அஞ்சலி : வரலாற்றறிஞர் புலவர் செ.இராசு
கல்வெட்டறிஞர் புலவர் இராசு ஐயா அவர்கள் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் எங்களை ஈர்த்த ஆசிரியப்பெருமக்களில் ஒருவர் இராசு ஐயா அவர்கள். 1983இல் பதிப்புத்துறையில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அவருடைய "மராத்தியர் செப்பேடுகள் 50" என்ற நூலை லாரியிலிருந்து இறக்கும்போது நானும் இருந்தேன். அந்நூல் சென்னையில் அச்சாகி வந்த நினைவு. அப்போது அச்சகத்தில் கலித்தொகை மறுபதிப்பு அச்சாகிக்கொண்டிருந்தது. திடீரென்று இந்த நூலைப் பார்த்ததும் எங்களுக்கு வியப்பு. தமிழ்ப் பல்கலைக்கழக முதல் வெளியீடு என்ற குறிப்போடு அந்நூல் வெளியானது. அவருடைய "மராத்தியர் கல்வெட்டுகள்" தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 100ஆவது வெளியீடாக வந்தது என நினைக்கிறேன்.
கல்வெட்டுத்துறை என்றாலே எங்களுக்கு முதலில் நினைவிற்கு வருபவர் ஐயாதான். நான் பௌத்த ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஊக்கம் தந்ததோடு அவருடைய "கொங்கு நாட்டில் சமணம்" ஆய்வேட்டினைக் காண்பித்து இதனை மாதிரியாக வைத்துக்கொண்டு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். அவ்வாறு செய்வது சாத்தியமா என்ற ஐயத்தை எழுப்பியபோது முயற்சி செய்யுங்கள், முடியும் என்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் புதூரைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று உள்ளது. அது தஞ்சாவூர் புதூரா, கும்பகோணம் புதுரா என்று நெடுநாளாக ஐயம் இருந்தது. அதனைப் பற்றிக் கேட்டபோது அவர் அந்த புத்தர் கும்பகோணம் அருகிலுள்ள புதூரைச் சேர்ந்தது என்று கூறினார். குடந்தை சேதுராமன் அவர்களுடன் இணைந்து இச்சிலையைக் கொணர மேற்கொண்ட முயற்சியைக் கூறினார். பின்னர் ஒரு காலகட்டத்தில் அதனை உறுதி செய்யக் கேட்டுக் கடிதம் எழுதியபோது எனக்கு அஞ்சலட்டையில் மறுமொழி எழுதினார். விரைவில் வெளிவரவுள்ள நூலில் அவருக்கு ஒப்புகை அளித்து இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.
ஆதிவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்காக 9 அக்டோபர் 2022இல் ஈரோட்டிற்குச் சென்றபோது ஐயாவை அவர்களை இல்லத்தில் சந்தித்தேன். சக்திபிரகாஷ் அவர்கள் அழைத்துச் சென்றார். நாங்கள் (பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன்; ஏடகம், தஞ்சாவூர்) எழுதிய "தஞ்சையில் சமணம்" நூலை நான் தந்தபோது சில பக்கங்களை சில நிமிடங்களில் ஆழ்ந்து படித்து தன் வாழ்த்தைத் தெரிவித்ததோடு, தன்னுடைய ஆய்வுகளைக் குறித்துப் பேசினார். தஞ்சாவூர் சமணக்கோயிலைப் பற்றி நினைவுகூர்ந்தார். தஞ்சையில் நண்பர்கள் அனைவரின் நலத்தைப் பற்றி விசாரித்தார். வயது மூப்பு நிலையிலும் அவருடைய படிப்பார்வம், நினைவாற்றல் கண்டு வியந்தேன். ஆரம்ப காலத்தில் நான் உரையாடியபோது இருந்த அதே உணர்வினை இப்பொழுதும் கண்டேன்.
சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக அவருடன் பழகிய நிலையில் ஆய்வின்மீதான அவருடைய ஈடுபாடு, தேடலின் ஆர்வம், வளர்வோரை ஊக்குவிக்கும் பண்பு கண்டு நான் வியந்துள்ளேன். எந்தவொரு ஐயத்தையும் தெளிவுபடுத்துவார். தமிழகத்தின் மிகச்சிறந்த வரலாற்றறிஞரில் ஒருவர். அன்னாரின் எழுத்துகள்மூலமாக அவர் என்றும் வரலாற்றில் நிற்பார். வரும் இளம் தலைமுறையினருக்கு அது வழிகாட்டியாக இருக்கும். சென்றுவாருங்கள் ஐயா.
ஒளிப்படங்கள்:
9 அக்டோபர் 2022இல் ஈரோட்டில் அவரைச் சந்தித்தபோது எடுத்தது,
புதூர் புத்தர் தொடர்பாக 25 பிப்ரவரி 2012இல் அவர் எனக்கு அளித்த மறுமொழி.
தங்களது அனுபவம் சிறப்பு.
ReplyDeleteஐயாவின் மறைவுக்கு எமது இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்...
ReplyDelete