வருங்கால ஆய்வாளர்களுக்கு முக்கியத் தரவு : ஜெயபால் இரத்தினம்
உலகின் பழமையான ஆன்மீகப் பாதைகளில் ஒன்றான பௌத்தம், தமிழகத்தில் பொதுக்காலத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பரவத்தொடங்கி, பல நூற்றாண்டுகள் வரை உயர் செல்வாக்குடன் திகழ்ந்திருந்து, பின்னர் படிப்படியாக செல்வாக்குக் குறையத்தொடங்கி, பின்னர் சோழர்ஆட்சியில் புத்தெழுச்சி பெற்றது என்பதும், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் செல்வாக்கிழந்தது என்பதும் ஆய்வாளர்கள் அளிக்கும் தகவல்கள். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையுடனும், வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் இலக்குகளுடனும் செயல்பட்டு, நீண்ட நெடிய காலம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த பௌத்தம் ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகியப் பரப்புக்களில் பல அழியாத முத்திரைகளைப் பதித்துள்ளது. அது விட்டுச்சென்ற தடயங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் புத்தர் பெருமான் சிலைகள். தமிழகத்தில் நிலவிய பௌத்தமதப் பரவலுக்கு சான்றளிக்கும் முக்கியத் தரவுகளில் ஒன்றாக விளங்குவது புத்தர் சிலைகள்.
சோழநாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கும் புத்தர் சிலைகள் குறித்த ஆய்வாக வெளிவந்திருக்கும் நூல் ‘சோழநாட்டில் பௌத்தம்’. நூலாசிரியர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள். வெளியீடு: ’படிமம்’ நிறுவனம் காவேரிப்பட்டிணம். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலரும் ஆய்வாளருமான முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள் தனது நீண்டகாலத் தேடல் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் சோழநாட்டுப் பகுதிகளில் தான் நேரில் கண்டறிந்த மற்றும் படித்தறிந்த புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த தடயங்கள் பற்றிய அரியத் தகவல்களைத் தொகுத்தும் சிலைகளின் நேர்த்தியான ஒளிப்படங்களை இணைத்தும் பதிவு செய்துள்ள ஒரு சிறப்பான வரலாற்று ஆவணம் இந்நூல்.
இந்நூலில், சோழநாடு - அசோகரின் சாசனங்கள்- இலக்கியம், பிற சான்றுகள்- பௌத்த விகாரங்கள் கோயில்கள்- நாகப்பட்டிணம் புத்தர் திருமேனிகள்- புத்தர் சிற்பங்கள்- புத்தர் சிலைகள்- புத்துயிர் பெறும் பௌத்தம் ஆகிய எட்டுத் தலைப்புக்களில் விரிவான விவரங்களையும் ஒளிப்படங்களையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
சோழநாடு- என்னும் தலைப்பிட்ட முதல் அத்தியாயம், சோழநாட்டு எல்லை குறித்த பொதுவான செய்திகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட எல்லைப் பரப்பையும் விவரிக்கிறது. சோழநாட்டின் எல்லைகளாக ’சோழமண்டல சதகம்’ குறிப்பிடும், தென் வெள்ளாறு, வடவெள்ளாறு, கோட்டைக்கரை மற்றும் வங்கக்கடல் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகள் மட்டுமே சோழநாட்டு ஆள்நிலப்பகுதி அல்லது எல்லை என்றக் கருத்தியலின் அடிப்படையில், தற்போதைய தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைக் உள்ளடக்கியப் பகுதிகள் ஆய்வுக்கு உட்பட்ட பகுதிகளாக நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி ஆய்வு மேற்கொள்ளட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால், கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் பதிவு பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் சோழநாட்டில் அடங்கியிருந்த ஊர்கள், கூற்றங்கள், நாடுகள், சிற்றரசுகள், வளநாடுகள் ஆகியவற்றின்படி ஆய்வாளர்கள் அறுதியிடும் சோழப்பேரரசின் ஆள்நிலப் பரப்பு, இதனினும் மிகவும் பரந்து விரிந்திருந்தது என்பதே எதார்த்தம்.
