வரலாற்றுத் தரவுகளை மிகைப்படுத்தாதீர்கள்


கும்பகோணத்தில் தொடங்கிய உங்கள் கல்விப் பயணம், தமிழ்ப் பல்கலைக்கழகம் வரை எப்படி அமைந்தது?
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதி ஆரம்பப்பள்ளியில் கற்ற கல்வி, தாத்தாவிடம் கற்றுக்கொண்ட நாளிதழ் வாசிப்புப்பழக்கம், அக்காலகட்டத்தில் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப்பயிற்சி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபோது பெற்ற கடிதம் எழுதும் திறன் என்ற பின்புலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கிருந்த கல்விச்சூழல் பல நிலைகளில் கைகொடுத்தது. கல்வியாளர்களுக்கான தட்டச்சுப்பணிகளை மேற்கொண்டபோது பல அனுபவங்களைப் பெற்றேன். ஒரு காலத்தில் அலுவல்நிலைப்பணியாளராக இருந்தபோது நான் அனுப்பிய, தமிழ்ப் பல்கலைக்கழக செய்தி மலரிலும், காலாண்டிதழ்களிலும் என் கட்டுரைகளும், புத்தர் சிலை கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகளும் வெளியானது என் தொடர் முயற்சியின் வெற்றியாகக் கருதுகிறேன். தட்டச்சுச்சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்ற என்னை ஒரு ஆய்வாளனாக ஆக்கியது இந்தச் சூழலே.

சோழ நாட்டின் பௌத்த, சமண வரலாற்றை ஆய்வு செய்யும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
கல்லூரிக்காலத்தில், 1970களில் இடையில், தி இந்து நாளிதழ் வாசிக்க ஆரம்பித்தபோது அதில் உள்ள புதிய சொற்களுக்கான பொருளை அறிய ஆங்கில அகராதிகளைப் பயன்படுத்துவேன். நாளொரு சொல் அறிதல் என்று ஆரம்பித்த வேட்கையானது அதிகம் தொடப்படாத துறையில் ஆய்வினை மேற்கொண்டு புதியனவற்றை வெளிக்கொணர வேண்டும் என்ற உணர்வைத் தந்தது. கல்கியின் வரலாற்றுப்புதினங்களில் ஆய்வு மேற்கொள்ள விரும்பியபோது, பொன்னியின் செல்வனில் வரும் நாகப்பட்டின விகாரை பௌத்த ஆய்விற்கான ஆரம்பமாக அமைந்தது. களப்பணி மூலம் பௌத்த விகாரங்கள், சிலைகள், கோயில்கள் என்ற வகையில் தரவுகளைத் தேடி வரலாற்றுக்குப் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற ஆர்வம் மேம்பட்டது. பௌத்தத் தேடலின்போது சமணமும் அதில் இயல்பாக சேர்ந்துகொண்டது.

புத்தர், சமண தீர்த்தங்கரர் சிலைகள் உள்ளிட்ட அரிய வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்த அனுபவம் எப்படி இருந்தது?
கூகுள் வராத காலகட்டம். ஒவ்வொரு இடத்தையும் தேடிச் சென்று கண்டுபிடிக்கவேண்டிய நிலை. சைக்கிள், பேருந்து என்ற வகையில் களப்பணி அமைந்தது. ஐந்து கி.மீ.க்கு மேல் நடந்துசென்ற அனுபவமும், 25 கி.மீ. வரை சைக்கிளில் சென்ற அனுபவமும் உண்டு. பார்த்த சிலைகளை வெவ்வேறு வழியில் சென்று பார்த்தல், காடுமேடு, முள்கள் நிறைந்த பகுதிகளில் பயணம், பேய்-பிசாசு பயமுறுத்தல்கள், கால்வாயைக் கடந்து செல்லல், கட்டெறும்புக்கடிகளை சமாளித்தல், சில இடங்களில் உள்ளூர் மக்கள் துரத்துதல், எடுத்துச்சென்ற குடிதண்ணீர் தீர்ந்துபோய் தவித்தல் போன்ற பல இன்னல்களை எதிர்கொண்டேன். என் தேடலின் விளைவாக வெளியுலகிற்குத் தெரியாமல் இருந்த பல புத்தர் சிலைகளையும், புத்தர் என்றழைக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விக்கிப்பீடியாவில் 1,600-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். இந்தப் பணியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் பிறந்த ஊர் (கும்பகோணம்), மாவட்டம் (தஞ்சாவூர்), படித்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், எனக்குத் தெரிந்த அறிஞர்கள் என்ற வகையில் செய்திகளை விக்கிப்பீடியாவில் பதிய ஆரம்பித்தேன். அதற்கான புகைப்படங்களை நானே எடுத்து அனைத்து மொழி விக்கிப்பீடியாவிலும் பதிவேற்ற உதவியாகப் பொதுவகத்தில் இணைப்பேன். அந்தந்தப் பகுதியைச் சார்ந்தோர் அவ்வாறு எழுதினால் விக்கிப்பீடியாவில் இல்லாததே இல்லை என்று கூறுமளவிற்குச் சாதிக்கமுடியும். ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத தமிழ்நாடு, தமிழர் பண்பாடு வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் தொடர்பானவற்றைத் தமிழிலிருந்து மொழிபெயர்த்துப் பதிவேன். அவை தொடர்பான முன்னரே இருக்கும் பதிவுகளை மேம்படுத்துவேன். தமிழ் மொழி அறியாதோர் தமிழ் சார்ந்தவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும், நம் பெருமையை பிறரும் அறியவேண்டும் என்ற நோக்கத்திலும் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதுவதில் கவனம் செலுத்துகிறேன்.

