வரலாற்றறிஞர் கும்பகோணம் என்.சேதுராமன்
23 ஏப்ரல் 1995இல் வரலாற்றறிஞர் கும்பகோணம் சேதுராமன் (குடந்தை சேதுராமன்) அவர்களை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து ஆய்வினைப் பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பாக அவரைச் சந்தித்தபோது, அவர் பொறுமையாக விவாதிப்போம் என்று கூறி, ஒரு நாளைக் குறிப்பிட்டு வரும்படி கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவரைக் காணச் சென்றேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்து நான் கேட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்தினார். உரையாடலின்போது கல்வெட்டு அறிக்கைகளை எடுப்பதற்காக இரு முறை மாடிக்குச் சென்று
வந்தார். அவருடைய மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி, ஆய்வு தொடர்பாக நாங்கள் பேசவுள்ளது
பற்றி அவரிடம் கூறினார்.
சொந்த ஊர் கும்பகோணம் என்று நான் கூறியதும், “நம்மூர்க்காரப் பையன் இதனைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார். “Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District” என்ற ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டிற்கான தலைப்பினைக் கேட்டதும், “இத்துறை தொடர்பாக மிகவும் அரிதான ஆய்வுகளே வருகின்றன. அந்த வகையில் இந்த முயற்சி போற்றத்தக்கது. தலைப்பில் பொன்னி எனப்படுகின்ற காவிரியாறு இடம்பெறும் வகையில் பொன்னி நாட்டில் புத்த சமய வளர்ச்சி என்றுகூட வைத்திருக்கலாமே” என்றார். தலைப்பை உறுதி செய்து முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இசைவு பெற்றதைத் தெரிவித்தேன்.
காவிரி டெல்டா தொடங்கி இலக்கியம், செப்பேடு, கல்வெட்டு, பௌத்தம், சமணம், சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற வகையில் அரிய செய்திகளைக் கூறினார். அவர் பேசும்போது களப்பகுதி இல்லாத பிற பகுதிகளைப் பற்றிய குறிப்புகளை நான் குறித்துக்கொள்ளாமல் அமர்ந்திருந்தபோது, “கூறப்படும் அனைத்தையும் பதிந்துகொள்வது அவசியம். பிற்காலத்தில் உதவும்” என்று அவர் கூறியதை நான் இன்றும் மனதில் கொண்டுள்ளேன்.
தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தில் புத்தர் விகாரை, நாகப்பட்டினம் வெளிப்பாளையம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோழபுரம், திருநாட்டியத்தான்குடி, திருமலைராயன்பட்டனம், அம்மன்குடி, நாகேஸ்வரர் கோயில் அருகே பகவர், மன்னார்குடி, பட்டீஸ்வரம், புத்தமங்கலம், திருச்சோபுரம், போதிமங்கை போன்ற இடங்களைப் பற்றியும் கூறினார். கும்பகோணம் அருகேயுள்ள மாத்தூரைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலையை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சியையும் குறிப்பிட்டார். அப்போது புலவர் இராசு அவர்களையும் நினைவுகூர்ந்தார்.
கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டு பற்றிய கல்வெட்டு அறிக்கையின் படியை (Epigraphia Indica Vol.XIX 1927-28) முழுமையாகப் படித்துக் காண்பித்துவிட்டு, “உன் ஆய்விற்கு இது முக்கியமான ஆவணம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேள். இதனை ஆய்விற்குப் பயன்படுத்திக்கொள்” என்று கூறி அதனை அவர் பெயருடன் உள்ள அலுவலக முத்திரையைப் பதிந்து என்னிடம் தந்தார். கல்வெட்டு இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு ஆய்வினைத் தொடரவும் அவர் கூறியிருந்தார். அவருடைய வழிகாட்டலில் அக்கல்வெட்டினை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் கண்டேன்.
கும்பகோணத்தில் போற்றத்தக்க ஒரு தொழிலதிபரும், மிகச்சிறந்த கல்வெட்டு அறிஞருமான திரு சேதுராமன் அவர்களுடன் உரையாடிய போது ஆய்விற்குத் துணையாக பல கருத்துகளைப் பெற முடிந்தது. நிறைவான விவாதத்திற்குப் பின் அவருக்கும், அவருடைய மனைவிக்கும் நன்றி கூறினேன். அவர் தந்த, அந்த கல்வெட்டுப் படி என் ஆய்விற்கு மிகவும் துணையாக இருந்தது. என் ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அவருக்கு நன்றியோடு ஒப்புகை அளித்திருந்தேன்.
திரு சேதுராமன் அவர்கள் உள்ளிட்ட பல வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள், நண்பர்களின் வழிகாட்டுதல்கள் என் ஆய்வு சிறப்பாக அமைய முக்கியமான காரணமாக இருந்தது.
கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு தொடர்பாக மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம் என்ற பதிவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தங்களது பணி மேலும் சிறக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகளுடன்....
குடந்தையின் வரலாற்று அறிஞரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteசெ.ஆடலரசன்
சிறப்பான சந்திப்பு ஐயா...
ReplyDeleteபோற்றுதலுக்கு உரிய மனிதர்.
ReplyDeleteதங்களின்ஆய்வேடு நூலாக வரவேண்டும்.அருளுடைய சோழமண்டலம் ...மற்றுமுள்ள அவரின் ..குடந்தை ராமன் ராமன் பஸ் ஓனர் திரு சேதுராமன் அவர்களின் நூல்கள் மறுபதிப்பாகி இக்காலத்தியவர்களூக்கு படிக்க கிடைக்க வேண்டும்...அப்போது தான் நீங்கள் விதந்தோதும் அவர் ஆளுமை புரியும்........யார் செய்வார்கள்...தங்களின் ஆய்வேடு நூலாக வரட்டும்..காத்திருக்கிறோம்..வாழ்க வளமுடன்
ReplyDelete