நல்லி திசை எட்டும் விருது 2026
2026ஆம் ஆண்டிற்கான நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை திரு குறிஞ்சிவேலன் அவர்களின் 25.8.2026 நாளிட்ட முகநூல் பக்கம் மூலமாக அறிந்தேன். அறிவிப்புடன் இணைக்கப்பட்டிருந்த நூல் அட்டைகளில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் ஆங்கிலப்பதிப்பின் (Buddhism in Chola Nadu) மேலட்டை இருந்தது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
தேர்ந்தெடுத்த நல்லி திசை எட்டும் அமைப்பிற்கும், திரு குறிஞ்சிவேலன் ஐயாவிற்கும், தேர்வுக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலின் தமிழ், ஆங்கிலப்பதிப்புகளைக் கலை ரசனையோடு சிறப்பாக வடிவமைத்துத் தந்த புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கும், என் ஆய்வுப்பயணத்திற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி. இந்த விருதானது பௌத்த ஆய்வு தொடர்பாக நான் பெறுகின்ற ஆறாவது விருதாகும்.
பௌத்த ஆய்வு தொடர்பாக இதற்கு முன் பெற்ற விருதுகள்:
- அருமொழி விருது-பௌத்த மரபு ஆய்வாளர் (சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம், 2021)
- ஆவணக்குரிசில் விருது (தஞ்சாவூர், மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம். 2024)
- எழுச்சித்தமிழர் இலக்கிய விருது-2024ஆம் ஆண்டின் சிறந்த பௌத்த எழுத்து (இளவந்திகை திருவிழா, 2025)
- அயோத்திதாசர் ஆதவன் விருது (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 2025)
- சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், 2025)
தொடர்ந்து, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த "Buddhism in Chola Nadu" சிறப்பு இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ளதற்கான கடிதத்தினையும், விழா அழைப்பிதழையும் பெற்றேன். அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விருதினை சென்னையில் (இன்போசிஸ் ஹால், ராமகிருஷ்ணா வித்யாலயா, வடக்கு உஸ்மான் சாலை. தி. நகர்) 2.10.2026 காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் விழாவில் பெற்றேன்.
விருது பெற்றவர்கள் சார்பாக ஏற்புரை வழங்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். அதில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம், சிறந்த மொழிபெயர்ப்பின் தன்மை, என்னுடைய மொழிபெயர்ப்பின் அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துவிட்டு, விருதினை வழங்கிய நல்லி திசை எட்டும் அமைப்புகளுக்கு விருது பெற்றோர் சார்பாகவும், என் சார்பாகவும் நன்றி கூறி இவ்வாறான விருதுகள் எங்கள் மொழிபெயர்ப்புப்பணியை ஊக்குவிக்கப் பெரிதும் உதவுகின்றன என்று நிறைவு செய்தேன். நிகழ்விற்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நிகழ்விற்கு வந்திருந்த வரலாற்றறிஞர் திரு அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, தன்னுடைய இரு நூல்களைத் தந்ததுடன் என்னை நேரில் வாழ்த்தினார்.
என் மனைவி திருமதி பாக்கியவதி நிகழ்விற்கு என்னுடன் வந்திருந்தார். எங்கள் இருவருக்கும் இது ஒரு நினைவில் நிற்கும் அனுபமாக அமைந்தது. விருது பெற்றமைக்காக எனக்கு நேரிலும், அலைபேசியிலும், இணையதளப் பக்கங்களிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், உறவினர்கள், அறிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: நல்லி திசை எட்டும்
-------------------------------------------------------------------------------------------

















Comments
Post a Comment