புத்தர் சிலைகளை ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு: சுப்ரஜா கண்ணன்
ஜென் மூலை என்ற ஒருவகையான வாஸ்து தற்போது ப்ரபலமாகி உள்ளது. அதனால் புத்தர் சிலைகளை அனைவரும் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அலங்காரத்திற்காக அல்லாமல் வயல்களின் அருகே, காடுகளின் உள்ளே, குளங்களில், குட்டைகளில், பல்லாயிரம் ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல், வழிப்பாடும் இல்லாமல் கேட்பாரின்றி கிடக்கும் புத்தர் சிலைகளை கண்டதுண்டா?
அப்படி கண்டிருந்தாலும் அது புத்தர் சிலை தானா என்று தெரிந்திருக்குக்கூடுமா? புத்தர் வழிபாடு எப்போது தமிழகத்தில் தொடங்கியது? யாரால் கொண்டு வரப்பட்டது? புத்தருக்கென்று தனியாக கோவில்கள் இருந்தனவா? எங்கே? இப்போது அவைகளின் நிலமை என்ன? பண்டைய காலத்து புத்தர் சிலைகளை பார்க்கும்போது இப்படி பல கேள்விகள் நம்முள் எழுகின்றன அல்லவா?
இனி அந்தக் கேள்விகளுக்கு இடமில்லை (குறிப்பாக சோழ நாட்டு மக்களுக்கு). சோழநாடு என்று அறியப்படுகின்ற தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகள் அனைத்தையும் தேடி ஆராய்ந்து தொகுப்பாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில் “Buddhism in Chola Nadu” என்ற புத்தகமாக வெளியிட்டி இருக்கிறார் நம் தஞ்சையை சேர்ந்த ஐயா முனைவர்.பா.ஜம்புலிங்கம் அவர்கள். அப்புத்தகத்தைக் குறித்த விமர்சனமே இந்தக் கட்டுரை.
முதலில் இந்தப் புத்தகத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். நல்ல தரமான அட்டை, உயர்தர வழுவழுத்தாள், பெரிய எழுத்துக்கள், அழகான படங்கள். இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கவே அவ்வளவு ஆர்வமாக இருக்கும்.
அடுத்ததாக இந்தப் புத்தகத்தை ஆய்வாளர்களுக்கு அல்லாது பாமரருக்கும் பயனுள்ளதாக்க எழுத்தாளர் செய்து முயற்சி. சோழ நாடு என்பது என்ன? எத்தனை மாவட்டங்களை உள்ளடக்கியது? அசோகர் காலத்தில் தமிழகத்துக்கு வந்த புத்த மதத்தினை பற்றிய வரலாற்று குறிப்புகள், புத்தமதம் குறித்து தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள், புத்த விகாரங்கள் இருந்த இடங்கள் என்று அழகாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி தகவல்களை திரட்டி அளித்துள்ளார். வெறும் எழுத்தாக இல்லாமல் ஒவ்வொரு செய்திக்கும் வரலாற்று சான்றுகளுடன் குறிப்புகளும் கொடுத்து உள்ளார்.

அடுத்ததாக காலப் பயணம் (டைம் ட்ராவல்) செய்யும் வசதி. ஆம். எத்தனையோ வருடங்கள் முன் நடந்த சம்பவங்களை தற்போது காண நேர்ந்தால் அது டைம் ட்ராவல் தானே! அந்தந்த காலங்களில் புத்தர் சிலைகள் குறித்து வெளிவந்த செய்திகளை தொகுத்து எழுத்தாளர் நமக்காக இந்த புத்தகத்தில் ப்ரத்யேகமாக வழங்கி உள்ளார்.
சுவாரஸ்ய கதைகள்
எத்தனையோ முறை தஞ்சை பெரிய கோயிலுக்கும், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலுக்கும் சென்று உள்ளேன். ஆனால் அங்கே புத்தர் சிற்பங்களும் இருக்கிறது என்று இந்தப் புத்தகத்தை படிக்கும் போது தான் தெரிகிறது.
பல காலங்கள் முன் நாகப்பட்டினத்தில், கலங்கரை விளக்கம் போல் செயல்ப்பட்ட கண்காணிப்பு கோபுரம் இடிக்கப்பட்ட காரணம், மார்கோ போலோ, வால்டர் எல்லியட் வருகை என நிறைய வரலாற்று தகவல்கள் படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளன.
அதைத்தவிர ஒவ்வொரு ஊரிலும் எடுத்த புத்தர் புகைப்படங்களோடு அந்த புத்தரைக் குறித்து விளக்கமாகவும் எழுதியுள்ளார். மேலும் அந்தந்த ஊரில் புத்தரை வழிபடும் முறையையும் எழுதியுள்ளார். அதில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. உதாரணமாக கடன் கொடுத்தவர் , கடன் வாங்கியவர் ( Lender, Buyer) ஆகிய புத்தர்களும் அதற்கு கடன் வாங்கியவர்கள் செய்யும் வேண்டுதல்களையும் கேட்க மிகவும் புதுமையாக இருந்தது.