ஆய்வெல்லையை, இன்றைய மாவட்ட எல்லை அடிப்படையில் அல்லாமல், சோழப் பேரரசு செயல்பட்ட காலத்தில் நடைமுறையிலிருந்த ஆள்நிலப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் ஆய்வெல்லை இன்னும் பரந்து விரிந்திருக்குமே; அதன்படி இன்னும் கூடுதல் தகவல்கள் சேகரம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்குமே; அதன் பயனாக மேலும் பல செய்திகள் வாசகப் பரப்பிற்குக் கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம் இந்நூலை வாசிக்கும் ஆய்வாளர்களுக்கு எழுவது நியாயமானதே. உதாரணம், பௌத்த மத ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட தியாகனூர், வீரசோழ நல்லூர்(இன்றைய வீரகனூர்), தடாவூர் ஆகிய ஊர்களில் காணப்படும் புத்தர் சிலைகள் இந்நூலின் ஆய்வுப் பரப்பில் இடம் பெறவில்லை. இவை சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆற்றூர் கூற்றத்தில் அடங்கிய ஊர்கள்தாம். இவ்வூர்கள் சோழர்கள் கால கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.
’அசோகரின் சாசனங்கள்’ என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தில் தென்னகத்தில் பௌத்தமதப் பரப்பல் குறித்து பேரரசர் அசோகர் வெளியிட்ட சாசனங்கள் மற்றும் அவர் பொறித்த கல்வெட்டுகள் ஆகியவை விவரிக்கப்படுகிறது. ’இலக்கியம், பிறசான்றுகள்’ என்னும் தலைப்பிலான மூன்றாவது அத்தியாயம், பௌத்தமதம் தொடர்புடைய தமிழ் இலக்கண மற்றும் இலக்கிய நூல்கள் பற்றிய விவரங்களையும், சங்கத் தொகை நூல்களில் காணப்படும் பௌத்தக் கருத்துக்கள் குறித்தப் பாடல்களையும் அடையாளப்படுத்துகிறது. தவிர, பொ.ஆ. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த சீன நாட்டவரான ’யுவான் சுவாங்’ என்பவரது ஆய்வுக் குறிப்புக்களின் சாரமும் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வத்தியாயத்தில், தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்களில் ’பௌத்தப்பள்ளி’ மற்றும் ’பௌத்த சங்கம்’ ஆகியவை செயல்பட்டது மற்றும் பௌத்த பள்ளிக்கு நிலக்கொடை வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
’பௌத்த விகாரங்கள், கோயில்கள்’ என்னும் தலைப்பிலான நான்காவது அத்தியாயம் பூம்புகார், நாகப்பட்டிணம் ஆகிய முந்தையகாலத் துறைமுக நகரங்களுக்கும் பௌத்த மதத்திற்கும் உள்ளத் தொடர்புகள் மற்றும் தற்போது அங்கே கிடைக்கும் எச்சங்கள் குறித்தத் தகவல்களையும், திருவிளந்துறை, பெருஞ்சேரி, புத்தமங்கலம் ஆகிய மற்ற ஊர்களில் காணப்படும் எச்சங்கள் குறித்தும் விவாதிக்கிறது.
