பௌத்த சுவட்டைத் தேடி: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக அரண்மனை வளாகத்தில் துணைவேந்தர் செயலக நுழைவாயிலின் முன்பாக வாயிற்படியின் இடது புறத்தில் ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். பின்னர் அது அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதை அறிந்தேன்.
ஆய்வியல் நிறைஞர் ஆய்வு தொடர்பாக தஞ்சாவூரிலுள்ள கலைக்கூடத்திற்குச் சென்று அங்கிருந்த இரு புத்தர் சிலைகளையும், நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் பார்த்ததைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ள புத்தர் சிலையைப் பார்க்கச் சென்றேன்.
அருங்காட்சியகக் காப்பாளர் (பொ) திரு கு.தேவராஜைச் சந்தித்தேன். ஒளிப்படமெடுக்க எழுத்துவழி அனுமதி தேவையில்லை என்றும், ஆய்வேட்டில் உரிய ஒப்புகை தரும்படியும், இந்தச்சிலை வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன் முயற்சியால் கொண்டுவரப்பட்டதாக புலவர் செ. இராசு கூறியதாகவும் தெரிவித்தார்.
அங்குத் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர்/பொ.ஆ.10ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன் அழகான தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் கண்டேன். இச்சிலை, கலைக்கூடத்தில் பார்த்த சிலைகளைப் போலவே இருந்ததைக் கண்டேன். அதனைப் புகைப்படமெடுத்தேன். அனுமதி அளித்த காப்பாளருக்கு நன்றி கூறிவிட்டுத் திரும்பினேன். அக்காலக்கட்டத்தில் கலைக்கூடம், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம் ஆகிய இரு அருங்காட்சியகங்களில் மட்டுமே புத்தர் சிலைகள் இருந்தன.
2012
மாத்தூர் என்று பெயரில் தஞ்சாவூர் அருகிலும், கும்பகோணம் அருகிலும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இருப்பினும் மாத்தூர் என்ற இடத்திற்கு நான் நேரில் செல்லவில்லை. இந்தச்சிலை கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்ற மாத்தூர் கும்பகோணம் அருகிலுள்ளதா, தஞ்சாவூர் அருகிலுள்ளதா என்ற ஐயம் எனக்கு நெடுநாள் இருந்தது. அதனைத் தெளிவுபடுத்திக்கொள்ள சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
புலவர் இராசுவுக்கு இதுதொடர்பாகக் கடிதம் எழுதிக் கேட்டேன். அவர், கும்பகோணம் அருகேயுள்ள மாத்தூர்தான் என்று மறுமொழி கூறியதுடன் என் ஆய்வுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
2018
தமிழ்ப்பல்கலைக்கழக இணையதளத்தில் அருங்காட்சியகம் என்ற பிரிவில் தமிழ்ப்பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் அரும்பொருள்கள் பட்டியலில் இந்தப் புத்தர் சிலை கீழ்க்கண்ட குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம் வல்லம் சாலையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக்கட்டடத்தினை அடுத்து அமைந்துள்ளது.
2023
இந்தப் புத்தர் சிலை என்னுடைய நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022, ப.124), (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023, p.109) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: காப்பாளர் (பொ) திரு கு.தேவராஜ்/
தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகம்,
புலவர் செ.இராசு
-------------------------------------------------------------------------------------------




வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteசிறப்பு. வாழ்த்துகள் ஐயா.
ReplyDelete