சோழ நாட்டில் புத்தர் வழிபாடு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தரைப் பலவாறான பெயர்களில் மக்கள் அழைப்பதோடு, புத்தர் மீது பல நம்பிக்கைகளையும் கொண்டு வழிபடுகின்றனர். திருச்சி (ஆயிரவேலி அயிலூர், பேட்டைவாய்த்தலை, மங்கலம்) திருவாரூர் (இடும்பவனம், உள்ளிக்கோட்டை, திருநாட்டியத்தான்குடி, திருப்பாம்புரம், புதூர், மன்னார்குடி), பெரம்பலூர் (ஒகளூர், பரவாய்), புதுக்கோட்டை (கரூர்), நாகப்பட்டினம் (கிராந்தி, புத்தமங்கலம், புஷ்பவனம்), மயிலாடுதுறை (குத்தாலம், பெருஞ்சேரி), அரியலூர் (குழுமூர், பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்கிரமங்கலம்), தஞ்சாவூர் (பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம்) ஆகிய மாவட்டங்களில் அவ்வாறான முறைகளைக் காணமுடிகிறது.
இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள புத்தர் சிலைகள் புத்தர் கோயில்களிலும் (புத்தமங்கலம், பெருஞ்சேரி), பிற கோயில்களிலும் (மங்கலம், மன்னார்குடி, கரூர், பட்டீஸ்வரம், மானம்பாடி), வீட்டின் அருகிலும் (ஆயிரவேலி அயிலூர், திருப்பாம்புரம், புதூர், குழுமூர்), தோப்பிலும் (பேட்டைவாய்த்தலை, இடும்பவனம், திருநாட்டியத்தான்குடி, புஷ்பவனம், பெரண்டாக்கோட்டை, விக்ரமம்), ஊரின் நடுவிலும் (உள்ளிக்கோட்டை, ஒகளூர், பரவாய், கிராந்தி, குத்தாலம், பிள்ளைபாளையம், பெரிய திருக்கோணம், ராயம்புரம், விக்கிரமங்கலம்) உள்ளன. இவற்றில் சில சிலைகள் சற்றுச் சிதைந்தும், உடைந்தும் உள்ளன.
ஆயிரவேலி அயிலூர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் ஸ்ரீராமசமுத்திரம் என்றழைக்கப்படுகின்ற ஆயிரவேலி அயிலூரில் ஒரு வீட்டின் முன்பாக ஒரு புத்தர் சிலைக்குத் திருநீறு பூசி வழிபடுகின்றனர். சிறப்பு நாள்களில் சிலையின் முன்பு கோலம் போட்டு, சிலைக்கு மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.
இடும்பவனம்
திருவாரூர் மாவட்டம் இடும்பவனம் அருகில் காடுவெட்டி என்னுமிடத்தில் உள்ள புத்தர் சிலையை 'அம்மணசாமி', 'அமணர்', 'சமணர்' என்று அழைக்கின்றனர். வழிபாடு எதுவும் நடைபெறாவிட்டாலும் மதிக்கப்படவேண்டிய ஒரு சிலையாக அதனைக் கருதி வருகின்றனர்.
உள்ளிக்கோட்டை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ளிக்கோட்டையில் செட்டியார்மேடு என்னுமிடத்தில் ‘செட்டியார்’ என்றும், ‘ராஜகுமாரன்’ என்றும் அழைக்கப்பட்ட வழிபாடின்றி ஒரு புத்தர் சிலை உள்ளது.
ஒகளூர்
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூரில் புத்தர் சிலை ஒன்று ஊரின் நடுவில் நெற்றி, மார்பு கைகளில் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டுள்ள நிலையில் உள்ளது. பெரும்பாலும் வியாபார நிமித்தம் வெளிநாடு செல்வோர் தம் பயணத்திற்கு முன்பாக இந்தப் புத்தர் சிலைக்கு தண்ட மாலை எனப்படும் பெரிய மாலை போட்டு வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது வியாபாரம் சிறப்பாக அமைவதாக நம்புகின்றனர்.
கரூர்
புதுக்கோட்டை மாவட்டம் கரூரில் உள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ள புத்தருக்குத் தொடர்ந்து வழிபாடு நடைபெற்றுவருகிறது. இங்குள்ள கருப்பசாமிக்குக் கடா வெட்டுவது வழக்கமென்றும், அவ்வாறான பலியிடல் தெரியாமல் இருப்பதற்காகப் புத்தர் சிலையைத் தனியாக வைத்துள்ளதாகவும் கூறினர்.
