பௌத்த சுவட்டைத் தேடி : பழையாறை

2 ஜூலை 2023இல் நானும் என் மனைவியும் கும்பகோணத்திற்கு நண்பர் திரு செல்வம் அவர்களின் இளைய மகன் திரு பாலாவின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்விற்காகச் சென்றபோது, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கும், துர்க்கையம்மன் கோயிலுக்கும் சென்றோம். துர்க்கையம்மன் கோயிலில் நண்பர் புலவர் திரு ச.செல்வசேகர் அவர்களைச் சந்திக்கும்போது அவர் பழையாறையில் ஒரு புத்தர் சிலையின் தலை உள்ளதாகக் கூறினார். அப்பகுதியில் முழையூரில் முன்னரே புத்தர் சிலை உள்ளதைப் பற்றிக் கூறியபோது அவர் கீழப்பழையாறையில் உள்ளதாகக் கூறினார். உடனே அங்கு செல்ல முடிவெடுத்தோம். 

வழக்கமாக தாராசுரத்தில் ஆட்டோ எடுத்துக்கொண்டு பட்டீஸ்வரம் சென்று, பின்னர் அங்கிருந்து கும்பகோணத்திற்குப் பயணிப்போம். அவ்வகையில் பட்டீஸ்வரம் சென்றிருந்தோம். இப்போது பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம்.  பட்டீஸ்வரத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கீழப்பழையாறைக்குச் சென்றோம். 

நண்பர் இல்ல நிகழ்விற்காகச் சென்று புத்தரைப் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம். முதன்முதலாக என் மனைவியும் களப்பணியின்போது உடன் வந்திருந்தார். 

பட்டீஸ்வரம் அருகே கீழப்பழையாறையில் ஒரு தோப்பில் சற்றே சிரமப்பட்டு உள்ளே சென்றோம். புத்தர் சிலையின் தலைப்பகுதியைக் காண உடன் வந்த திரு செல்வசேகர் உதவினார். அருகில் உள்ளவை சூரியன், உஷாதேவியின் சிற்பங்கள் என்றார். அவை உடைந்த நிலையில் இருந்தன.

புத்தர் தலை 50 செ.மீ. உயரமிருந்தது. இதே அமைப்பில் உள்ள முன்னர் களப்பணியில் கண்ட சிலையைப் போலவே இது இருந்தது. அவ்வகையில் இது கி.பி.10-11ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிலைகளின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், நெற்றியில் திலகக்குறி ஆகியவற்றுடன் ந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன. இந்தச் சிலை, உடற்பகுதியுடன் பழையாறையில் முன்பிருந்த புத்தர் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம்.







ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் உள்ளன. அவற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. அருந்தவபுரம், கோபிநாதப்பெருமாள்கோயில், மணலூர் ஆகிய இடங்களில் தலையின்றியும், பெரண்டாக்கோட்டை, முழையூர், வையச்சேரி ஆகிய இடங்களில் தலைப்பகுதி மட்டுமேயும் உள்ளன. பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன. 

சிதைந்த நிலையில் காணப்படுகின்ற சிலைகள் சமயக்காழ்ப்பையும், வரலாற்று விழிப்புணர்வு இல்லா நிலையையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான வரலாற்றுச் சான்றுகள் அக்கால சமய நிலைக்கான ஆதாரங்களாக உள்ள நிலையில் இவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

ஞ்சாவூர் மாவட்டத்தில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் பௌத்தம் செழித்து இருந்ததை உணர்த்தும் சான்றுகளாக உள்ளன. 




நன்றி : 
புலவர் ச.செல்வசேகர் 
செய்தி வெளியிட்ட நாளிதழ்கள், ஆகஸ்டு 2023 போதி முரசு இதழ்

-----------------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் (முனைவர் பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, காவேரிப்பட்டினம், 2022) நூல் வெளியானபின் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.  அந்நூலில் இடம்பெறாத இச்சிலையைப் பற்றிய குறிப்பு ஆங்கிலப்பதிப்பில் (p.124, Dr B.Jambulingam, Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, Kaveripattinam, 2023) இடம்பெற்றுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
1 ஜனவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

  1. தங்களது களப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மதவாதம் எந்தளவு கொடூரமாக இருந்துள்ளது என்பது புரிகிறது...

    ReplyDelete
  3. தங்களுடன் பழையாறைக்குப் பயணித்த நினைவுகள் வருகின்றன.

    ReplyDelete

Post a Comment