திருச்சி மாவட்டத்தில் பௌத்தம்
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 200 ஆவது கட்டுரை.
தொடர்ந்து வாசித்து, ஆதரவு தரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
திருச்சி மாவட்டத்தில் பௌத்தத்தின் சான்றுகளாக ஆயிரவேலி அயிலூர், கீழ்க்குறிச்சி, குழுமணி, திருச்சி, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை (இரு சிலைகள்), மங்கலம், முசிறி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகளும், கீழ்க்குறிச்சியில் ஒரு கல்வெட்டும் உள்ளன. இவற்றில் மூன்று புத்தர் சிலைகள் திருச்சி அருங்காட்சியகத்திலும், ஒரு சிலை மதுரை அருங்காட்சியகத்திலும் உள்ளன.
தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள ஆயிரவேலி அயிலூரில் ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை ஆகியவற்றுடன் உள்ளது. மூக்கு, இடது கண், சுருள்முடியின் இடது புறம், மார்பின் ஒரு பகுதி ஆகியவை சிதைந்துள்ளன. இச்சிலைக்குத் திருநீறு பூசி வழிபடுகின்றனர். சிறப்பு நாள்களில் சிலையின் முன்பு கோலம் போட்டு, மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.
திருச்சிக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ள கிழக்குறிச்சி என்றழைக்கப்படுகின்ற கீழ்க்குறிச்சியில் பொ.ஆ.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தலையில்லாத புத்தர் கற்சிலையும், பௌத்தப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றிய கல்வெட்டும் உள்ளன. பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் உள்ளது. மங்கலச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் பூரண கும்பமும், அதன் இரு புறங்களிலும் விளக்குகளும், அதற்குமேல் கத்தியும், வில்லும், தர்மச்சக்கரமும், உடுக்கை வடிவில் பசும்பையும், கலப்பையும், சாமரங்களும், நடுவில் குடையும் உள்ளன. இக்கல்வெட்டில் செந்தாமரைக்கண்ணநல்லூர் என்ற இந்த ஊர் முழுவதும் இறையிலியாகப் பௌத்தப்பள்ளிக்கு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சியில் சுந்தரர் நகரில் உள்ளதாகக் கூறப்படுகின்ற புத்தர் சிலையை அங்குக் காணவில்லை. ஆயினும் பிறிதொரு புத்தர் சிலை காஜாமலையில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ளது. வாய்க்கால் அமைக்கும் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிலை பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ளது. அழகான கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் சுருள்முடி, நெற்றியில் திலகக்குறி, பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது.
பேட்டைவாய்த்தலையில் வயல் பகுதியில் இடுப்புவரை புதைந்திருந்ததாகக் கூறப்படுகின்ற புத்தர் சிலையைத் தற்போது காணவில்லை. முகம் தெளிவின்றி இருந்த இச்சிலை நீண்ட காதுகள், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், தலையில் தீச்சுடர், மார்பில் ஆடை ஆகியவற்றுடன் இருந்தது.
முசிறி வட்டம் மங்கலத்திலுள்ள அரவாண்டியம்மன் கோயிலில் பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஒரு புத்தர் சிலை உள்ளது. பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் உள்ள இந்தச் சிலை மீசையுடன் உள்ளது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாக அழகான சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை, பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்கள் ஆகியவற்றுடன் இச்சிலை உள்ளது. உள்ளூர் மக்கள் இந்தப் புத்தரைச் ‘செட்டியார்’ என்று கூறி விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபடுகின்றனர். கோயிலில் திருட வந்தவர் அரவாண்டியம்மன் சாபத்தால் கல்லாகிவிட்டார் என்றும், மன்னரைக் குறிக்கும் வகையிலோ, வீரத்தைக் குறிக்கும் வகையிலோ, சிற்பியின் ஆர்வம் காரணமாகவோ மீசையை வைத்திருக்கலாம் என்றும், இக்கோயிலில் பலிகொடுப்பது வழக்கமென்றும், அது தெரியாமலிருப்பதற்காகத் திரைச்சீலையைப் போடுவதாகவும் கூறினர்.
லால்குடி அருகில் வெள்ளனூரில் ஒரு மரத்தின் அடியில் ஒரு புத்தர் சிலை பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. இந்தச் சிலை தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், தலைக்குப் பின் பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது.
திருச்சி, அரசு அருங்காட்சியகத்தில் குழுமணி, பேட்டைவாய்த்தலை, முசிறி ஆகிய இடங்களைச் சேர்ந்த புத்தர் சிலைகள் உள்ளன. குழுமணியைச் சேர்ந்த, பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், பிரபை, கழுத்தில் மூன்று மடிப்புகள், மடிந்த நிலையிலுள்ள இடது புறமாகச் செல்லும் மேலாடை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், தலையில் தீச்சுடருக்கு மேலாக போதிமரக்கிளைகள், இரு புறங்களிலும் காவலர்கள் ஆகியவற்றுடன் உள்ளது. பேட்டைவாய்த்தலையில் மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக இருந்த பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பில் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. முசிறியைச் சேர்ந்த, பொ.ஆ.19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையிலுள்ள சிலையின் கலையமைதி பிற புத்தர் சிலைகளிலிருந்து மாறுபட்டு உள்ளது. வலது கை அபய முத்திரையிலும், இடது கை மடியின்மீது வைக்கப்பட்டும் உள்ளன. மார்பு முதல் உடல் முழுவதும் காணப்படும் ஆடை இடது தோள் வழியாக அணியப்பட்டுள்ளது. தலையிலுள்ள முடி போன்ற அமைப்பு தொப்பி அணிந்ததைப் போலக் காணப்படுகிறது.
மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகத்தில் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை உள்ளது. பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் தீச்சுடர், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. பின்புறத்தில் இரு பக்கத் தூண்களின்மீது அரை வட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய தோரணம் உள்ளது. வலது தோள் சிதைந்தும், முகம் தெளிவின்றியும் உள்ளன.
இம்மாவட்டத்தில் பேட்டைவாய்த்தலைப் பகுதியைச் சேர்ந்த இரு சிலைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஒரு சிலை மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டு என்ற வகையில் சோழர் காலக் கல்வெட்டினைக் கொண்ட பெருமையைத் திருச்சி மாவட்டம் கொண்டுள்ளது. அடுத்த பதிவில் பிறிதொரு மாவட்டத்திற்குச் செல்வோம்.
துணை நின்றவை
- வேங்கடசாமி, மயிலை சீனி. (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
- (1999, ஜூன் 17). மீசையுடன் கூடிய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர்.
- ஸ்ரீதரன், கி. (ஜூன் 2002). கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளிக் கல்வெட்டு, கல்வெட்டு, இதழ் 57.
- (2008, அக்டோபர் 20). திருச்சியில் புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி.
- (2011, ஏப்ரல் 24). சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2011/03/blog-post_12.html
- (2012, அக்டோபர் 1). பௌத்த சுவட்டைத்தேடி : பேட்டைவாய்த்தலை, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2012/10/blog-post.html
- ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
- (2022, ஜூலை 1). பௌத்த சுவட்டைத்தேடி : காஜாமலை, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2022/07/2008.html
- Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, ஜூன் 2025
-------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment