பௌத்த சுவட்டைத் தேடி : மங்கலம்
மே 1998
8.5.1998இல் வந்த தி இந்து நாளிதழில் என் ஆய்வுப்பகுதியில் காணப்படுகின்ற ஒரு புத்தர் சிலையைப் பற்றிய செய்தியைக் கண்டேன். இதுவரை நூல்களையும், கட்டுரைகளையும் சான்றுகளாகக் கொண்டிருந்த எனக்கு முதன்முதலாக நாளிதழ் செய்தியும் சான்றாக அமைந்ததைக் கண்டேன். அன்று வந்த செய்தி (10th century Buddha statue to get separate shrine, The Hindu, 8.5.1998) மூலமாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மங்கலம் என்னுமிடத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளதாகவும், அதை வைப்பதற்காக தனியாக ஒரு சன்னதி கட்டப்பட்டு வருவதாகவும் வரலாற்றறிஞர் திரு கி.ஸ்ரீதரன் கூறியிருந்தார். அந்தப் புத்தர் மீசையோடு இருந்ததும், அது நாளிதழ்களில் செய்தியாக வந்ததும் நினைவில் நிற்கும் அனுபவம்.
ஜூன் 1998
செய்தி வந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் தழைத்த பௌத்தம் என்ற தலைப்பில் என் உரையினைப் பதிவு செய்வதற்காக திருச்சி, அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றேன். பதிவு முடிந்தபின் அங்கிருந்து மங்கலம் செல்லத் திட்டமிட்டு, திருச்சியிலிருந்து முசிறிக்குச் சென்றேன்.
கிட்டத்தட்ட நடுப்பகல். பேருந்திற்காக விசாரித்தபோது தாத்தையாங்கார்பேட்டை செல்லும் பேருந்துகளும், மேட்டுப்பாளையம் செல்லும் சில பேருந்துகளும் மங்கலம் வழியாகச் செல்லும் என்றனர். நேரத்தை வீணாக்காமல் இருப்பதற்காக அங்கேயே மதிய உணவினை உண்டேன். சிறிது நேரத்தில் அங்கிருந்து ஜம்புநாதபுரம், புதூர், மங்கலம் வழியாகத் தாத்தையங்கார்பேட்டை செல்லும் பேருந்து வந்து சேர்ந்தது. பேருந்தில் பயணிக்கும்போது களத்தில் முதன்முதலாக ஒரு புத்தரைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலும் என்னுடன் தொடர்ந்தது.
மங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அருகிலிருந்த அரவாயியம்மன் கோயிலுக்குச் சென்றேன். அக்கோயிலை அரவாண்டியம்மன் கோயில் என்றும் கூறுகின்றனர். அரவாயி அம்மன் சன்னதிக்கு வலது புறத்தில் பொறைக்கலாரு அம்மன் சன்னதி இருந்தது. இடது புறத்தில் அமர்ந்த நிலையில் கம்பீரமாக ஒரு புத்தர் சிலை இருந்தது. முதன்முதலாக மிகப்பெரிய புத்தர் சிலையைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
அருகில் அந்தப் புத்தர் சிலையை வைப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த, நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்த, தனி சன்னதியைக் கண்டேன். அதன் கட்டுமானப்பணி முடியும் தருவாயில் இருந்தது.
உள்ளூரில் விசாரித்தபோது “இந்தக்கோயில்ல சனிக்கிழமையும், சில சமயத்துல திங்கட்கிழமையும் பலியிடல் இருக்காது. மத்த நாள்ல பிராணிகளைப் பலியிடுவாங்க. அது தெரியாம இருப்பதற்காக புத்தர் செலைக்கு முன்னாடி தெரை போட்டு மறைச்சுடுவோம்”, “கும்பகோணத்துப் பக்கத்துலகூட புத்தர் கோயில் இருக்குன்னு சொல்லிக்கிறாங்க.” என்று கூறினர். “அரவாயியம்மன்தான் எங்களுக்குக் குலதெய்வம். புத்தர் பலியிடுவதை விரும்பமாட்டார். அதனாலத்தான் தனியா சன்னதி கட்டியிருக்காங்க” என்றார் மற்றொருவர். இருட்ட ஆரம்பிக்கவே, ஒளிப்படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு, புத்தரைப் பார்த்த மன நிறைவுடன் அங்கிருந்து முசிறி திரும்பினேன். பின்னர் குளித்தலையில் உள்ள, தேவாரப்பாடல் பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.
ஏப்ரல் 1999
பிற இடங்களுக்குக் களப்பணி சென்ற நிலையில் இந்தப் புத்தரைப் புகைப்படம் எடுப்பது தள்ளிக்கொண்டே போனது. ஒரு முறை பேட்டைவாய்த்தலைக்குச் செல்லும்போது மங்கலம் புத்தரைக் காணவும், புகைப்படமெடுக்கவும் திட்டமிட்டு அங்குச் சென்றேன். பேட்டைவாய்த்தலை புத்தரைப் பார்த்துவிட்டு அங்கிருந்துமங்கலம் புறப்பட்டேன்.