’நாகப்பட்டினம் புத்தர் செப்புத்திருமேனிகள்’ என்னும் தலைப்பிட்ட ஐந்தாவது அத்தியாயத்தில் முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியப் சோழப்பெருவேந்தர்கள் காலத்தில் நாகப்பட்டிணத்தில் கட்டப்பட்ட பௌத்த விகாரம் அமைந்திருந்த பகுதிகளிலிருந்து முன்னூற்று ஐம்பது புத்தர் செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டதையும், அவற்றில் பல நாகப்பட்டிணம் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், அவற்றில் பல, சென்னை, கல்கத்தா,பாட்னா, நாக்பூர், திருவனந்தபுரம், குவாலியர், பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், பரோடா, ராஜ்கோட், மும்பை, ஆகிய இந்திய நகரங்களில் அமைந்துள்ள அருங்காட்சியகங்களிலும் மற்றும் லண்டன், டாக்கா (வங்கதேசம்), மும்பை, மியான்மர் (பர்மா), கொழும்பு (இலங்கை) லாகூர் மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) ஆகிய வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களிலும் இடம் பெற்றிருக்கும் அரியத் தகவல்களையும் விவரிக்கிறது. தவிர, தஞ்சாவூர், அய்யம்பேட்டை, செல்லூர், ரெட்டிப்பாளையம், நாகப்பட்டிணம் மற்றும் பேராவூரணி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளின் வடிவமைப்பு குறித்த விரிவான விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் காணப்படும் சிற்பத் தொகுதி ஒன்றில் புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய நிகழ்வுகள் பதிவு பெற்றிருப்பதையும், கும்பகோணம் ஐராவதீசுவரர் கோவில் மற்றும் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் ஆகியக் கோவில்களில் காணப்படும் புத்தர் சிற்பங்களின் வடிவமைப்பு குறித்த விவரங்கள் உரிய ஒளிப்படங்களுடன் ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அத்தியாயத்தில் கோவிலில் இடம்பெற்றுள்ள புத்தர் சிற்பங்கள் மட்டுமேப் பேசப்பட்ட நிலையில், அடுத்த அத்தியமான எழாம் அத்தியாயம், கோவில் அல்லாத பிற இடங்களான பொதுவெளிகள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட இடங்களில் காணப்படும் புத்தர் சிலைகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. நூலின் முப்பத்தெட்டாம் பக்கம் முதல் நூற்றி ஐம்பத்து மூன்று பக்கங்கள் வரையுள்ள நூற்றிப் பதினாறு பக்கங்களில் சிலைகள் கிடைக்கும் ஊர்கள் அங்குள்ள சிலைகள் பற்றிய தனிப்பட்டக் குறிப்புக்களை ஒளிப்படங்களுடன், விரிவாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். மேலும் இதே அத்தியாயத்தின் அடுத்து வரும் பதினைந்து பக்கங்களில், ஏற்கனவே புத்தர் சிலைகள் இருந்ததாகக் கூறப்படும் செட்டிப்பட்டி, மங்கநல்லூர் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய ஊர்களில் தற்போது அங்கு அச்சிலைகள் காணப்படவில்லை என்றத் தகவலையும், ஆலங்குடிப்பட்டி, குளித்தலை, திருநாகேஸ்வரம், பெருமத்தூர், பெண்ணகோணம், கீழவாசல், வெள்ளனூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் காணப்படும் சிலைகள் புத்தர் சிலைகள் என சிலரால் கூறப்பபட்டாலும் உண்மையில் அவை, சமண தீர்த்தங்கரரான மகவீரர் சிலைகள்தாம் என்பதை சிலையின் வடிவமைப்பு குறித்த விவரணைகளுடனும் ஒளிப்படங்களுடனும் பதிவு செய்துள்ளார். இவரது நீண்டகால ஆய்வு மற்றும் களப்பணிகளின் தொகுப்பாக அமைந்த சிறப்பான பதிவுகள் இவை.
’புத்துயிர் பெறும் பௌத்தம்’ என்னும் தலைப்பிலான எட்டாவது அத்தியாயத்தில், பொதுவெளிகளில் காணப்படும் புத்தர் சிலைகள் குறித்த கள நிலவரத்தையும், சில ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளன. சிலைகள் கணடறியப்பட்ட இடங்களில் முன்பு புத்தர் கோவில்கள் அமைந்து செயல்பட்டு வந்திருந்து பின்னர் ஏதோ காரணங்களால் கோவில் அழிந்திருக்க வேண்டும் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இது ஏற்புடையக் கருத்துதான்.
