பௌத்தக் கலைக் களஞ்சியம் : முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன்

தமிழர் பண்பாட்டில் சிறந்து விளங்கும் கலைகளில் சிற்பக்கலை முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இக்கலையானது வேத ஆகமங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள் அடிப்படையில் பல்வேறு சமயங்களில் காணப்படுகின்ற இறை உருவங்களை வழங்க உருவானதாகும்.

முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜனுடன் நூலாசிரியர்

மனித வடிவில் தோன்றி, மக்களைப் பண்படுத்தப் பல்வேறு ஒழுக்க நெறிகளைப் போதித்து இறை நிலையை அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகாவீரரும், கௌதம புத்தரும் ஆவர். தமிழகத்தில் இன்றளவும் சமணத்தையும், பௌத்தத்தையும் பின்பற்றுபவர்கள் உள்ளனர். 


சைவ, வைணவ சமயங்கள் மறுமலர்ச்சி அடைவதற்கு முன்பாகச் சமணமும், பௌத்தமும் பரவியிருந்தன. நாளடைவில் அரசியல் மாற்றத்தால் அவை வீழ்ச்சியுற ஆரம்பித்தாலும் அவற்றைத் தொடர்பவர்கள் ஆங்காங்கே வாழ்ந்துள்ளனர். அவர்கள் தனிக்கோயில்கள் எடுப்பித்தும், தொழில் சார்ந்தவர்கள் தாம் செல்லும் இடங்களில் தனியாகச் சிற்பங்களை வைத்தும் வழிபட ஆரம்பித்துள்ளனர்.


இவ்வழிபாட்டில் பௌத்த சமயத்தினைச் சோழ அரச மரபினர் போற்றி வளர்த்த விதம் குறிப்பிடத்தக்கதாகும். அதற்குச் சான்றாக முதலாம் இராஜராஜசோழன் காலத்து நாகப்பட்டினப் புத்த விகாரத்தைக் கூறலாம். அவ்வரச மரபின் ஆதரவில் பௌத்தம் சிறப்பாக இருந்ததை எடுத்துக்காட்டும் சான்றுகளாகச் சோழ நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலைகள் உள்ளன. அவ்வாறான பல சிலைகளை நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம், தன்னுடைய ஆய்வுக்காலத்திலும், ஆய்வேடுகளை அளித்த பின்னரும் கண்டறிந்துள்ளார்.


ஆய்விற்கு முழு வடிவம் தரும் வகையில் நூலாசிரியர், சோழ நாட்டில் அவர் கண்ட புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான பிற சான்றுகளையும் ஒருங்கிணைத்து ஆய்வேட்டின் தலைப்பிலேயே சோழ நாட்டில் பௌத்தம் என்ற நூலைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். முனைவர்ப் பட்ட ஆய்வு நூல் வடிவம் பெறுவது இவ்வகையில் சிறப்பானதாகும்.


தமிழ்ப்பதிப்பில் 63 புத்தர் சிலைகள் உள்ள இடம், சிலையின் அமைப்பு, வழிபாடு, தொடர்புடைய நம்பிக்கைகள், புத்தர் சிலைகள் என்று கூறப்படுகின்ற பிற சிலைகள், சுவடின்றி மறைந்துபோன சிலைகள் ஆகியவற்றை உரிய சான்றாதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளார். சற்று மேம்படுத்திய ஆங்கிலப்பதிப்பில் மேலும் இரு புதிய புத்தர் சிலைகளைப் பற்றிய தரவுகளை இணைத்துள்ளார். வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலில் தொடங்கி, அவருக்குப் பின் இத்துறையில் வெளியான குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களின் நூல்களையும் அவர் ஒப்புநோக்கி பட்டியலிட்டுள்ளார். அவர் கண்டுபிடித்த புதிய புத்தர் சிலைகளைப் பற்றிய செய்திகள் வெளியான நாளிதழ் நறுக்குகளை நூலில் இணைத்துள்ளார்.  


இரு பதிப்புகளிலும் சோழ நாடு, அசோகரின் சாசனங்கள், இலக்கியம், பிற சான்றுகள், பௌத்த விகாரங்கள், கோயில்கள், நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனிகள், புத்தர் சிற்பங்கள், புத்தர் சிலைகள், புத்துயிர் பெறும் பௌத்தம் என்ற உட்தலைப்புகளில் தொடர்புடைய பொருண்மைகளை உரிய அடிக்குறிப்புகளோடு அழகுற எடுத்து இயம்பியுள்ளார்.  


பௌத்த சமயத்தவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கருவி நூலாக அமைந்துள்ள இந்த அரிய படைப்பினைப் பௌத்தக் கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். நூலின் அட்டைப்படம், உள்ளே உள்ள படங்கள், வடிவமைப்பு போன்றவை பதிப்பிற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. நூலைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் கொணர்ந்த நூலாசிரியருக்கும், அவற்றைச் சிறப்பாக வெளியிட்டுள்ள புது எழுத்து பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன்
-------------------------------------------------------------------------------------------

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:


Comments