பௌத்த சுவட்டைத்தேடி: உம்பளச்சேரி
நேற்று (15.5.2026) முதல் நாளிதழ்களிலும், ஊடக இணையதளங்களிலும், வேதாரண்யம் அருகில் உம்பளச்சேரி என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வெளியான செய்தியைக் கண்டேன். பல ஆய்வாளர்களும், நண்பர்களும், ஊடகத்தினரும் எனக்கு அச் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தனர். அவர்களில் சிலர் இது புத்தர் சிலைதானா என்ற கருத்தினை என்னிடம் கேட்டிருந்தனர். அவர்களுக்கான என் மறுமொழியாக இப்பதிவினைப் பதிகின்றேன். (புகைப்படம் நன்றி: The Hindu, 16.5.2026)
சிலையைக் கண்டு அது பற்றிய செய்தியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு அவர்களுடைய தேடல் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிற புத்தர் சிலைகளில் காணப்படுகின்ற கூறுகள் இல்லாத நிலையில் இது புத்தர் சிலை இல்லை என்பதை அறிய முடிகிறது.
1993 முதல் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60க்கும் மேற்பட்ட புத்தர் கற்சிலைகளை நேரில் பார்த்துள்ளேன். அவை என்னுடைய நூலின் தமிழ்ப்பதிப்பிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022) ஆங்கிலப்பதிப்பிலும் (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சிலைகளில் பெரும்பாலானவை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ளன. இச்சிலைகள் சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகிய சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடனோ, இவற்றில் பெரும்பான்மையான கூறுகளுடனோ உள்ளன. சில தாமரைப்பீடத்திலும், சில சாதாரண பீடத்திலும் உள்ளன. இதன் சில கூறுகள் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிலைகளில் காணப்படுகின்றன.
இச்சிலையின் மார்பில் மேலாடை, தலையில் ஞானத்தை உணர்த்துகின்ற தீச்சுடர், நெற்றியில் திலகக்குறி ஆகியவை காணப்படவில்லை. பொதுவாக புத்தரின் முகம் புன்னகையை வெளிப்படுத்தும் நிலையில் காணப்படும். ஆனால் இச்சிலை அவ்வாறு இல்லை. சோழ நாட்டில் இவ்வாறான கண்களைக் கொண்ட வகையில் எந்த புத்தர் சிலையும் இல்லை.
களப்பணியில் கண்ட சிலைகளின் கூறுகள் இதில் காணப்படாத நிலையில் இது புத்தர் சிலை இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மென்மேலும் இது பற்றி பிற அறிஞர்கள், ஆய்வாளர்களின் கருத்துகள் மேலாய்வுக்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

இயல்பாக புத்தர் சிலையை வைதீகம் சிதைப்பது வழக்கமான ஒன்றுதான், அதிலும் விகாரமாக மாற்றும் முறையும் நடந்துள்ளது. முனி, பேய் போன்ற எதிர்க்கதையாடல்களை உருவாக்கி இருப்பதை நாம் பார்க்கிறோம்.மேலும் சிலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. கணுக்காலில் காணப்படும் சீவிர ஆடை நீங்கள் பதிவிட்ட புகைப்படத்திலேயே தெரிகிறது. தலையில் உடைபட்ட தீச்சுடரின் எச்சங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகில் உள்ள கரூர் புத்தர், தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் புத்தர் சிலைகளின் தீச்சுடரின் தன்மையோடு ஒத்து இருப்பதும், இடது தொடை மற்றும் கணுகக்காலில் சீவர ஆடையின் தொடர்சி உள்ளதை காண முடிகிறது. மேலும் மழை இல்லாத காலத்தில் வண்ணா சாமி என்று அழைக்கபடும் புத்தருக்கு பழகனி பூசை நடத்தி கோவிலுக்கு வெளியே வைத்தால் மூன்று நாட்களுக்குள் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை மழைவேண்டி வணங்கும் இச்சடங்கு புத்தர்மங்கலம் , கிராந்தி போன்ற இடங்களில் புத்தர் சிலைக்கு மழை இல்லாத காலத்தில் செய்யப்படும் சடங்கிற்கு ஒத்து போவதை நாம் கவனிக்க வேண்டும்.