கிராந்தி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கிராந்தியில் உள்ள புத்தர் சிலையைப் படுக்கப்போட்டால் மழை வருவதாக நம்புகின்றனர். ஒரு முறை உட்கார வைத்ததால் நிலம் வறண்டுவிட்டதாகவும், ஆதலால் பெரும்பாலும் படுக்க வைத்துவிடுவதாகவும் கூறினர்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது. மழை வராத சமயங்களில் சிலையைச் சாய்த்து வைத்ததாகவும், அவ்வாறு வைத்த பின்னர் மழை வந்ததாகவும் உள்ளூரில் கூறினர்.
குழுமூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுமூரில் ஒரு புத்தர் சிலை உள்ளது. புத்தர் சிலை உள்ள இந்த ஊரில் கெட்ட ஆவி எதுவும் நெருங்காது என்றும் அதனால் குழந்தைகள் இங்கு நிம்மதியாகத் தூளியில் தூங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர் என்றும், புத்தர் அனைவருக்கும் நல்லதைத்தான் செய்வார் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இச்சிலைக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறினர்.
திருநாட்டியத்தான்குடி
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான்குடியில் இரு புத்தர் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலை மூங்கில் காட்டில் உள்ளது. மழை வராவிட்டால் இச்சிலைக்கு எருக்க மாலை அணிவித்து, தப்படித்து கற்பூரம் ஏற்றுவார்கள் என்றும், அவ்வாறு கற்பூரத்தை ஏற்றுவதற்கு முன்பாகவே மழை வந்துவிடும் என்றும், மழை வந்தபின்னர் சிலையைச் சாய்த்து வைத்துவிடுவதாகவும் இவ்வூர் மக்கள் கூறினர்.
திருப்பாம்புரம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருப்பாம்புரத்திற்குக் கிழக்கில் அருகே கிள்ளியூர் என்னுமிடத்தில் 'சிவனார்' என்றழைக்கப்படுகின்ற புத்தர் சிலை உள்ளது. கோலம் போடுவது, விளக்கேற்றுவது, மாலையணிவித்தல் போன்றவற்றுடன் வழிபாடும் நடைபெற்று வருகிறது. வெள்ளி, செவ்வாய் போன்ற நாள்களிலும், வேண்டுதல் நிறைவேறும்போதும் சர்க்கரைப்பொங்கல் படைத்து விளக்கேற்றி வைக்கின்றனர்.
பட்டீஸ்வரம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் வெளியே வலப்புறத்தில் பிற சிலைகளுடன் முதல் சிலையாகப் புத்தர் சிலை இருந்தது. பிற தெய்வங்களுடன் புத்தருக்கும் சூடம் ஏற்றி நைவேத்தியம் செய்தனர். தற்போது இச்சிலை கோயிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் புத்தர் என்று தெரியாமல் இருந்த உள்ளூர் மக்கள் இப்போது இந்தச் சிலையைப் புத்தர் என்று கூறி, வழிபடுகின்றனர்.
பரவாய்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள பரவாயில் உள்ள புத்தர் சிலைக்கு சிறப்பான நாட்களில் நெற்றி, மார்பு, கைகளில் திருநீறு பூசி, மாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.
பிள்ளைபாளையம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைபாளையத்தில் அரச மரத்தின்கீழ் ஒரு புத்தர் சிலை இரு விநாயகர் சிலைகளுடன் வழிபாட்டில் உள்ளது.
புதூர்
திருவாரூர் மாவட்டத்தில் திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் அருகே உள்ள புதூரில் புத்தர் சிலையொன்று உள்ளது. குளம் கட்டத் தோண்டியபோது இச்சிலை கிடைத்ததாகவும், சிலை தோண்டியெடுக்கப்பட்ட இடத்தைப் புத்தன்குட்டை என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு வழிபட்டு வந்ததாகவும் கூறினர். தற்போது அரச மரத்தடியில் உள்ள அச்சிலைக்குக் கோலம் போட்டு, விளக்கேற்றி வழிபடுகின்றனர். சிலையின் நெற்றியிலும், மார்பிலும் பட்டையாகத் திருநீறு பூசியுள்ளனர். வைகாசி பூர்ணிமையின்போது அபிடேகம் செய்து மாலை போட்டு வழிபடுகின்றனர்.திருமணமாகாத பெண்கள் இச்சிலையைச் சுற்றி வந்தால் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று நம்புகின்றனர். தினமும் விடிவதற்குள்ளாக "மூலதோர் பிரம்ம ரூபாய, மத்யதோர் விஷ்ணு ரூபிணி, அக்ரதோர் சிவ ரூபாய" என்று 108 முறை உச்சரித்தபடி சிலையைச் சுற்றிவிட்டுத் திரும்பினால் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்புகின்றனர்.
