அறிவியலாளர் நெல்லை சு.முத்து

அன்பு நண்பரும் அறிவியல் எழுத்தாளருமான திரு நெல்லை சு.முத்து அவர்கள் இயற்கையெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவருடைய எழுத்தும், வாசிப்பும் போற்றத்தக்கன. நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், மிகச்சிறந்த அறிவியல் நூல்களும் எழுதியவர். அவருடைய அறிவியல் ஆர்வத்தை பிறர் தம்மை அதில் ஈடுபடுத்திக்கொள்ளும் அளவிற்குப் பயன்படுத்தியவர். மிக எளிமையான சொற்களில் அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய அறிவியல் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மை உடன் அழைத்துக்கொண்டுபோவது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். எங்கும் நெருடல் இன்றி அதே சமயத்தில் நீண்ட சொற்றொடரைப் பயன்படுத்தாமல் வாசிக்கும்போது மனதில் பதியும் அளவிற்கு எழுதும் ஆற்றல் படைத்தவர். அவர் சொற்களைப் பயன்படுத்தும் விதம் வியப்பினை உண்டாக்கும். அவருடைய மொழிபெயர்ப்பு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.

தி வீக் ஆங்கில இதழில் வெளியான நீங்கள் க்ளோன் செய்யப்படலாம் என்ற கட்டுரையினை மொழிபெயர்த்து அறிக அறிவியல் இதழில் எழுதினேன். படியாக்கம் தொடர்பாக நான் முதன்முதலாக எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அதிகம் பாராட்டினார். பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகக் கருத்தரங்குகளில் அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நான் எழுதிய படியாக்கம் என்ற நூலுக்காக என்னைப் பாராட்டியவர். அப்போது அவர் இவ்வாறான செய்திகள் தமிழில் வெளிவரவேண்டும் என்ற தன்னுடைய அவாவினைப் பகிர்ந்துகொண்டார். என்னுடைய பௌத்த ஆய்விற்கு ஊக்கம் தந்த பெருமகனாரில் அவரும் ஒருவர்.

2024 மார்ச்சில் புலிவலம் சங்கரா நர்சரிப்பள்ளி விழாவிற்காக வந்தபோது என்னைக்காண எங்கள் இல்லம் வந்தது என்னை அதிகம் நெகிழ வைத்தது. ஆய்வு தொடர்பாக அதிகம் விவாதித்தோம். அவருடைய நூல்களைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தார்.

தஞ்சாவூரில் எங்கள் இல்லத்தில்....

அவருடன் நிகழ்விற்குச் சென்றபோது அருகிலுள்ள புத்தர் சிலையொன்றைக் காண விரும்பினார். நான் அவரை திருவாரூர் அருங்காட்சியகத்திலுள்ள கண்டிரமாணிக்கம் புத்தரைக் காண அழைத்துச் சென்றேன். மகிழ்வுந்தில் பயணித்தபோது முற்றிலும் அவருடைய பணி, எழுத்து, ஆய்வு, மொழிபெயர்ப்பு தொடர்பாக பேசிகொண்டே வந்தார். தொடர்ந்து அவ்வாறாகப் பேசிய ஓர் அறிஞரை, ஆய்வாளரை அப்போதுதான் அவர் மூலமாகக் கண்டேன். பின்னர் திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து விழாவிற்குச் சென்றோம்.

திருவாரூர், அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கண்டிரமாணிக்கம் புத்தருடன்..

திருவாரூர் கோயில் முன்பாக

அறிவியல் உலகிற்கு ஓர் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Comments

  1. ஐயா ஒரு முறை எங்கள் இல்லத்திற்கு வந்தார். அவர் நிதானமாகவும், பொறுமையாகவும் பேசினார். ஒரு பெரிய அறிவியல் அறிஞர் பேசியதைப்பார்த்து வியந்தேன். அவருடைய கட்டுரைகள் தினமணியில் வரும் பொழுது தவறாமல் படிப்பேன். அண்மையில் 6.6.2025இல் அவருடைய கட்டுரை தினமணியில் வெளியானது. அவருடைய கட்டுரைகளில் வார்த்தைகள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். அவருடைய இயற்கையெய்த செய்தியைக் கேட்டு மனம் வருந்தினேன். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment