திருவாரூர் மாவட்டத்தில் பௌத்தம்
இடும்பவனம் அருகில் காடுவெட்டியில் பொ.ஆ.9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘அம்மணசாமி’ என்றழைக்கப்பட்ட அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை, நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, மேலாடை ஆகியவற்றுடன் இச்சிலை இருந்தது. மன்னார்குடி அருகில் உள்ளிக்கோட்டையில் செட்டியார்மேடு என்னுமிடத்தில் ‘செட்டியார்’ என்றும், ‘ராஜகுமாரன்’ என்றும் அழைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை சற்றே மூடிய கண்கள், புன்னகை சிந்தும் இதழ்கள், நீண்ட காதுகள், தலையில் வரிசையாகச் சுருள்முடி, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடதுபுற மார்பை மூடிய மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் இருந்தது. தீச்சுடரும், மூக்கும் சிதைந்தும், கால்களும், முழங்கைக்குக் கீழும், பீடமும் உடைந்தும் இருந்தன. நன்னிலம் வட்டம் கோட்டப்பாடி அருகில் குரும்பூரில் ஒரு புத்தர் சிலை இருந்தது. அடுத்தடுத்த களப்பணியின்போது இச்சிலைகளை அவ்விடத்தில் காணவில்லை.
குடவாசல் வட்டம் சீதக்கமங்கலத்தில் தலைவெட்டிமதில் என்னுமிடத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி ஆகியவற்றுடன் உள்ளது. இச்சிலை இருப்பதால் விளைச்சல் பெருகுவதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
திருநாட்டியத்தான்குடியில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில், சோழ நாட்டில் உள்ள பிற புத்தர் சிலைகளுக்கான கூறுகளுடன் ஒரு சிலை உள்ளது. மழை வராவிட்டால் இதற்கு எருக்க மாலை அணிவித்து, தப்படித்து கற்பூரம் ஏற்றுவார்கள் என்றும், அவ்வாறு கற்பூரத்தை ஏற்றுவதற்கு முன்பாகவே மழை வந்துவிடும் என்றும், மழை வந்தபின்னர் சிலையைச் சாய்த்து வைத்துவிடுவதாகவும் இவ்வூரில் கூறினர். அடுத்த களப்பணியின்போது அதன் தலையைக் காணமுடியவில்லை. இச்சிலை இருக்கும் இடத்தின் அருகில் மற்றொரு புத்தர் சிலை உள்ளது.
திருப்பாம்புரத்திற்குக் கிழக்கில் கிள்ளியூரில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது. இச்சிலை சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, முதுகின் பின்புறத்தில் திண்டு, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. பின்புறத்தில் இரு பக்கத் தூண்களின்மீது செவ்வக வடிவில் உள்ள தோரணத்திலும், அதைச் சுற்றிலும் அழகான சிற்ப வேலைப்பாடு உள்ளது. ‘சிவனார்’ என்றழைக்கப்படும் இச்சிலைக்கு தினமும் விளக்கேற்றுவதோடு, செவ்வாய், வெள்ளி போன்ற நாள்களிலும், பிரார்த்தனை நிறைவேறும்போதும் சர்க்கரைப்பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் அருகில் உள்ள புதூரில் ஒரு மரத்தடியில் ஒரு புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ளது. சிலை இருந்த இடம் ‘போத்தன் குட்டை’ என்றும் ‘புத்தன் குட்டை’ என்றும் அழைக்கப்படுகிறது. சிலையின் மூக்கு சரியில்லாமல் இருந்ததால் சிற்பியை வைத்து அதனைச் சரிசெய்து டாலருடன் கூடிய கழுத்தணியை அமைத்ததாகவும் உள்ளூரில் கூறினர். தினமும் கோலம் போட்டு, விளக்கேற்றுவதோடு, ஒவ்வொரு வைகாசி பூர்ணிமாவிற்கும் சிறப்புப்பூஜை செய்கின்றனர். சிலையின் நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசி வழிபடுகின்றனர். இந்தச் சிலையை மணமாகாத பெண்கள் கோலம் போட்டுத் தொடர்ந்து வழிபட்டால் மணமாகும் என்றும், “மூலதோர் பிரம்ம ரூபாய, மத்யதோர் விஷ்ணு ரூபிணி, அக்ரதோர் சிவ ரூபாய” என்று சொல்லி 108 முறை சிலையை விடிவதற்குள் யார் கண்ணிலும் படாமல் சுற்றிவிட்டுத் திரும்பினால் நினைத்தவை கைகூடும் என்றும் நம்புகின்றனர்.
