பௌத்த சுவட்டைத் தேடி : கலைக்கூடம், தஞ்சாவூர்

ஆய்வியல் நிறைஞர்ப் பட்ட ஆய்விற்காக (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur district, Madurai Kamaraj University, Madurai, 1995) முதலில் பௌத்தம் தொடர்பாக நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பின்னர் புத்தர் சிலைகளின் அமைப்பையும், காலத்தையும் அறிந்துகொள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியங்களுக்குச் செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் அருங்காட்சியகங்கள் என்ற நிலையில் அக்காலகட்டத்தில், 1990களின் இடையில், கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் சிலைகள் உள்ளதை அறிந்தேன்.

தஞ்சாவூர், கலைக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பாக மேனாள் காப்பாட்சியர் திரு எஸ்.இரத்தினசபாபதி அவர்களைச் சந்தித்தால் புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைப் பெறமுடியும் என்பதை நண்பர்கள் மூலமாக அறிந்தேன். அவரைச் சந்திக்க அவருடைய இல்லத்திற்குச் சென்று, நான் மேற்கொண்டு வருகின்ற ஆய்வினைப் பற்றி கூறினேன்.

அவர், தான் எழுதி வெளிவரவுள்ள நூலில் கலைக்கூடத்திலுள்ள இரு புத்தர் சிலைகளைப் பற்றியும் (Stone Sculptures, Manuscript, 1983), ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைப் பற்றியும் (Divine Bronzes (Miscellaneous), Manuscript, 1983), குறிப்புகள் இடம்பெற உள்ளதாகவும், அவற்றைப் படியெடுத்துக்கொள்ளும்படியும் கூறி, தான் வைத்திருந்த தட்டச்சுப்படியைத் தந்து, பாதுகாப்பாகத் திருப்பித் தரும்படி கூறினார். அதனை எடுத்துச்சென்று கீழ ராஜ வீதியில் ஒரு கடையில் செராக்ஸ் எடுத்துவிட்டு, அவரிடம் திருப்பித் தந்துவிட்டு நன்றி கூறினேன்.

அவர் தந்த விவரங்களுடன் தஞ்சாவூர், கலைக்கூடத்திற்குச் சென்றேன். காப்பாட்சியரிடம் நான் மேற்கொள்ளும் ஆய்வு தொடர்பாகக் கூறி  அறிமுகப்படுத்திக்கொண்டேன். எழுத்துவழி அனுமதி தேவையில்லை என்றும், புகைப்படங்களை ஆய்வேட்டில் அமைக்கும்போது அதில் உரிய ஒப்புகை தரும்படியும் அவர் கூறினார். ஐந்து ரூபாய் செலுத்தி, ரசீதைப் பெற்றேன். இது அருங்காட்சியகத்திற்கான என்னுடைய முதல் களப்பணியாகும்.


கலைக்கூடத்தில்  இரு சிலைகளையும், செப்புத்திருமேனிகள் இருந்த இடத்தில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டேன். 

பட்டீஸ்வரம் புத்தர்

பட்டீஸ்வரம்/14-15ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன், முதன்முதலாக அமர்ந்த நிலையிலான புத்தர் சிலையினைக் கண்டேன். தியான கோலத்தில் அச்சிலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. 

மதகரம் புத்தர்

மதகரம்/11ஆம் நூற்றாண்டு என்ற குறிப்புடன் மற்றொரு புத்தர் சிலையைக் கண்டேன். இரு சிலைகளும் சற்றொப்ப ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டேன். மதகரம் புத்தர் சிலைக்கு முன்பாகவும், சிலைக்குப் பின்புறமும் அமைக்கப்பட்டுள்ள வேலைப்பாடானது ஆயிரமாண்டு கால சிலையின் பழைமைத்தன்மைதோடு பொருந்தி வராத நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது.

நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனி

பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற நிலையிலான புத்தர் சிற்பத்தினைக் கண்டேன். இந்தச் சிற்பமானது காட்சிப்பேழைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை என்னுடைய கேமராவில் புகைப்படமெடுத்தேன். அனுமதி தந்த காப்பாட்சியருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து திரும்பினேன்.

இவற்றைப் பற்றிய தரவுகளை புகைப்படங்களுடன் என்னுடைய ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் இணைத்தேன். பின்னிணைப்பாக மேனாள் காப்பாட்சியரிடமிருந்து நான் பெற்ற, சிலைகள் தொடர்பான குறிப்புகளை உரிய ஒப்புகையுடன் இணைத்தேன்.

அடுத்தடுத்த களப்பணியின்போது சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனிகளைக் கண்டேன்.

முதன்முதலாக கலைக்கூடத்தில் நான் பார்த்த புத்தர் சிலைகளும், நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனியும் சிலையின் கூறுகளைப் பற்றிய அடிப்படைக் கருத்தை என் மனதில் விதைத்தன. 

அதற்குப் பிறகு, முனைவர்ப்பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1995), திட்டத்தையும் (Buddhism in the Cola country, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002) மேற்கொண்டபோதும், நூலாக்கத்தின்போதும் பல முறை கலைக்கூடத்திற்குச் சென்றேன். அவ்வப்போது புகைப்படங்களும் எடுத்தேன். அவற்றில் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் என் நூலில் இடம்பெற்றுள்ளன.

2023
இந்தப் புத்தர் சிலைகளும், நாகப்பட்டினப் புத்தர் செப்புத்திருமேனியும் என்னுடைய நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022, பக்.96, 120, 30), (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023, pp.121, 99, 40) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.


-------------------------------------------------------------------------------------------
நன்றி: திரு எஸ்.இரத்தினசபாபதி, மேனாள் காப்பாட்சியர்,
காப்பாட்சியர்/கலைக்கூடம்
-------------------------------------------------------------------------------------------

Comments