களப்பணியில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன்: ஆதவன்/யாவரும் கேளீர்










உங்களைப் பற்றிய சிறுஅறிமுகம், கல்வி, பணியாற்றிய விவரங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பினை அங்கு நிறைவு செய்தேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபின், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக் கெழுத்தராகச் சேர்ந்து, சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றி, உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றேன்.

தங்களின் எம்பில் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு எங்கே நடைபெற்றது? நெறியாளர் யார்?
தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (1995) என்ற தலைப்பில் எம்பில் ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டேன். இரண்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் க.பாஸ்கரன் நெறியாளராக இருந்தார்.

பௌத்த ஆய்வு சிந்தனை எப்போது ஏற்பட்டது? அதற்கான காரணங்கள்
எம்பில் பட்டத்திற்காக கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்கவேண்டிய நிலையில், அது சிரமம் என்று உணர்ந்து தொடர்புடைய தலைப்புகளைச் சிந்தித்தேன். அதில் வருகின்ற நாகப்பட்டின பௌத்த விகாரத்தைப் பற்றிய நினைவு வரவே, பௌத்தம் தொடர்பான தலைப்பினை உறுதி செய்தேன். ஆய்வின் எல்லை, பொருளாதாரச்சூழல், கால அவகாசம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிறந்த ஊரான கும்பகோணத்தை மையமாக அமைத்து தஞ்சாவூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன். அதனைச் சற்று விரிவுபடுத்தி ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டை முனைவர் பட்ட ஆய்விற்காகத் தெரிவு செய்தேன்.

பௌத்த ஆய்வுக்கான தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்களை எதிர்கொண்ட விதம் குறித்து?
அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே ஆய்வு செய்வது சிரமமாகத் தோன்றியது. பௌத்த சமயச் சுவடு அதிகம் காணப்படாத நிலையில் நூல்களிலிருந்தும், அறிஞர்களைக் கலந்தாலோசித்தும் விவரங்களைப் பெறமுடிந்தது. பூம்புகாரில் புத்த விகாரத்தின் எச்சங்களும், ஆங்காங்கே காணப்படுகின்ற புத்தர் சிலைகளும், பௌத்த மையங்களாகக் குறிப்பிடப்பட்ட இடங்களும் ஆதாரங்களாக இருந்த நிலையில் அவற்றை நோக்கிக் கவனத்தைச் செலுத்தினேன்.

முந்தைய அறிஞர்கள் குறிப்பிட்டிருந்த இடங்களுக்குச் சென்றபோது புத்தர் சிலையையும், புத்தர் என்றழைக்கப்பட்ட பிற சிலைகளையும் பார்த்தேன். சில இடங்களில் சிலைகள் காணாமல் போனதை உள்ளூர் மக்கள் மூலமாக அறிந்தேன். என்னுடைய தேடலில் புதியதாகவும் கண்டுபிடித்துள்ளேன். பல இடங்களில் மக்கள் உதவியதும், சில இடங்களில் துரத்தியதும் உண்டு. முன்னர்ப் பார்த்த சிலையின் நிலையை அறிவதற்காகச் சில ஆண்டுகளுக்குப் பின் சென்றபோது முந்தைய களப்பணியில் நான் சந்தித்தவர்கள் என்னிடம் வாஞ்சையாகப் பேசியதுடன் கூடுதல் செய்தியையும் தந்தனர்.

அலுவலகப்பணி பாதிக்காத வகையில் சனி, ஞாயிறு, மற்றும் தீபாவளி, பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற அரசு விடுமுறை நாள்களிலும், உறவினர்கள், நண்பர்களின் இல்ல விழா நிகழ்வுகளின்போது அவை முடிந்தபின்னரும் கள ஆய்வை மேற்கொண்டேன். சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு உடனடியாக செல்லவேண்டியிருந்தால் தற்செயல் விடுப்பிற்கு விண்ணப்பித்துவிட்டும், குறுகிய கால இடைவெளியில் சென்றுவிட்டுத் திரும்புவதாக இருந்தால் அலுவலக அனுமதி பெற்றும் சென்றேன். பணிநிறைவு பெற்ற நாள் வரை இந்த முறையைக் கடைபிடித்தேன்.