புத்தமங்கலம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம்புத்தமங்கலத்தில் உள்ள புத்தர் கோயிலில் தாய்லாந்து நாட்டுப் பௌத்த சமயத்தினர் கோடைக்காலத்தில் இங்கு வந்து முடியெடுத்து, வழிபடுவதாக உள்ளூரில் கூறினர். மழை வருவதற்காக பட்டை மிளகாயை அரைத்துச் சிலையின் தலையில் தேய்த்து, எருக்கம்பூ மாலையை அணிவிப்பது வழக்கம் என்றும், அவ்வாறாக மாலையிட்ட சில நிமிடங்களில் மழை வந்துவிடும் என்றும், தற்போது கோயில் கட்டி அதில் வைத்துவிட்டதால் இப்போது அவ்வாறு செய்வதில்லை என்றும் கூறினர். இந்தப் புத்தரை ‘மழையை வரவழைக்கும் சாமி‘ என்று அழைக்கின்றனர். இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் ‘புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி’ என்ற வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.
புஷ்பவனம்
நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனத்தில் ஒரு தோப்பில் 'நாட்டுக்கோட்டைச் செட்டியார்' என்றழைக்கப்படும் ஒரு புத்தர் சிலை உள்ளது. இச்சிலை தரையிலிருந்து தானாகவே தோன்றியாகவும், இதனை அசைக்கமுடியாது என்றும் கூறினர். முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்வதோடு சூடம், சாம்பிராணி காட்டி விளக்கேற்றியும் வைக்கின்றனர். வைகாசிப் பூர்ணிமையின்போதும், தைப்பொங்கலின்போதும் சர்க்கரைப்பொங்கல் வைத்துப் படைக்கின்றனர். சில சமயங்களில் அன்னதானமும் செய்கின்றனர். நெற்றியில் பட்டையாகத் திருநீறும், அதன் நடுவில் குங்குமமும் பூசி வழிபடுகின்றனர்.
பெரண்டாக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் உள்ள பெரண்டாக்கோட்டையில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி உள்ளது. அச்சிலையை ‘சாம்பான்’ என்றும், சிலை உள்ள இடத்தை ‘சாம்பான் கோயில்’ என்றும் அழைத்து வழிபடுகின்றனர்.
பெரிய திருக்கோணம்
அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணத்தில் ‘கடன் கொடுத்தவன்’, ‘கடன் வாங்கியவன்’ என்றழைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகள் இருந்ததாகக் கூறினர். தற்போது அங்கு ஒரு சிலை மட்டும் உள்ளது.
பெருஞ்சேரி
மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரியில் புத்தர் கோயில் உள்ளது. 1990களின் இடையில் களப்பணி சென்றபோது இந்தப் புத்தரை 'ரிஷி' என்றும், இக்கோயிலை 'ரிஷிக்கோயில்' என்றும் அழைத்தனர். அண்மைக்காலமாக புத்தர் சிலை என்று கூறி வழிபட்டு வருகின்றனர். விளக்கேற்றுவதோடு, சிலை முழுவதும் திருநீறு பூசியும், நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டும் வணங்குகின்றனர்.
பேட்டைவாய்த்தலை
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் 'கடன்காரப்பள்ளம்' என்றும் 'கடன்காரன் குழி' என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் ‘கடன் கொடுத்தவன்’, ‘கடன் வாங்கியவன்’, ‘சாட்சி சொன்னவன்’ என்ற மூன்று சிலைகள் இருந்ததாகக் கூறினர். அங்கிருந்த ஒரே சிலை திருச்சி, அரசு அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது.
மங்கலம்
திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் உள்ள மங்கலத்தில் உள்ள அரவாண்டியம்மன் கோயிலில் உள்ள இந்தப் புத்தரைச் 'செட்டியார்' என்று கூறி வழிபடுகின்றனர். இந்தச் சிலைக்கு மீசை உள்ளது குறிப்பிடத்தக்கது. இக் கோயிலில் பலி கொடுப்பது வழக்கமென்றும், பலியிடுதலைப் புத்தர் விரும்பமாட்டாராகையால் அவருக்காகத் தனிச் சன்னதி கட்டி வருவதாகவும் கூறினர். பலியிடல் தெரியாமலிருப்பதற்காகச் சிலைக்கு முன்பாக திரைச்சீலையைப் போடுவதாகவும் கூறினர். விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபடுகின்றனர். வழிபாடு நடப்பதுடன் தனியாகச் சன்னதியாகக் கட்ட ஆரம்பித்தனர். சன்னதி சிறிதாக அமைந்துவிட்டதாலும், உள்ளே புத்தரை வைக்க முடியா நிலையில் இருந்த இடத்திலேயே வைத்து வழிபட்டு வருகின்றனர். கோயிலில் திருட வந்தவர் அரவாண்டியம்மன் சாபத்தால் கல்லாகிவிட்டார் என்றும், மன்னரைக் குறிக்கும் வகையிலோ, வீரத்தைக் குறிக்கும் வகையிலோ, சிற்பியின் ஆர்வம் காரணமாகவோ மீசையை வைத்திருக்கலாம் என்றும் கூறினர்.
