சோழ நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள பௌத்த சமயச் சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம். இக்கட்டுரையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குச் செல்வோம். இம்மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக ஒகளூரிலும், பரவாயிலும் புத்தர் சிலைகள் உள்ளன. ஒகளூரில் ஒரு புத்தர் சிலை நகரின் நடுவில் பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கும் உள்ளங்கைகளும் சிதைந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தோர் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது சிலைக்கு அலங்காரம் செய்து, தண்ட மாலை எனப்படுகின்ற பெரிய மாலையை அணிவித்து வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு சென்றால் நினைத்த காரி...