புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்
பாலி மொழியில் இருந்த திரிபிடகம் பொ.ஆ.19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் தற்போது, 21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழிலும் வெளிவரத் துவங்கியுள்ளதாகவும், அதன் முதல் முயற்சியாக சுத்தபிடகத்தின் முதல் நூலான தீகநிகாயம் முழுவதும் வெளியிடப்படுவதாகவும், இதன் தொடர்ச்சியாக சுத்தபிடகம் முழுமையும் தமிழில் கொண்டுவரப்படும் என்ற உறுதிப்பாட்டைத் திரிபிடகத் தமிழாக்கக் குழு கூறுவதில் பெருமை கொள்வதாகவும் பிக்கு போதிபால கூறுகிறார்.
'புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்' என்ற இந்நூலின் முதல் பதிப்பிற்கான முகவுரை மூலமாக இதன் பெருமையை உணரமுடியும். "உயர்வுற்ற, பேரறிவும் பெருமன்பும் மிகைந்த பிக்கு போதிபாலா அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாலியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமிருந்த புத்தரின் போதனைகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டுவரும் அளப்பரிய பணியில் இந்த தீகநிகாயம் இன்று நம் கையில் தவழ்கிறது. மனித வாழ்வின் விழுமியமான மகிழ்வும், அமைதியும் பௌத்தத்தின் வேர்களினின்றே பூக்கும் என்னும் உண்மை இந்த தீகநியாகத்தில் நிரம்பி இருக்கிறது. பௌத்தச் சாற்றினை உறிஞ்சிய வேர்கள் தங்கள் கிளைகளுக்கும் குருத்துகளுக்கும் இதைக் கொண்டு சேர்க்கும் பாங்கின் வெளிப்பாடே இந்த அற்புதமான நூல்."
ஞானப்பேறான நிப்பாண அனுபவத்தைப் பெற்ற 35ஆம் வயது முதல் தாம் மகாபரிநிப்பாணம் அடைந்த 80ஆம் வயது வரை, 45 ஆண்டுகளில் புத்தர் 84,000 போதனைகளைத் தன் தாய்மொழியான பாலி மொழியில் தன்னுடைய சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் போதித்ததாகக் கூறுவர்.
புத்த பெருமான் ஆற்றிய பேருரைகளின் தொகுப்பான திரிபிடகம் எனப்படுகின்ற முக்கூடையில் சுத்த பிடகம் (பிக்குகளுக்கும், இல்லறத்தாருக்கும் பல்வேறு சமயங்களில் வழங்கப்பட்ட பேருரைகளைக் கொண்ட பேருரைப் பகுதி), அபிதம்ம பிடகம் (உன்னதமான தத்துவங்களை விளக்குகின்ற உன்னதக்கோட்பாட்டுப் பகுதி), விநய பிடகம் (பிக்குகள், பிக்குணிகளுக்கான நடத்தை விதிமுறைகளை விளக்குகின்ற நன்னடத்தைப் பகுதி) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன.
சுத்த பிடகமானது தீகநிகாயம் (நீண்ட பேருரைகள்), மஜ்ஜிம நிகாயம் (இடைப்பட்ட அளவு பேருரைகள்), சம்யுக்த நிகாயம் (உறவுடைக் கூற்றுகள்), அங்குத்தர நிகாயம் (படிப்படியான உரைகள்), குந்தக நிகாயம் (சிற்றுரைத் தொகுப்பு) என்று ஐந்து பிரிவுகளாகப் (நிகாயங்கள்) பிரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அபிதம்ம பிடகமும், விநய பிடகமும் பல பிரிவுகளைக் கொண்டுள்ளன.