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள மல்லிநாதஸ்வாமி ஜினாலயம் எனப்படுகின்ற சமணக் கோயிலில் புத்தர் சிலையை வழிபாட்டில் உள்ளது. அச்சிலையைச் ‘சமணர்‘ என்றழைக்கின்றனர்.
மானம்பாடி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முட்புதர்களுக்கிடையே இருந்த புத்தர் சிலை தற்போது சாலையின் எதிர்ப்புறத்தில் வடபத்ர காளியம்மன் கோயிலில்உள்ளது. இச்சிலை தற்போது வழிபாட்டில் உள்ளது.
ராயம்புரம்
அரியலூர் மாவட்டம் ராயம்புரத்தில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை உள்ளது. ஊர் முழுமையான ஊராகும் என்றும், அவ்வகையில் தம் ஊர் முழுமையான ஊர் என்றும் களப்பணியின்போது கூறினர்.
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்னும் சிற்றூரில் அருகருகே இரு புத்தர் சிலைகள் உள்ளன. இவற்றைக் 'கொடுத்தவன் வாங்கியவன்' சிலைகள் என்றும், கொடுத்தவன் சிலை அழுத முகத்துடனும் வாங்கியவன் சிலை சிரித்த முகத்துடனும் இருப்பதாகவும் கூறினர். கடன் வாங்கியவன் சிலையை அவ்வப்போது கல்லால் அடிப்பதால் அச்சிலை சிறிது உடைந்துள்ளதாகக் கூறினர். சிலைகளுக்கு முன்பாக ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது. எனினும் மழை வராவிட்டால் இச்சிலைகளுக்கு முன் உள்ள வேலை எடுத்து அந்த இடத்திலேயே சக்தி ஏற்றி (அருள் ஏற்றி) மேளதாளத்தோடு ஊரைச் சுற்றி வந்து மறுடியும் கொண்டு வந்து வைத்துவிட்டால் மழை பெய்வதாகவும், இவ்வாறான நடைமுறை தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறினர். அவ்வப்போது இச்சிலைகளுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.
விக்ரமம்
தஞ்சாவூர் மாவட்டம் விக்ரமத்தில் 'செட்டியார்' என்றழைக்கப்படும் புத்தர் சிலை உள்ளது. சிலை இருக்குமிடம் 'புத்தடிக்கொல்லை' என்றழைக்கப்படுகிறது. வருஷப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு விழாக்களின்போதும், நேர்த்திக்கடனாகவும் தேங்காய் உடைத்துச் சாம்பிராணி போடுவதாகவும், முதலில் எண்ணெய் எடுக்கும்போது சாமிக்கு (இச்சிலைக்கு) சாத்திவிட்டுப் பயன்படுத்துவதாகவும், எந்தப் புதிய வேலையையும் தொடங்கும்போதும் இங்கு வந்து புத்தரை வேண்டிக்கொண்டு மாலை போட்டுவிட்டு, வேலையை ஆரம்பிப்பதாகவும் கூறினர். 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகம் இருந்ததாகவும், அப்போது இச்சிலைக்கு நைவேத்யம் செய்தால் மூட்டைப் பூச்சித் தொல்லை குறைந்துவிடும் என்றும், தற்போது மூட்டைப்பூச்சித் தொல்லை இல்லாததால் அதுபோன்ற நம்பிக்கையும் இல்லையும் என்றும் கூறினர்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் பௌத்தத்திற்கு அதிக எதிர்ப்பு இருந்தபோதிலும் அதற்குப் பின்னர் சோழர் காலம் தொடங்கி பௌத்தம் தழைத்திருந்ததை இந்தச் சிலைகள் மூலமாக அறியமுடிகிறது. இந்தப் புத்தர் சிலைகள் இங்கிருந்த பௌத்தப்பள்ளிகளிலும், பௌத்தக்கோயில்களிலும் காலங்காலமாக இருந்து வழிபடப்பட்டவையாக இருக்கலாம்.
1990களின் இடையில் மேற்கொள்ளப்பட்ட களப்பணியில் கண்ட புத்தர் சிலைகளில் இடும்பவனம், உள்ளிக்கோட்டை, குத்தாலம், மன்னார்குடி, ராயம்புரம் ஆகிய இடங்களிலிருந்த சிலைகள் சுவடின்றி மறைந்துவிட்டன. ஆரம்பத்தில் வழிபாடு இல்லாத சிலைகள் தற்போது வழிபாட்டில் உள்ளதையும், பிற பெயர்களில் அழைத்த புத்தரைத் தற்போது புத்தர் என்று அழைப்பதையும் அடுத்தடுத்த களப்பணியின்போது காணமுடிந்தது. பௌத்தம் மீதான மக்களின் நம்பிக்கையினை இத்தகைய வழிபாடுகள் உணர்த்துகின்றன.




Comments
Post a Comment