தேடலுக்கான ஆரம்பம் எது? களப்பணியைத் தொடங்க உங்களுக்குக் கைகொடுத்தது எது?
வரலாற்றறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம், களப்பணி மூலமாக வரலாற்றுக்குப் பெரும் பங்களிக்கமுடியும் என்று நம்பிக்கையூட்டினார். மயிலை சீனி. வேங்கடசாமி (பௌத்தமும் தமிழும், 1940, மூன்றாம் பதிப்பு 1957) உள்ளிட்டோரின் பௌத்தம் தொடர்பான நூல்கள் முதன்மை ஆதாரங்களாக அமைந்தன. மூத்த அறிஞர்கள் தம் நூல்களில் குறிப்பிட்டிருந்த புத்தர் சிலைகள், விகாரங்கள், பௌத்த மையங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு, அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்றேன். உரிய விவரங்களைத் திரட்டுவதற்காகச் சில இடங்களுக்கு பல முறை செல்ல வேண்டியிருந்தது. களப்பணியின்போது வழக்கமாக இரு கேமராக்கள் (அப்போது பிலிம் போடும் முறை), தொப்பி, நொறுக்குத்தீனி, குடிதண்ணீர், சாக்பீஸ், இஞ்ச் டேப், குறிப்பு நோட், திருநீறு, டவல் ஆகியவற்றை எடுத்துக்கொள்வேன்.

சோழ நாட்டில் இதுவரை தங்களால் கண்டறியப்பட்ட பௌத்த சிலைகள் எத்தனை?
உள்ளிக்கோட்டை, கண்டிரமாணிக்கம், கிராந்தி, குத்தாலம், குழுமூர், கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), சந்தைத்தோப்பு, சீதக்கமங்கலம், திருச்சி, திருநாட்டியத்தான்குடி, பழையாறை, பிள்ளைபாளையம், புதூர், மங்கலம், மணலூர், முழையூர், வளையமாபுரம் ஆகிய இடங்களில் 18 புத்தர் சிலைகளையும், அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டேன்.

பௌத்தம், சமணம் குறித்த அடையாளங்கள் சிலைகளில் எப்படி இருக்கும்?
புத்தர் சிலைகள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவே. புத்தர் சிலைகளுக்குரிய அடையாளங்களாகத் தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, சற்றே மூடிய கண்கள், அமைதி தவழும் முகம், நீண்டு வளர்ந்த காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், கழுத்தில் திரிவாலி எனப்படும் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, நெற்றியில் திலகக்குறி, மேலாடை, இடுப்பில் ஆடை போன்றவற்றைக் கூறலாம். சமண சிலைகள் இவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளன.

ஆய்வுக்கான களப்பணியில் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் அனுபவங்கள்
பல இடங்களில் உள்ளூர் மக்களின் உதவி உடனடியாகக் கிடைக்கும். சில சமயங்களில் அறிமுகம் ஆனபின்னரே அவர்களின் ஒத்துழைப்பைப் பெறமுடியும். என் களப்பணி பெரும்பாலும் பேருந்தில் தொடங்கி, நடந்தோ, சைக்கிளிலோ தொடரும். இடத்தை விசாரித்துச் செல்லவேண்டும். சில இடங்களுக்கு பேருந்துகள் அதிக கால இடைவெளியில் செல்லும் சமயங்களில் அதிகமாகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். வெயில், மழை போன்றனவெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. பேருந்து கிடைக்காத நிலையில் வாடகை சைக்கிளிலும், அதுவும் கிடைக்காவிட்டால் நடந்தும் செல்வேன். அப்போது கூகுள் அதிகப் பயன்பாட்டிற்கு வராத காலகட்டம் என்பதை மனதில் கொள்வோம்.