தீகநிகாயத்தில் சீலக் கந்த வக்கம் (ஒழுக்கவியல், 1-13), மகா வக்கம் (பெரும் இயல்,14-23), பாடிய வக்கம் (வாழ்வியல், 24-34) என்ற மூன்று பிரிவுகளில் 34 போதனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த போதனைகள் அல்லது சொற்பொழிவுகள் மூலமாகப் புத்தர், துறவியாக இருப்பதன் பலன், சாதிப்பாகுபாடு மறுப்பு, அந்தணர் என்போர் யார், யாகத்தின் தீமைகள், நிப்பாணத்தின் சிறப்பு, தூய்மையான பயிற்சியில் இருப்பவர்களுக்கு உடல் மற்றும் உயிர் ஆகியவற்றைப் பற்றிய வினாக்கள் தேவையற்றவை, சுயவதைப்பு வீடுபேற்றிற்கு உதவாது, ஆன்மாவின் இயல்பு மற்றும் தன்மை, தியானம் மற்றும் பேரறிவு, இருத்தி ஆற்றல்களான சித்துக்களை வெளியிட வேண்டாம் என்ற கட்டளை, நல்ல ஆசிரியரின் தகுதி, முற்கால புத்தரான விபஸ்ஸி புத்தர் பற்றிய செய்தி, காரண காரியச் சங்கிலித்தொடர்-ஆன்மா, தோன்றும் பொருள்கள் மறையும், துன்பத்தின் நான்கு வகை உண்மைகள், இரு வகையான துறவிகள், ஞானிகளிடம் காணப்படும் 32 சிறப்பு உடல் கூறுகள் போன்றவற்றைப் போதிக்கிறார். புத்தரின் தலைமைச்சீடரான ஆனந்தர் கூறும் விளக்கங்கள், புத்தர் இருக்கும்போதே அவர் முன்னிலையில் சாரிபுத்தர் வினா விடை வடிவத்தில் ஆற்றிய உரை ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த போதனைகள் ததாகதர் பெரிய சங்கத்துடன் பல ஊர்களுக்குப் பயணிக்கும்போதும், வனத்தில் தங்கியிருக்கும்போதும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மனிதர்களுடன் ஆற்றிய உரையாடல்களாகும். இவை ஐயங்களைத் தீர்த்துவைப்பனவாகவும், தெளிவுபடுத்துவனவாகவும், சிறந்த புரிதலைத் தருவனவாகவும் உள்ளன.
இந்த அறவுரைகளைப் படிக்கும் வாசகர்கள் புத்தருடன் பயணிப்பது போன்ற உணர்வைப் பெறுவதோடு, தாம் கேட்க நினைத்த பல வகையான கேள்விகளுக்கு உரிய மறுமொழியைப் பெற்று, தெளிவு அடைந்த நிலையையும் பெறுவர்.
திரிபிடக நூல் வெளியீட்டு முயற்சியானது தொடர் முயற்சியும், பெருமுயற்சியும் ஆகும். சுத்த பிடகத்தின் முதல் நூலான தீகநிகாயத்தை வெளியிட்டு அரும்பணியாற்றியுள்ள திரிபிடக தமிழாக்கக் குழு இதன் தொடர்ச்சியாக சுத்த பிடகம் முழுமையையும் தமிழில் கொண்டுவரும் உறுதிப்பாட்டில் இருந்து செயல்படுவது மிகவும் போற்றத்தக்கதாகும். இவ்வாறான ஓர் அரிய பணியை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வருகின்ற திரிபிடக தமிழ் நிறுவனப் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நூல்: புத்தரின் போதனைகள்-தீகநிகாயம்-நீண்ட பேருரைகள்
தமிழாக்கம்: போதிபால மகாதேரோ மற்றும் திரிபிடகத் தமிழாக்கக் குழுவினர்
பதிப்பகம்: திரிபிடகத் தமிழ் நிறுவனம், 89, மூன்றாவது தெரு, மல்லீஸ்வரி நகர், சேலையூர், சென்னை 600 126, அலைபேசி 94453 69542, மின்னஞ்சல் tripitakatamil@gmail.com
பதிப்பாண்டு: இரண்டாம் பதிப்பு, பிப்ரவரி 2026
விலை: ரூ.500






Comments
Post a Comment