மழைவர புத்தரை படுக்கவைப்பது, கடாவெட்டும்போது புத்தரை மறைத்து வைப்பது, என்று அந்தந்த ஊர்மக்களின் நம்பிக்கைகளும் ரசிக்கும் படி இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு புத்தருக்கும் ஒரு கதை உண்டு. அத்தனையும் இந்தப் புத்தகத்தில் உண்டு.
இத்தனை புத்தர் சிலைகளை ஒருசேர நம்மால் பார்க்க முடியுமா என்று தெரியாது. ஆனால் இந்தப் புத்தகத்தை படித்தால் இதில் உள்ள புத்தர் சிலைகளை பார்த்தால் நிச்சயம் அந்த ஆசை நிறைவேறும். ஒவ்வொரு புகைப்படமும் மிகவும் துள்ளியமாகவும் பெரிதாக இருப்பதால் மிக அழகாக உள்ளன. புகைப்படங்களுக்காக அதிக கவனம் செலுத்திய புத்தகப் பதிப்பாளருக்கும் தனிப்பாரட்டுகள்.
ஆய்வாளரின் அர்ப்பணிப்பு
நம்மில் பெரும்பாலானோர் நமக்கான வேலைக்காக வெளியே அலைவதையே சிரமமாக கருதிகிறோம். ஆனால் ஐயா அவர்கள் கடந்து 30 வருடங்களாக காடு, மேடு, குட்டை, வயல், மழை, வெயில் என்றும் பாராமல், அத்தனை மனக்கெட்டு புத்தர் சிலைகளைத் தேடி அனைத்து இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதுவும் போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத ஊர்களுக்கும் வாடகை சைக்கிளிலும் சிலசமயங்களில் கால்நடையாகவும் பயணம் செய்து புத்தர்களை கண்டறிந்து உள்ளார். இன்னமும் செய்து வருகிறார்.

அத்தனை வருட உழைப்பையும் புத்தகமாக்கி கடந்த ஆண்டு ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற தமிழ் நூல் வெளியிட்டார். வெளியிடுவதற்கு முன்பு கூட தான் கண்ட புத்தர் சிலைகளின் தற்போதைய நிலையை மறுபடியும் ஒரு முறை நேரில் சென்று சரிபார்த்துவிட்டு பின் மீண்டும் நல்ல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அதை புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்.
அதை செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முன்பு சேகரித்த படங்கள், தகவல்களே போதுமானதாக இருப்பினும் இந்தப் புத்தகத்தை படிப்பவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியத் தகவல்களை சரிவரக் கொடுக்கவேண்டும் என்ற பெருந்தன்மை நோக்கோடு அதனை செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு புத்தகம் ஆங்கிலத்தில் ‘Buddhism in Chola Nadu’ வெளிவந்திருக்கிறது. இதிலும் இன்னும் சில புத்தர் சிலைகள் குறித்த செய்திகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவரின் இந்த உழைப்பு போற்றுதலுக்குரியது. நம்மில் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘Preface’ஐ புத்த பூர்ணிமா அன்று எழுத்தாளர் எழுதியுள்ளார். இதனை பார்க்கும்போது இந்தப் பணியை அவர் எவ்வளவு நேசித்து செய்திருக்கிறார் என்று தெரிகிறது.
இதில் குறிப்பிடப்படும் (Bibliography, Notes, Location of Buddha statues) போன்றவற்றை தொகுத்து முறையே அந்தந்த பக்கங்களில் வெளியிட எழுத்தாளர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை நினைத்தாலே ப்ரமிப்பாக இருக்கிறது.
இந்தப் புத்தகம் வரலாற்று ஆர்வலர்கள், புத்த மதத்தில் ஈடுபாடு உடையவர்கள் மட்டுமல்லாமல் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தை அவர்கள் மாதிரியாக வைத்து தங்கள் ஆராய்ச்சி புத்தகங்களை வெளியிடலாம்.
புத்தமதத்தின் வரலாறு குறித்தும், தமிழகத்தில் தழைத்தோங்கிய மற்ற மதங்கள் குறித்தும் அறிய வேண்டும் என்ற ஆவலும், எந்த மதச்சிலைகளையும் இனி சேதப்படுத்தாது பேண வேண்டும் என்ற எண்ணமும் இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:
புது எழுத்து, காவேரிப்பட்டினம், அலைபேசி: 98426 47101
சிம்ளி புக் சென்டர், தஞ்சாவூர், அலைபேசி: 96008 32452
-------------------------------------------------------------------------------------------



Comments
Post a Comment