பௌத்த சுவட்டைத் தேடி: கரூர்

26.9.1999
புதுக்கோட்டை மாவட்ட பௌத்த சமயச் சான்றுகளைக் காண்பதற்காக மேற்கொண்ட களப்பணியில் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைப் பார்க்கத்திட்டமிட்டபோது கரூரில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார்.

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார்கோயில் வழியாகக் கரூர் சென்றேன். அங்குள்ள நிலவளமுடைய அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தரைக் கண்டேன். 



அங்குள்ள கருப்பர்சாமிக்குக் கடா வெட்டுவது புத்தருக்குத் தெரியாமல் இருப்பதற்காக வலது பக்கம் தனியாக புத்தரை வைத்துள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வின்போது மூலவர் நிலவளமுடைய அய்யனார் சாமிக்கு முன்பாகத் திரையைப் போட்டுவிடுவதாகவும் கூறினர்.  அங்குள்ளோருக்கு நன்றி கூறிவிட்டு, அங்கிருந்து பொன்பற்றிக்குச் சென்றேன். அங்கு புத்தர் சிலை எதுவும் காணப்படவில்லை. அங்கிருந்து சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றேன். அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதித்துள்ளோம்.

10.10.2021
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" நூல் அச்சுப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது அச்சிலையைக் காண்பதற்காக அங்குச் செல்ல விரும்பினேன். தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும் ஆசிரியருமான திரு ஆ.மணிகண்டனைத் தொடர்பு கொண்டபோது அவரும் வருவதாகக் கூறினார். 

புதுக்கோட்டையிலிருந்து 10கி.மீ.க்குள் இருக்கும் என நினைத்துக் கிளம்பிய பயணம். கந்தர்வக்கோட்டையில் திரு மணிகண்டன் மகிழ்வுந்தில் ஏறி பேசியபின்னர்தான் தூரத்தை அறிந்தோம். அருங்காட்சியகமும், கரூர் நிலவளமுடைய அய்யனார் கோயிலும் செல்லத் திட்டம். தூரம் அதிகமாக இருந்ததால் முதலில் கரூர் பயணிப்போம் என முடிவெடுத்தோம், காலை சுமார் 9.15க்குக் கிளம்பினோம்.

எங்களுடன் பணி நிறைவு பெற்ற வட்டார வளர்ச்சி ஆணையர் திரு மணிராஜனும் வந்தார். போகும் வழியில் பரமந்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், ஆவுடையார்கோயில், ஒக்கூர் அபிவிருத்தீஸ்வரர் கோயில், குமுளூர் பிரம்மநந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்றோம்.


நிறைவாக கரூர், நிலவளமுடையார் அய்யனார் கோயிலை வந்தடைந்தோம். அக்கோயிலில் 2000இலும், 2013இலும் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகளைக் கண்டேன். 



பதினெட்டாம்படி கருப்பர், நாச்சியார் அம்மன், அகோர வீரபத்திரர், நொண்டிக்கருப்பர்-பத்ரகாளி, பைரவர், ஆஞ்சநேயர், சன்னாசி, பந்தியார் அம்மன் ஆகியோர் உள்ளிட்ட சன்னதிகளும், அருகில் குளமும் இருந்தன. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி இருந்தது. கோயிலின் முதன்மை வாயிலுக்கு முன்பாக ராஜகோபுர அமைப்பில் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முன்னர்ப் பார்த்ததைவிட தற்போது புத்தர் சிலை மிகவும் தெளிவாக இருந்தது.


புத்தரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது இரும்பாநாடு அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கும், சௌந்தரராஜப்பெருமாள் கோயிலுக்கும் சென்றுவிட்டு சுமார் 230 கி.மீ. பயணத்தை நிறைவு செய்து இரவு 8.00 மணிவாக்கில் கந்தர்வக்கோட்டை வந்தடைந்தோம். அவருக்கு நன்றி கூறிவிட்டு, பேருந்தில் தஞ்சாவூருக்குத் திரும்பினேன். 


2023
இந்தப் புத்தர் சிலை என்னுடைய நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளிலும் (சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2022, ப.58), (Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2023, p.82) ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.



Comments