பௌத்த ஆய்வு : 30 ஆண்டுகள் நிறைவு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காகப் பதிவு செய்ய ஆகஸ்டு 1993இல் விண்ணப்பம் அனுப்பி, அந்த ஆய்வினை நிறைவு செய்து, தொடர்ந்து ஆய்வினை மேற்கொள்வது என்பது நினைவில் நிற்கின்ற அனுபவமாகும். அனுபவத்தைப் பற்றி விவாதிக்கும் முன்பாக, ஆய்வின்போது பன்மொழிப்புலவர் திரு மு.கு.ஜகந்நாதராஜா அவர்களிடமிருந்து பெற்ற கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காக அவர் வந்திருந்தபோது சந்தித்தேன். பௌத்தம் குறித்து பல அரிய தகவல்களைக் கூறிய அவர், அங்கு அளித்த கட்டுரையின் படியை எனக்குத் தந்தார். அவருக்கு அக்கட்டுரையை என் ஆய்விற்காகப் பயன்படுத்திக்கொள்ள இசைவு கேட்டு கடிதம் எழுதினேன். அவர் அதற்கு மறுமொழி அனுப்பியிருந்தார். 1993ஆம் ஆண்டிற்கு பின்னோக்கிச் செல்வோம். முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள எண்ணியபோது ஆய்வு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொண்டு ஆய்வில் ஈடுபட்டால் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் கூறிய நிலையில், 3 ஆகஸ்டு 1993இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பம் வேண்டி, வரலாற்றுத்துறைத் தலைவரின்...