மன்னார்குடி, மல்லிநாதசுவாமி ஜினாலயத்தில் ‘சமணர்’ என்றழைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலை வழிபாட்டில் இருந்தது. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த அந்தப் புத்தர் சிலையை அடுத்தடுத்த களப்பணியின்போது காணவில்லை.
வலங்கைமான் அருகில் வளையமாபுரத்தில் அமர்ந்த நிலையில் தலையில்லாத, பொ.ஆ.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஒரு புத்தர் சிலை உள்ளது. முன்பிருந்த மண்மேட்டைச் சமப்படுத்தும்போது உடற்பகுதியும், தலைப்பகுதியும் தனித்தனியாகக் கிடைத்ததாகவும், தலைப்பகுதியை அவ்வப்போது கதிர் அடிப்பதற்காக எடுத்துச்செல்வதால், அதனைத் தற்போது காணவில்லை என்றும் உள்ளூரில் கூறினர்.
இலையூர், கண்டிரமாணிக்கம், வலங்கைமான் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலைகள் அருங்காட்சியகங்களிலுள்ளன. இலையூரைச் சேர்ந்த புத்தர் சிலை சென்னை, அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை குறுகிய நீண்ட முகம், நெற்றியில் திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், கழுத்தில் மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. வலது உள்ளங்கை சிதைந்துள்ளது. சற்றொப்ப இதே கலையமைதியுடன் உள்ள, முதல் களப்பணியின்போது கண்டிரமாணிக்கத்தில் இருந்த, பொ.ஆ.10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை தற்போது திருவாரூர், அரசு அருங்காட்சித்தில் உள்ளது. வலங்கைமானைச் சேர்ந்த, பொ.ஆ.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, 27 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தர் சிலை கங்கைகொண்ட சோழபுரம், இராசேந்திரசோழன் அகழ்வைப்பகத்தில் உள்ளது. சோழ நாட்டில் உள்ள புத்தர் சிலைகளில் இதுவே சிறியதாகும். வலங்கைமான் என்பதானது சில பதிவுகளில் வலங்கைமான்புத்தூர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
விடையபுரத்தைச் சேர்ந்த புத்தர் சிலை குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளது. இரு பகுதிகளாக நெடுக்குவாட்டில் உள்ள இச்சிலையின் ஒரு பகுதி தெளிவாகவும், மற்றொரு பகுதி தெளிவின்றியும் உள்ளது. இவ்வாறாக நெடுக்குவாட்டில் உள்ள சிலை இது மட்டுமேயாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் கோயில், விகாரம், கல்வெட்டு என்ற வகையில் பிற சான்றுகள் எவையும் காணப்படவில்லை. இங்கு பௌத்த சமயம் பரவியிருந்ததை உணர்த்தும் சான்றுகளாக உள்ள இந்தப் புத்தர் சிலைகள் முன்பிருந்த விகாரம், கோயிலில் இடம்பெற்றிருக்க வாய்ப்புண்டு.
துணை நின்றவை
- வேங்கடசாமி, மயிலை சீனி. (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
- (2000, அக்டோபர் 31). திருவாரூர் அருகே புத்தர் வழிபாடு, தினமணி.
- (2002, ஏப்ரல் 18). குடவாசல் அருகே புத்தர் சிலையின் தலை கண்டெடுப்பு, தினமலர்.
- (2003, March 20). Rare sculptures found in Tiruvarur district, The Hindu.
- (2005, ஜனவரி 26). உள்ளிக்கோட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டெடுப்பு, தமிழ் முரசு.
- (2007, மே 28). திருவாரூர் அருகே வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர்.
- (2012, ஜூலை 25). 10ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி.
- (2014, பிப்ரவரி 1). பௌத்த சுவட்டைத்தேடி : புதூர், சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2014/02/blog-post.html
- (2021, டிசம்பர் 1). பௌத்த சுவட்டைத்தேடி : திருநாட்டியத்தான்குடி, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2021/12/blog-post.html
- ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
- Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் தங்கள் தேடல்களும் பதிவுகளும்...
ReplyDelete