பௌத்த சுவடுகள்: வாசகர் வட்டம், அழகம்மாள் நகர் கிளை நூலகம்
நேற்று (20.5.2026) தஞ்சாவூர், அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக நூலக வளாகத்தில் நடைபெற்ற 93ஆவது நிகழ்வில் "பௌத்த சுவடுகள்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன். அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், உள்ளூர் பொதுமக்கள், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். வாசகர் வட்டத்தின் இந்த முயற்சி போற்றத்தக்கதாகும்.
உரையில் பின்வருவன உள்ளிட்ட கருத்துகளைப் பகிர்ந்தேன். உரைக்குப் பின் கலந்துரையாடல் நடைபெற்றது.
- ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் கலைக்கூடத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும் மட்டுமே புத்தர் கற்சிலைகள் இருந்தன.
- தற்போது தஞ்சாவூர் நகரில் மட்டும் நான்கு அருங்காட்சியகங்களில் புத்தர் சிலைகள் உள்ளன.
- சென்னை, அரசு அருங்காட்சியகத்தை அடுத்து தஞ்சாவூர் கலைக்கூடத்தில் மட்டுமே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி உள்ளது.
- களப்பணியில் அய்யம்பேட்டையில் முதன்முதலாக ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியைக் கண்டுபிடித்தது.
- நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரிலிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் இந்தியா வரவுள்ளது என்ற செய்தி. பாரதப்பிரதமரிடம் இச்செப்பேடுகள் ஒப்படைக்கப்படுகின்ற வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்வு.
- பூம்புகாரில் பௌத்தச் சான்று இன்று உள்ளது. நாகப்பட்டினத்தில் பல பௌத்தச்சான்றுகள் இருந்ததாகப் பேசப்பட்டாலும் தற்போது அரிதாகவே உள்ளன. சந்தைத்தோப்பைச் சேர்ந்த புத்தர் சிலை நாகப்பட்டினம், அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தின் வரலாற்றுப் பெருமையை அனைவரும் உணரும் வகையில் அந்தச் செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் விகாரை இருந்த இடத்தில் பாதுகாப்பாக வைத்து, காட்சிப்படுத்துதல்.
- முனைவர் பட்ட ஆய்விற்காக 1999இல் லெய்டன் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் எழுதி பெரிய, சிறிய ஆனைமங்கலச் செப்பேடுகளின் புகைப்படங்களைப் பெற்று ஆய்வேட்டில் இணைத்த அனுபவம்.
- பாரத குடியரசுத் துணைத்தலைவர் "சோழ நாட்டில் பௌத்தம்" நூலுக்காக அனுப்பிய வாழ்ததுக்கடிதத்தைப் பெற்றது.
- களப்பணி அனுபவங்களை நூலாகக் கொணரும் முயற்சி.
நிகழ்விற்கு வந்திருந்த ஆய்வாளர் முனைவர் கனிமொழி செல்லத்துரை தன்னுடைய உயிர்சுருட்டி (ஆம்பல் பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2025, அலைபேசி 7868934995) நாவலைத் தந்ததோடு, ஆய்வு பற்றிய பல கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: வாசகர் வட்டம், அழகம்மாள் நகர் கிளை நூலகம், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------------------------




















Comments
Post a Comment