பெரம்பலூர் மாவட்டத்தில் பௌத்தம்






சோழ நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் உள்ள பௌத்த சமயச் சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம். இக்கட்டுரையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குச் செல்வோம். இம்மாவட்டத்தில் பௌத்த சமயச் சான்றுகளாக ஒகளூரிலும், பரவாயிலும் புத்தர் சிலைகள் உள்ளன. 


ஒகளூரில் ஒரு புத்தர் சிலை நகரின் நடுவில் பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல்  தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய  வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கும் உள்ளங்கைகளும் சிதைந்துள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தோர் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது சிலைக்கு அலங்காரம் செய்து, தண்ட மாலை எனப்படுகின்ற பெரிய மாலையை அணிவித்து வழிபட்டுவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்று நம்புகின்றனர். அவ்வப்போது சிலையின் நெற்றி, மார்பு, கைகளில் மஞ்சளும், குங்குமமும் பூசி வழிபடுகின்றனர். முதல் களப்பணியின்போது தரையில் காணப்பட்ட சிலை, அவ்விடத்தில் உயர்ந்த மேடையமைக்கப்பட்டு அதன் மேல் வைக்கப்பட்டுள்ளதை அடுத்தடுத்த களப்பணியின்போது காணமுடிந்தது.   


குன்னம் வட்டம் பரவாயில் ஊரின் மையப்பகுதியில் மேடையில் ஒரு புத்தர் சிலை உள்ளது.  அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், வரிசையாகச் சுருள்முடி, தீச்சுடர், மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கும், கைகளும் சற்றுச் சிதைந்துள்ளன. சிறப்பான நாள்களில் சிலைக்கு நெற்றி, மார்பு, கைகளில் திருநீறு பூசி, மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.


இம்மாவட்டத்தில் இந்த இரு சிலைகள் மட்டுமே பௌத்த சமயத்தின் சான்றுகளாக உள்ளன. பிற சான்றுகள் இப்பகுதியில் காணப்படவில்லை. இன்றும் வழிபாட்டில் உள்ள இந்தச் சிலைகள் முன்பு இப்பகுதியில் உள்ள புத்தர் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்க வாய்ப்புண்டு. இதுவரை சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளை மாவட்ட வாரியாகப் பயணித்துப் பார்த்தோம். தொடர் பதிவுகளின் நிறைவாக இந்தச் சிலைகளை முதன்முதலில் பார்க்கச் சென்ற அனுபவத்தைக் காண்போம். 


மார்ச் 1999இல் இப்பகுதிக்கு முதன்முதலாக களப்பணி சென்றபோது ஒரே நாளில் நான்கு சிலைகளைப் பார்த்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம். என் ஆய்வில் அந்தப் பயணத்தின்போதுதான் ஒரே நாளில் நான்கு புத்தர் சிலைகளைப் பார்த்தேன்


என் பயணத்திட்டத்தில் முதலில் தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்குப் பேருந்தில் சென்றேன். அங்கு கோட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புத்தர் சிலை உள்ளதாக முந்தைய களப்பணியின்போது அறிந்ததன் அடிப்படையில் அங்கு சென்று, கோட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளரிடம் அனுமதி பெற்று அங்கிருந்த புத்தர்சிலையைப் புகைப்படம் எடுத்தேன். 


அரியலூரிலிந்து செந்துறை செல்லும் பேருந்தில் சென்று இராயம்புரம் என்னும் இடத்தில் இறங்கினேன். அங்கு விசாரித்தபோது குறிப்பிட்ட தொலைவில் புத்தர் சிலை இருப்பதாகக் கூறினர். வாடகைக்கு ஒரு மிதிவண்டி எடுத்துக்கொண்டு பேருந்து வந்த வழியில் செந்துறை மார்க்கமாகவே சென்றேன். போகும்போது வலப்புறத்தில் ஏரிக்கரையில் இடுப்புவரை புதையுண்ட நிலையில் இருந்த புத்தர் சிலையினைப் பார்த்தேன். புத்தரைப் பற்றி விசாரித்தபோது ஒருவர் புத்தர் சிலை உள்ள ஊர் முழு ஊர் என்பார்கள் என்றும், நல்ல சிலையை உடைத்துவிட்டார்கள் என்றும் கூறிவிட்டு அருகேயுள்ள ஒகளூரில் ஒரு சிலை இருப்பதாகக் கூறினார். மற்றொருவர் பெரிய திருக்கோணத்தில் இரு புத்தர் சிலைகள் இருந்ததாகவும், தற்போது ஒன்று மட்டுமே உள்ளதாகவும் கூறினார். அவர், அரியலூரிலிருந்து காலை 7.40 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் பேருந்து இருப்பதாகக் கூறினார். அப்போது நேரம் ஒத்துவராத நிலையில் ஒகளூர் புத்தரைப் பின்னர் பார்த்துக்கொள்ள முடிவெடுத்து, மிதிவண்டியை கடையில் திரும்ப வைத்துவிட்டு உரிய வாடகையைத் தந்துவிட்டுக் கிளம்பினேன்.


