பௌத்த சுவட்டைத் தேடி: லெய்டன் பல்கலைக்கழகம்

நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரிலிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரவுள்ளது என்ற செய்தி ஊடகங்களில் நேற்று (16.5.2026) முக்கியமான பேசுபொருளானது. பாரதப்பிரதமரிடம் இச்செப்பேடுகள் ஒப்படைக்கப்படுகின்ற வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்வு நேற்று நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின், சோழர்களின், பௌத்தத்தின் பெருமையினைப் பேசுகின்ற இந்தச் செப்பேடுகளின் வருகையானது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமையைச் சேர்க்கின்ற நிகழ்வாகும். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியாலும், வரலாற்றறிஞர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் முயற்சியின் விளைவாகவும் இதனைக் கொள்ளலாம்.  இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நிகழ்வாக இது அமையும்.  இச்செப்பேடுகள் தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். 

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் சமூக வலைதளத்தில் நேற்று பதிந்த பதிவினைக் காண்போம். 






ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இனிய வேளையில், என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்காக இதன் புகைப்படங்களை நான் பெற்ற அனுபவத்தைப் பகிர்கிறேன். 

"சோழ நாட்டில் பௌத்தம்" (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) என்ற தலைப்பிலான என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் இச்செப்பேடுகளைப் பற்றி விவாதித்துள்ளேன். இதன் புகைப்படங்களை நெதர்லாந்திலிருந்து பெற்று அவற்றை  ஆய்வேட்டில் இணைக்க விரும்பினேன்.  

லெய்டன் பல்கலைக்கழகத்திற்கு பெரிய, சிறிய லெய்டன் செப்பேடுகளைக் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். நான் ஆய்வு மேற்கொண்ட துறையின் முகவரிக்கு (Dr. B.Jambulingam, School of Philosophy, Tamil University, Thanjavur 613 005, India)  அதன் வண்ணப்புகைப்படங்களை லெய்டன் பல்கலைக்கழகத்தார் அனுப்பியிருந்தனர். முகவரியில் ஆங்கிலத்தில் டாக்டர் என்ற முன்னொட்டு காணப்பட்டது. நான் ஆய்வேட்டினைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கும் முன்பாக, முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்த காலகட்டத்திலேயே, அவர்கள் என்னை டாக்டராகிவிட்டார்கள் என்பதை உணர்ந்தேன்.


புகைப்படங்களைப் பெற்றதும், அவர்களுக்கு என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எழுதிய நன்றிக் கடிதத்தில்  இவை ஆய்வேட்டில் உரிய ஒப்புகையுடன் பயன்படுத்தப்படும் என்று உறுதி கூறியிருந்தேன். 


தொடர்ந்து அவர்கள் எழுதிய கடிதத்தில் நூலாக்கம் பெறும்போது அதன் ஒரு படியை அனுப்பும்படிக் கூறியிருந்தனர். என்னுடைய நூலில் அதன் புகைப்படங்களைச் சேர்க்காத நிலையில் அவர்களுக்கு நூலை அனுப்பும் சூழல் எழவில்லை. 


இருப்பினும் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் அவர்கள் அனுப்பியிருந்த இரு வண்ணப் புகைப்படங்களையும் படியெடுத்து இணைத்ததோடு, முன்னர் உறுதி கூறியபடி உரிய ஒப்புகையினைத் தந்திருந்தேன்.  




இனி வருங்காலங்களில் ஆய்வாளர்களும், வரலாற்றறிஞர்களும் ஆனைமங்கலச்செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது "லெய்டன் பல்கலைக்கழகத்திலுள்ள..." என்பதற்கு மாறாக "தமிழ்நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள..." என்று பெருமையோடு குறிப்பிடுவர் என்று எண்ணும்போது மனம் மகிழ்ச்சியடைகிறது. 

இந்த வரலாற்றாவணம் தாயகம் திரும்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து நல்லுங்களுக்கும் மனமார்ந்த நன்றி.  

1999இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட ஆய்வேடுகளில் மட்டுமே லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட செப்பேட்டு புகைப்படங்களின் வண்ணப் புகைப்படங்கள் (கலர் செராக்ஸ்) இணைக்கப்பட்டிருந்தன. அலுவலகப்படிகளில் அதன் செராக்ஸ் படி மட்டுமே இடம்பெற்றிருந்தது. 19.5.2026இல் தமிழ்ப் பல்கலைக்கழக நூலக இயக்குநர்/நூலகரான முனைவர் சி.வேல்முருகன் அவர்களைத் தொடர்பு கொண்டு அதன் வண்ணப்படங்களைக் கேட்டபோது அவர் அவற்றை அனுப்பி உதவினார். அவருக்கு மனமார்ந்த நன்றி.

19.5.2026இல் மேம்படுத்தப்பட்டது.

Comments