சில மாதங்களுக்கு முன் பார்த்த புத்தரை மறுபடியும் கண்டேன். சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்கங்கள் இருப்பதைக் கண்டேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் போது சோழ நாட்டில் பிற புத்தர் சிலையில் இல்லாத ஒரு சிறப்புக்கூறினை முகத்தில் கண்டேன். சிலையில் புத்தருக்கு மீசை இருந்தது. இந்தச் சிலை மட்டுமே மீசையுடன் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. புத்தருக்கு மீசையா என்ற ஐயம் இருந்தபோதிலும், மன்னரைக் குறிக்கும் வகையிலோ, வீரத்தைக் குறிக்கும் வகையிலோ, சிற்பியின் ஆர்வம் காரணமாகவோ மீசையை வைத்திருக்கலாம் என்று நினைத்தேன். அருகில் உள்ளோரை விசாரித்தபோது அவர்களுக்கு மீசையைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. "இந்தப் புத்தரை நாங்க செட்டியார்னு சொல்லிதான் கும்புடுறோம். கோயிலில் திருட வந்தவரை அம்மன் சபிச்சு கல்லாக்கிட்டாங்க. வெற எதுவும் தெரியாது. இங்கதான் புத்தருக்குத் தனியா சன்னதி கட்டிக்கொண்டிருக்கோம்" என்று கூறினர்.
தகவல் கூறியவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து முசிறி-குளித்தலை-திருசசி வழியாகத் தஞ்சாவூருக்குத் திரும்பினேன். வந்துகொண்டிருந்தபோது மீசை பற்றிய நினைவும் என்னைத் தொடர்ந்தது. தஞ்சாவூர் வந்தபின் ஸ்ரீதரனைத் தொடர்புகொண்டு, அங்குச் சென்று, புத்தரைப் பார்த்ததையும் அதற்கு மீசை உள்ளதையும் கூறினேன். ஆச்சர்யப்பட்டு இது புதிய செய்தியாக உள்ளது என்று கூறி என்னைப் பாராட்டியதோடு, நாளிதழ்களில் செய்தியாகத் தரலாம் என்றார்.
ஜூன் 1999
சில நாள்களுக்குப் பின் செய்திக்குறிப்பிற்கான வரைவினைத் தமிழ்த் தட்டச்சுப்பொறியிலும், ஆங்கிலத் தட்டச்சுப் பொறியிலும் தட்டச்சு செய்தேன்.
அதனை நெறியாளர் முனைவர் க.பாஸ்கரனிடமும், வரலாற்றறிஞர் திரு குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் காண்பித்தேன். பின்னர் அதனை 15 படிகள் செராக்ஸ் எடுத்து, அத்துடன் மீசை புத்தர் சிலையின் ஒளிப்படத்தை இணைத்து நாளிதழ்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தேன். என் ஆய்வு தொடர்பான முதல் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி இதுவேயாகும். பெரும்பாலான இதழ்களில் அச்செய்தி வெளியானது. என்னுடைய முனைவர்ப் பட்ட ஆய்வேட்டினை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அளித்தபோது அதில் இக்கண்டுபிடிப்பு தொடர்பான நாளிதழ் செய்தியை இணைத்தேன்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு கி.ஸ்ரீதரன், திரு அறவாணன், திரு அறவன்,
திரு சங்கரநாராயணன், திரு மல்லன்,
நாளிதழ்கள்
-------------------------------------------------------------------------------------------
அடுத்தடுத்து பல முறை அங்கு சென்றேன். அது தொடர்பான அனுபவங்களைத் தொடர்ந்து காண்போம்.
பிப்ரவரி 2009
ஈரோடு மாவட்டம், காங்கேயம் வட்டம் வெள்ளக்கோயில் அருகில் உள்ள குருக்கத்தியில் நடைபெற்ற, என் சகலை திருமூர்த்தியின் இல்லக் குலதெய்வமான மாசி பெரியசாமி கோயில் கும்பாபிஷேகத்திற்காகக் கரூர் சென்றபோது மீசை புத்தர் நினைவிற்கு வந்தார். விழாவின் முதல் நாள் மகிழ்வுந்தில் மங்கலம் சென்றேன். முந்தைய பயணங்களில் சந்தித்த பலரைக் கண்டேன். முன்பிருந்த சிறிய சன்னதிக்கு முன்பாக முகப்பு மண்டபம் ஒன்றை 2002இல் புதிதாகக் கட்டியுள்ளதையும் கண்டேன். மண்டபத்தின் முகப்பில் அமர்ந்த நிலையிலுள்ள சுதையாலான புத்தர் சிலை உள்ளது. அரவாண்டியம்மன் கோயிலின் இடப்புறத்தில் காணப்படுகின்ற மீசையுடன் கூடிய புத்தர் சிலையை மண்டபத்துடன் கூடிய சிறிய சன்னதியில் வைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து வழிபாடு நடப்பதைக் கண்டேன். சன்னதியில் புத்தரை அமைக்கும் நன்னாளை உள்ளூர் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
மே 2022
சோழ நாட்டில் பௌத்தம் நூலின் ஆங்கிலப்பதிப்பு அச்சாகிக் கொண்டிருந்தபோது மங்கலம் சென்று மறுபடியும் மீசை புத்தரைக் கண்டுவந்தேன்.
![]() |
அரவாண்டியம்மன் கோயில் நுழைவாயில் |
![]() |
அரவாண்டியம்மன் கோயிலில் புத்தருக்காகக் கட்டப்பட்ட தனி சன்னதி (அதன் வலது புறத்தில் புத்தர் சிலை தனியாக வெளியே உள்ளது) |















Comments
Post a Comment