அரியலூர் துறையூர் பேருந்தில் குன்னம் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வேப்பூர் செல்லும் பேருந்தில் பரவாய் என்னுமிடத்திற்குச் சென்றேன். ஊரின் நடுவில் மேடையில் புத்தர் சிலையினைக் கண்டேன். அங்கிருந்த திரு கமலக்கண்ணன், விழா நாட்களில் அச்சிலையைத் தண்ணீரால் சுத்தம் செய்து, பொட்டு வைத்து மாலைபோடுவதாகக் கூறினார். அவர் ஒகளூரில் ஒரு புத்தர் சிலையும், பெருமத்தூரில் ஒரு புத்தர் சிலையும் இருப்பதாகக் கூறினார். தகவல்களைக் குறித்துக் கொண்டேன். அப்போது மாலை நேரமாகிவிட்டது. தொடர்ந்து செல்லமுடியுமோ என்ற நிலையில் யோசித்தபோது உள்ளூர் மக்கள் எனக்கு உதவி செய்தனர். பேருந்துக்காக நான் காத்திருந்தபோது பேருந்து வரத் தாமதமாகும் என்றும், புத்தரைப் பார்த்துவிட்டு திரும்புவதற்குள் இருட்டிவிடும் என்று கூறி அந்தப் பக்கம் வந்த பால் வண்டியில் ஒகளூருக்கு என்னை அனுப்பிவைத்தனர்.


பால் வண்டியில் வந்துகொண்டிருந்தபோது இந்த புத்தர் சிலையைப் பற்றி முன்னர் நான் கேள்விப்பட்டது நினைவிற்கு வந்தது. பால் குடுவைகளை ஓட்டுநர் இறக்க ஆரம்பித்தார். அங்கிருந்து புத்தர் சிலை இருக்கும் இடத்திற்கு விசாரித்துச் சென்றேன். அதற்கு முன்பாக அவரிடம் பேருந்து பற்றிய விவரம் கேட்டபோது அந்நேரம் எந்த பேருந்தும் வராது என்று கூறிவிட்டு, எனக்காகச் சற்று நேரம் காத்திருப்பதாகவும், தான் அருகிலுள்ள கடைகளுக்கு பால் தந்துவிட்டு வருவதற்குள் திரும்பும்படியும் அன்பாகக் கட்டளையிட்டார். மறுப்பேதுமின்றி தலையாட்டிவிட்டு புத்தரைக் காணச் சென்றேன். அங்கிருந்த ஒருவர் அந்த ஊரில் பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் செல்வதற்கு முன் அந்தப் புத்தருக்கு மாலை அணிவித்துவிட்டுச் செல்வதாகக் கூறினார். புத்தரைப் புகைப்படம் எடுக்கவும் சற்று இருட்ட ஆரம்பித்தது. பால் வண்டி சத்தம் என்னை அழைக்கவே, அங்கிருந்து கிளம்பினேன். பால் வண்டியில் திட்டக்குடி பார்டர் என்ற இடத்திற்குத் திரும்பினேன். ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அங்கிருந்து அரியலூர் வழியாகத் தஞ்சாவூர் வந்தடைந்தேன்.



துணை நின்றவை 

  • வேங்கடசாமி, மயிலை சீனி.  (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
  • (2014, டிசம்பர் 1). பௌத்த சுவட்டைத்தேடி : அரியலூர், இராயம்புரம், பரவாய், ஒகளூர்,  சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2014/12/blog-post.html
  • (2016, அக்டோபர் 1). பௌத்த சுவட்டைத்தேடி : கங்கைகொண்ட சோழபுரம்,  சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2016/10/10-1997.html
  • ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
  • Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, ஆகஸ்டு 2025

-------------------------------------------------------------------------------------------

Comments