பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்: முனைவர் சீமான் இளையராஜா

முனைவர் சீமான் இளையராஜா எழுதியுள்ள பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர் என்னும் நூல்  காத்தவராயன் (எ) அயோத்திதாசப் பண்டிதர், ஒருபைசாத் தமிழன் இதழ்ப்பணிகள், பவுத்த இலக்கியங்கள், சாதி-சமய சடங்குகள், தமிழகத்தில் பவுத்தம் என்ற ஐந்து உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. நிறைவாக பயன்பட்ட நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.



அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு தொகுப்பாவணமாக அமைந்துள்ள இந்நூல் அவருடைய பன்முகத்தன்மையை ஒரு பரந்துபட்ட பார்வையில் முன்வைக்கிறது. சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றி தமிழகத்தில் பல சமூக மாற்றங்கள் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்த அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது காலத்தின் தேவை எனலாம். நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.

இலக்கியம், சித்த மருத்துவம், தத்துவம், சமஸ்கிருதம், பாலி உட்பட காத்தவராயன் கற்றுத்தேர்ந்தார். காத்தவராயன், தன் குருமீது வைத்திருந்த அதிக அன்பினால் தன் பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டார்." (.15)

"தமிழகத்தில் முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனையோடு பேசியும், எழுதியும் வந்தவர் அயோத்திதாசப் பண்டிதர்….மக்களின் அறியாமையைப் போக்குவதற்குத் தான் அயோத்திதாசப் பண்டிதர் பவுத்தத்தைக் கையில் எடுத்து பகுத்தறிவுச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றார்."(ப.27)

"தமிழ்நாட்டில் இன்று கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுச் சிந்தனைக்கு மூலமாக இருந்தவர் அயோத்திதாசப் பண்டிதர். ஆனால் இந்த இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று சமூக ஆர்வலர்களும், பொதுவுடைமை சிந்தனையாளர்களும் கூறிவருகின்றனர். ஒடுக்கப் பட்டோருக்கு மட்டுமன்றி அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று அயோத்திதாசர் கூறியுள்ளார்."(ப.28)

"….இவ்வளவு ஆளுமை பொருந்தியவரான அயோத்திதாசப் பண்டிதர் புறக்கணிக்கப்பட்டதற்கு அவர் பிறந்த சாதியே காரணமாகும். இப்போதுகூட அவரின் ஆளுமைகளைத் தமிழுலகத்திற்குக் கொண்டு செல்வதில் ஒடுக்கப்பட்டோரின் தலைவர்கள் மட்டுமே முனைப்பு காட்டி வருகின்றனர்."(ப.37)

"அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தனது இறுதி மூச்சு உள்ளவரை கடுமையாகப் போராடினார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்லர், அவர்கள் பூர்வ பவுத்தர்கள் என்று உறுதியுடன் உணர்த்திட்டார்."(ப.43)

"அயோத்திதாசப் பண்டிதர் சுமார் 25 நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரைகள் எழுதியுள்ளார். இதைத் தவிர அரசியல் கட்டுரைகள் என சில நூறு கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது."(ப.50)

"தமிழ் இலக்கியம் பற்றியும், இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் சிக்கல்களைச் செம்மைப்படுத்தியும் புதிய சிந்தனையுடன் சொல்லாராய்ச்சி செய்துள்ளார் அயோத்திதாசப் பண்டிதர். அவருக்கு இலக்கியம் என்றாலே ஒழுக்கம், தர்மம், அறம் பற்றிய கல்வியாகும்."(ப.88)

"மனு தர்மமும் அதனைப் பின்பற்றும் இந்து சமயமும் சாதிய வேறுபாடுகளை வருண நிலைப்பாட்டினைக் கொண்டு வரையறுக்கின்றன. சாதி ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும், சாதியப் போராட்டங்களும், சாதி சண்டைகளும் நீண்ட காலமாக இந்திய மண்ணுக்குரிய பெரும் சிக்கல்களாக உள்ளன. அயோத்திதாசப் பண்டிதர் இதனை நன்கு உணர்ந்து சாதிய முரண்பாடுகளைக் களைய முயற்சித்தார்."(ப.130)

"போதி (போகி) பண்டிகை புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளின் நினைவுநாள் அனுசரிப்பு என்றவர் பெரும் பொங்கல் நாளை புத்தரான இந்திரரை பூசிக்கும் நாள் என்றார்….எள் என்னும் தானியத்திலிருந்து நெய் என்னும் எண்ணெய் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடித்த நாளைக் கொண்டாடும்விதமாக உருவான பண்டிகையே தீபாவளிப்பண்டிகை என்றார்."(ப.167)

நூலாசிரியர் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வில் கண்டவற்றையும் இந்நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். "அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனையில் பவுத்தம் என்பது தமிழ் என்னும் வட்டாரம் சார்ந்ததாக விளக்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் புதைந்த நிலையிலிருந்த புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொந்த பெயரிலும் வேறு பெயரிலும் புத்தர் வழிபடப்படுகிறார். இதன்படி 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை பா.ஜம்புலிங்கம் என்கிற ஆய்வாளர் கண்டெடுத்துள்ளார். உள்ளூர் மரபு சார்ந்த இச்சிலைகளைப் பற்றிய முடிவுகளை அயோத்திதாசப் பண்டிதரின் விளக்கங்களோடு இணைக்கமுடியும்."(ப.39)

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றி அதிகமான தரவுகளைத் திரட்டி, உரிய சான்றுகளைத் தந்து சிறப்பாக நூலைப் படைத்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  

தலைப்பு : பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
ஆசிரியர் : முனைவர் சீமான் இளையராஜா
பதிப்பகம் : அறம் பதிப்பகம், 3/584, முல்லை தெரு, கஸ்தூரிபாய் நகர் எதிரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு, முள்ளிப்பட்டு கிராமம் மற்றும் அஞ்சல், ஆரணி வட்டம் 632 316, திருவண்ணாமலை மாவட்டம், மின்னஞ்சல் arampublication50@gmail.com, அலைபேசி +91-91507 24997
ஆண்டு : முதல் பதிப்பு, நவம்பர் 2021
விலை : ரூ.250

-----------------------------------------------------------
-----------------------------------------------------------

Comments