ஒவ்வொரு களப்பணியும் மறக்கமுடியாத அனுபவமே. புதூரில் புத்தரைக் காண ஒரே நாளில் சுமார் 25 கிமீ தொடர்ந்து மிதிவண்டியில் பயணித்து கால்கள் வீங்கி சிரமப்பட்டேன். மங்கலத்தில் வேறெங்கும் காணப்படாத மீசையுடன் கூடிய புத்தரைக் கண்டேன். மணலூரில் இடுப்புக்குக் கீழ் புதைந்துகிடந்த புத்தர் சிலையை வெளிக்கொணர முயற்சிக்கும்போது இரு காலிலும் கட்டெறும்புகள் கடித்து அவதியுற்றேன். பெருஞ்சேரி புத்தரைப் பார்த்துவிட்டுப் பேருந்தில் திரும்பும்போது பயணச்சீட்டைத் தொலைத்துவிட்டு, அபராதம் செலுத்தினேன்.

விக்கிப்பீடியாவில் நஞ்சுண்டேஸ்வரர் கோயில் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதுவதற்காகச் செய்திகளைத் திரட்ட எழுமகளூர் சென்றபோது ஒரு புத்தரைப் பார்த்தேன். நண்பரின் மகன் திருமணத்திற்காகச் சென்றபோது எதேச்சையாகக் கேள்விப்பட்டு பழையாறையில் புத்தர் சிலையின் தலைப்பகுதியைக் கண்டேன். தேவாரத்தலங்களுக்கு வழக்கமாகச் செல்கின்ற கோயில் உலாவின்போது திருநாட்டியத்தான்குடியில் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் மூன்றடி ஆழமுள்ள வாய்க்காலில் இறங்கி ஈரம் சொட்டச்சொட்ட சென்று புத்தரைக் கண்டேன். பல இடங்களில் புத்தரைப் பார்க்கச் சென்று சமண தீர்த்தங்கரரைப் பார்த்த அனுபவமும் உண்டு.

எந்தந்த ஊர்களில் மக்களின் வழிபாட்டில் புத்தர் சிலைகள் இருக்கின்றன?
அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், ஒகளூர், கரூர், திருப்பாம்புரம், பட்டீஸ்வரம், பரவாய், பிள்ளைபாளையம், புதூர், புத்தமங்கலம், புஷ்பவனம், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மானம்பாடி, விக்ரமம், விக்கிரமங்கலம், வெள்ளனூர் ஆகிய ஊர்களில் புத்தர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன. சில இடங்களில் புத்தருக்குத் திருநீறு பூசி, குங்குமம் இடுகின்றனர். செவ்வாய், வெள்ளி, புத்த பூர்ணிமா, தைப்பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளைப் பற்றி..
நாகப்பட்டினத்தில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்ட விகாரங்கள் இருந்த இடத்திலிருந்து கிடைத்த புத்தர் செப்புத்திருமேனிகளைச் சென்னை, அரசு அருங்காட்சியகத்திலும், தஞ்சாவூர் கலைக்கூடத்திலும் பார்த்தேன். அய்யம்பேட்டையில் ஒரு வீட்டில் வழிபாட்டில் ஒரு சிற்பம் உள்ளதைக் கண்டேன். ஆய்வுக்காலத்தில் செல்லூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இவ்வகையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை நாளிதழ் செய்தி மூலம் அறிந்தேன்.

டி.என்.ராமச்சந்திரனின் (The Nagapattinam and other Buddhist bronzes in the Madras Museum, 1954, Rpt 1992) நூலை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் கொல்கத்தா, பாட்னா, நாக்பூர், மும்பை, திருவனந்தபுரம், லண்டன், குவாலியர், கொழும்பு, லக்னோ, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், வடோதரா, ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களைத் தொடர்பு கொண்டு சுமார் 90 நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனிகளின் புகைப்படங்களை அஞ்சல் மூலமாகப் பெற்று முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஆவணப்படுத்தியுள்ளேன்.