ஆரம்பத்தில் பல இடங்களில் கேட்பாரற்று கிடந்த சிலைகளில் பல தற்போது மக்கள் பராமரிப்பில் உள்ளன எனவும் அவற்றுள் சில அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மீதமுள்ளவை அந்தந்த ஊர்களில் பொதுவெளிகளில் உள்ளன என்பதையும் அவை உரிய வகையில் பாதுகாக்கப்பட ஆவண செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், உரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் சில ஊர்களில் உள்ள சிலைகள் சேதமுற்று தலை இல்லாமல் உடல் மட்டுமே உள்ள நிலையில் காணப்படுவதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்
புத்தர் நல்லதைத்தான் செய்வார், மழைபெய்யச் செய்வார், நல்ல விளைச்சல் கிடைக்கச் செய்வார், நன்மைகள் பல தருவார் உள்ளிட்ட நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளன என்ற செய்தியையும், தங்கள் ஊர்களில் உள்ள புத்தர் சிலையை முக்கியப் பண்டிகை நாட்களில் மலர்களால் அலங்கரித்தும், குங்குமம், திருநீறு பூசியும், செப்புத் திருவிளக்குகள் எரியச்செய்தும், கற்பூரம் ஏற்றியும் அங்குள்ள மக்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர் என்ற செய்தியையும் பதிவிட்டுள்ளார். இந்த நம்பிக்கை பெரும்பாலான ஊர்களில் இருப்பது உண்மைதான். சில ஊர்களில் உள்ள புத்த சிற்பங்கள் சாம்பான், செட்டியார், பழுப்பர், சிவனார், ரிஷி, என்ற பல பெயர்களில் பொதுமக்களால் அழைக்கப் படுவதையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் அளிக்கும் மற்றொரு செய்தி, மீசையுடன் கூடிய புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டிருப்பது. இவை எல்லாமே, தமிழ்ச் சமூக மக்களின் பண்பாட்டோடு ஒப்புநோக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்த்துவதாக உள்ளது.
ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலும், வருங்காலத் தலைமுறையினர் பௌத்த வரலாற்றை அறிந்து கொள்ளவும் மற்றும் பௌத்த சுவடுகளப் பாதுகாக்கும் வகையிலும் சோழநாட்டில் காணப்படும் புத்தர் சிலைகளை ஒருங்கிணைத்து ஒரு 'பௌத்த வட்டகை (Buddhist Circuit)' ஏற்படுத்த வேண்டும் என ஒரு ஆலோசனையையும் நூலாசிரியர் முன் மொழிகிறார்.
நூலாசிரியர், தனது ஆய்வுக்குத் துணைநின்ற அலுவலர்கள் தகவலர்கள் குறித்த விவரங்கள், சிலைகள் உள்ள இடங்களது பட்டியல், துணை நூற்கள் பட்டியல், நாளிதழ்கள் துணுக்குகள் ஆகியவற்றை ஒளிப்படங்களையும் பின்னிணைப்புக்களாக, வழங்கியுள்ளார். மேலும், கள ஆய்வின்போது சிலைகள் அருகில் நின்று எடுத்துக் கொள்ளப்பட்ட ஒளிப்படங்களையும் இணைத்துள்ளார்.
நூலின் முதல் பக்கத்தில் தொடங்கி இறுதிப்பக்கம்வரை வாசித்து முடிக்கும் போது சோழநாட்டிற்குட்பட்டிருந்த ஊர்களுக்குள் ஒரு பௌத்தப் பயணம் மேற்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. சோழ நாட்டில் உள்ள புத்தர் சிற்பங்களை மக்களுக்கு அறியப்படுத்த வேண்டுமென்பதில் நூலாசிரியர் மிகுந்த அக்கரையுடன் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதை உணரமுடிகிறது.
இந்நூலில் இணைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான ஒளிப்படங்கள் ஒரு முக்கிய ஆவணத்தொகுப்பாக அமைகிறது. புத்தர் சிலைகள் உள்ளிட்ட வரலாற்று எச்சங்கள் வேகமாக மறைந்து வரும் இன்றையக் காலச்சூழலில், இந்த ஒளிப்படங்கள் இன்றைய மற்றும் வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கியத் தரவாக அமையும் என்பதுத் திண்ணம். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நூல் தமிழக பௌத்த சமய வரலாற்று வரைவுக்கு பெரும் பங்களிப்பு நல்குவதாக அமைந்துள்ளது. சிறந்ததொரு நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
- ஜெயபால் இரத்தினம்
நூலாசிரியர்: தமிழக வரலாற்றில் பெரம்பலூர்


Comments
Post a Comment