள மிக முக்கியமான தொல்லியல், வரலாற்று சமய ஆவணம் இது.
புத்தகத்தின் ஆசிரியரும், எனது நண்பரும், எனக்கு அவ்வப்போது வாழ்வியல் ஆலோசனைகளைக் கூறி வழிநடத்துபவருமான, அன்பர், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
ந.பழநிதீபன், M.A., B.L.,
வழக்கறிஞர்.

Comments
Post a Comment