அவற்றைத் தொகுத்து வெளியிட எண்ணினேன். ஆனால் எங்கள் வீட்டில் நான் சேகரித்துவைத்திருந்த புகைப்படங்களும், சில கோப்புகளும் ஒரு மழையின்போது நனைந்து பயன்டுத்தமுடியாமல் வீணாமல்போய்விட்டன. நாகப்பட்டினப் புத்தர் செப்புத் திருமேனிகளைப் பற்றிய நூல் வெளியிட விரும்பிய என் கனவு கலைந்தது.

பௌத்தம் தொடர்பாக நீங்கள் எழுதிய கட்டுரைகள், உலகளாவிய அளவில் கவனம் பெற்றமை குறித்து....
சார்லஸ் ஆலன் (Charles Allen, Coromandal: A Personal History of South India, Little Brown, London, 2017) குறிப்பிட்டுள்ள மேற்கோளில் ஜனவரி 2015இல் தஞ்சாவூர் அருகில் மணலூரில் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத புத்தர் சிலையின் அருகில் முனைவர் ஜம்புலிங்கம் என்ற குறிப்போடு உரிய படமும் இடம்பெற்றுள்ளது. அறிமுகமில்லாத ஓர் அறிஞரின் நூலில் அதைப் பார்த்தபோது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

நாரத கருணதிலகவின் (Narada Karunatilaka, Demula Bauddha Susana Bumiya Saha Sinhala Bauddhayage Anagathaya) சிங்கள நூலில் என் ஆய்வு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

எஸ்.தில்லைநாயகம், ஆதவன் பழனி, ஜி.உதயராஜ் இணைந்து மொழிபெயர்த்துள்ள மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் (Buddhism and Tamil, Mayilai Seeni Venkatasamy Tr. S.Thillainayagam, Aadhavan Pazhani, and G.Udhayaraj, Routledge, 2025) தமிழ்ப் பல்கலைக்கழக ஆங்கிலக் காலாண்டிதழில் வெளியான என்னுடைய ஆங்கிலக்கட்டுரை (“Buddha statues in the vicinity of other temples in the Chola country”, Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol No.19, September 2008) இணைப்பாக இடம்பெற்றுள்ளது. ஆய்விற்கு முதன்மை ஆதாரமாக அமைந்த நூலின் மொழிபெயர்ப்பில் என்னுடைய கட்டுரை இடம்பெற்றதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

அண்மையில் பௌத்த ஆய்வாளர் விருது மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் பற்றி..
1993 முதல் மேற்கொண்டு வருகின்ற ஆய்வின் மூலமாகப் பௌத்த சமய வரலாற்றுச்சான்றுகளை ஆவணப்படுத்தி தமிழ்கூறு நல்லுலகிற்குத் தெரியப்படுத்திய வகையில் நான் பெற்ற விருதுகளில் அயோத்திதாசர் ஆதவன் விருது (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜூன் 2025), 2024இன் சிறந்த பௌத்த எழுத்திற்கான எழுச்சித்தமிழர் இலக்கிய விருது (விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்ச் 2025) ஆகிய இரு விருதுகளும் முக்கியமானவையாகும். இதனை என் எழுத்துக்கும், தேடலுக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

மேலும், பௌத்த மரபு ஆய்வாளருக்கான அருமொழி விருது, (சோழர் வரலாற்று சங்கம், தஞ்சாவூர், 2021), ஆவணக்குரிசில் (மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், தஞ்சாவூர், 2024), சோழ நாட்டில் பௌத்தம்-சிறந்த நூலுக்கான அருமொழி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூட்டுப்பெருவிழா, 1040ஆவது ஆண்டு, தஞ்சாவூர், 2025) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளேன். இவ்வாறான விருதுகள் என்னை தொடர்ந்து செயலாற்ற ஊக்கம் தருகிறது.

உங்களின் பிற எழுத்துப்பணிகள்
புதுதில்லி, நேரு டிரஸ்ட் மூலமாக சோழ நாட்டில் பௌத்தம், திருவையாறு சப்தஸ்தானக் கோயில்கள் என்ற திட்டங்களையும், நெறியாளர் என்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம், சக்கராப்பள்ளி சப்தஸ்தானக் கோயில்கள் என்ற திட்டங்களையும் மேற்கொண்டேன்.