மொழிபெயர்ப்பில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
புதிய சொல் தேடல் என்னை மொழிபெயர்ப்புத் தளத்திற்கு அழைத்துச்சென்றது. குறிப்பிட்ட தலைப்பில் மொழியாக்கம் செய்யும்போது அப்பொருண்மை தொடர்பானவற்றை மனதிற்குள் கொண்டுவருவேன். உரிய சொல்லை அமைக்கமுடியாமல் சிக்கல் ஏற்படும் சமயங்களில் துறைசார்ந்த அறிஞர்களையோ, அகராதியையோ நாடுவேன். சொல்லுக்குச் சொல்லாக அல்லாமல் பொருளை உணர்ந்து மொழிபெயர்க்கும்போது சவால்களை எளிதில் எதிர்கொள்ளலாம். இருமொழித் திறனை மேம்படுத்திக்கொண்டால் சிக்கல்கள் குறைய வாய்ப்புண்டு. மூல மொழிக்கும், இலக்கு மொழிக்கும் இடையேயான வேறுபாட்டினைப் புரிந்துகொண்டு மொழிபெயர்க்கவேண்டும். எளிதில் வாசகரைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் செயல்படவேண்டும். அதே நேரத்தில் சமூகச்சூழலையும் மனதில் கொள்ளவேண்டியது அவசியம்.

களஆய்வுகள் மூலம் வரலாற்றைப் புரிந்துகொள்வதில் கிடைத்த முக்கிய அனுபவம் என்ன?
கள ஆய்வுகள் வரலாற்றைத் தகவமைக்கப் பெரிதும் உதவுகின்றன. களத்தில் சேகரிக்கும் தகவல்களை உடனடியாகப் பதிவது மிகவும் முக்கியமாகும். அவற்றை முதன்மை ஆதாரங்களோடு ஒப்புநோக்கும்போது பல புதிய வரலாற்றுச்செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி தன்னுடைய பௌத்தமும் தமிழும் நூலில் கும்பகோணம், பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலையைப் புத்தர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலக் களப்பணியின்போது, அனுபவம் அதிகம் இல்லாத காலகட்டத்தில், நானும் அவர் கருத்தை அப்படியே என்னுடைய எம்ஃபில் ஆய்வேட்டில் பதிந்தேன். அடுத்தடுத்த களப்பணியும், பல புத்தர் சிலைகளைப் பார்த்த அனுபவமும் அங்குள்ளது புத்தர் சிலை இல்லை என்ற தெளிவை எனக்குத் தந்தது. இதுபோன்று பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

நீங்கள் பெற்றுள்ள விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் உங்கள் பணிக்கு அளிக்கும் ஊக்கம் என்ன?
நான் பெற்ற விருதுகளை என் ஆய்வுக்கும், தேடலுக்கும் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். எனக்கு விருதுகளை வழங்கிய சோழர் வரலாற்று சங்கம், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

வரலாற்று ஆய்வில் ஆர்வமுள்ள இளம் தலைமுறைக்கு உங்கள் அறிவுரை என்ன?
ஆய்வு செய்கின்ற பொருண்மை தொடர்பான நூல்களைத் திரட்டுங்கள். அதிலுள்ள தரவுகளைக் காலம், இடம், பொருள்வாரியாகத் தொகுத்துக்கொள்ளுங்கள். துறை சார்ந்த அறிஞர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனை பெறுங்கள். பிறகு களத்திற்குச் செல்லுங்கள். உள்ளூர் மக்கள் மூலமாக செய்திகளைச் சேகரியுங்கள். அவர்கள் வாழும் இடத்தில் உள்ள வரலாற்றுச்சான்றுகளின் பெருமைகளை அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள். பெற்ற தரவுகளை மிகைப்படுத்தாமல் பதியுங்கள். விடுபாடு இருப்பதாகத் தோன்றினால் மறுபடியும் அவ்விடத்திற்குச் செல்லுங்கள். இவ்வாறாக ஆவணப்படுத்தப்படுபவை கட்டுரையாகவோ, நூலாகவோ வடிவம் பெறும்போது புதிய ஆய்வாளர்களுக்கு அவை ஒரு அரிய சான்றாக அமையும். 


-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------

Comments