வாழ்வில் வெற்றி (பிட்டி விஜயகுமார்), படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ்), விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் (மின்னூல்) ஆகிய நூல்களையும், சக ஆய்வாளர்களுடன் இணைந்து தஞ்சையில் சமணம் (ஏடகம்) என்ற நூலையும் எழுதியுள்ளேன்.

மரியாதைராமன் கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், கிரேக்க நாடோடிக்கதைகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம்) எழுதியுள்ளேன்.

சோழ நாட்டில் பௌத்தம் (https://ponnibuddha.blogspot.com/), முனைவர் ஜம்புலிங்கம் (https://drbjambulingam.blogspot.com/) என்னும் இரு வலைப்பூக்களிலும், ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் என அனைத்திலும் 800+ கட்டுரைகளை எழுதியுள்ளேன். தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு 1680+ கட்டுரைகளைப் பங்களித்துள்ளேன்.

நான் கண்டுபிடித்த புத்தர் சிலைகளைப் பற்றிய செய்திகள் தமிழ் (இந்து தமிழ் திசை, காலைக்கதிர், தமிழ் முரசு, தினகரன், தினத்தந்தி, தினபூமி, தினமணி, தினமலர், மக்கள் குரல், மாலைச்சுடர், மாலை மலர், மாலை முரசு), ஆங்கில (Deccan Chronicle, The Hindu, The New Indian Express, The Times of India) நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆய்வுத்தலைப்பில் அமைந்த உங்களுடைய வலைப்பூவினைப் பற்றி…
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 2011 முதல் பௌத்தம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதன் முகப்புப்பக்கத்தில் களப்பணி, கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், பேட்டிகள், பெற்ற விருதுகள், நூல் மதிப்புரை ஆகியவற்றை உரிய இணைப்போடு, தேவையானவற்றைச் சொடுக்கிப் படிக்கும் வகையில் தந்துள்ளேன். இதில் கட்டுரைகள் (1,43,200+), பேட்டி (1,41,500+) ஆகிய இரு பக்கங்களும் அதிகமான பக்கப் பார்வைகளைக் கண்டுள்ளது. வெளியுலகத்திற்கு என் ஆய்வு தெரிவதற்கு இந்த வலைப்பூவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை அறிகிறேன். பல ஆய்வாளர்கள் அவ்வப்போது இதனைப் பற்றி நேரிலும், அலைபேசியிலும் பாராட்டுவதோடு, தம் ஆய்விற்கு இது மிகவும் துணையாக இருப்பதாகக் கூறுகின்றனர். ‘

பௌத்த ஆய்வில் இன்னும் செய்யவேண்டிய பணிகள் குறித்த தகவல்கள்...
ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறான களப்பணி அடிப்படையிலான ஆய்வுகள் முழு ஈடுபாட்டோடு மேற்கொள்ளப்படவேண்டும். சில சிலைகள் அருங்காட்சியகங்களுக்குக் கொணரப்பட்டபோதிலும், பராமரிப்பின்றி பொது இடங்களில் உள்ள பிற சிலைகளைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஒவ்வொரு சிலையின் காலமும் துல்லியமாகக் கணக்கிடப்படவேண்டும். சிலைகளுக்கு நடத்தப்படும் வழிபாட்டு முறை, உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்களோடு தொடர்பு போன்றவை இன்னும் ஆராயப்படவேண்டும். வருங்கால தலைமுறையினருக்கும், வரலாற்றுக்கும் உதவும் வகையில் அனைத்து சிலைகளும் ஆவணப்படுத்தவேண்டும்.

உங்களின் எதிர்காலத் திட்டங்கள்?
களப்பணி அனுபவங்களைப் பௌத்தச் சுவட்டைத் தேடி என்ற தலைப்பில் நூலாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: ஆதவன்/யாவரும் கேளீர், மே 2026
-------------------------------------------------------------------------------------------
யாவரும் கேளீர் முதல் (ஏப்ரல் 2026) இதழுக்கு நான் அனுப்பிய கடிதம் மே 2026 இதழில் வெளியாகியுள்ளது.


Comments