பௌத்த சுவட்டைத் தேடி : சுந்தரபாண்டியன்பட்டினம்

     ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, கரூர், வன்னிச்சிப்பட்டினம், வெள்ளனூர் சுந்தரபாண்டியன்பட்டினம் ஆகியவை புதுக்கோட்டைப்பகுதியில் புத்தர் சிற்பங்கள் இருந்த இடங்களாகும். ஆலங்குடிப்பட்டி களப்பணி அனுபவத்திலிருந்து சற்று வித்தியாசமானது சுந்தரபாண்டியன்பட்டினம் அனுபவம். இங்கு புத்தர் இருக்கும் இடத்தினை முன்கூட்டியே அறிந்து சென்றபோது பெற்ற அனுபவம் இம்மாதப்பதிவு. 

அக்டோபர் 1993
      எனது ஆய்வுக்கான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் புத்தர் சிற்பங்களைத் தேட ஆரம்பித்தபோது என் மனதில்  கல்லூரிப்படிப்பை முடித்து வெளியே வந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. படிப்பை முடித்ததும் வேலை தேடும் படலத்தில் இறங்கிய போது பார்க்கும் ஒவ்வொருவரிடமும் என் தன்விவரக்குறிப்பினைக் கொடுப்பதையும், பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வேலைக்காக விண்ணப்பம் அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறே பௌத்தம் தொடர்பான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் நான் சந்திக்கும் நண்பர்களிடமும், அறிஞர்களிடமும் புத்தர் சிற்பங்கள்  எங்கெங்கு இருக்கின்றன எனக் கேட்க ஆரம்பித்தேன். பலர்  பௌத்த ஆய்வு தொடர்பாக பிற அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளையும் நூல்களையும் படிக்கத் தொடங்கும்படி அறிவுறுத்தினர். அவ்வாறாகப் படிக்க ஆரம்பித்தபோது எங்கெங்கு சிற்பங்கள் இருக்கின்றன என்ற ஒரு பொதுவான கருத்தினைப் பெற முடிந்தது. பின்னர் அவற்றைப் பட்டியலிட்டு ஒவ்வொரு சிற்பமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இந்நிலையில் முதலில் அருங்காட்சியகங்களிலுள்ள  சிற்பங்களைப் பார்ப்பது எனவும், பின்னர் தனித்தனியாக உள்ள சிற்பங்களைப் பார்ப்பது எனவும், இறுதி நிலையில் புதிய சிற்பங்களைத் தேடுவது எனவும் முடிவு செய்தேன். அச்சூழலில் பலர் எனக்கு புத்தர் சிற்பங்களைப் பற்றிய சில தகவல்களைக் கூறினர். ஒவ்வொருவர் சொன்னதையும் குறிப்பெடுத்துக் கொண்டு வாய்ப்பு, பொருளாதார நிலை, அலுவலக விடுமுறை என அனைத்துச் சூழல்களும் ஒருங்கே இணைந்து கைகொடுக்கும் நேரத்தில் களத்தில் இறங்கி ஒவ்வோர் இடத்திற்கும் சென்று புத்தர் சிற்பத்தைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டேன்.     

செப்டம்பர் 1999
     இவ்வாறான விவரங்களைத் தேடிக்கொண்டும், தொகுத்துக்கொண்டும் இருந்தபொழுது எனது ஆய்வைப் பற்றிக் கேள்விப்பட்ட முனைவர் சந்திரபோஸ் அவர்கள் "புதுக்கோட்டைப்பகுதியில் உள்ள புத்தர் சிற்பங்களைப் பார்த்துவிட்டீர்களா?" என்று கேட்டார். நான் பார்த்த புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறியதும், அவர் "புதுக்கோட்டை இராமநாதபுரம எல்லையில் கடற்கரையில் உள்ள சுந்தரபாண்டியன்பட்டினத்தில் உள்ள புத்தர் சிற்பத்தைப் பார்த்தீர்களா?" என்றார். அவ்வாறு பார்க்கவில்லை என்று நான் கூறியபின்னர் நின்றநிலையில் ஒரு புத்தர் சிவன்கோயிலில் இருப்பதாகத் தெரிவித்தார். அது இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பகுதி என்று அவர்  கூறியதும் ஆய்வு எல்லையைத் தாண்டுகிறதே அதைப் பார்க்கவேண்டுமா என்ற எண்ணம் என் மனதில் தோன்றினாலும், தமிழகத்தில் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிற்பங்கள் மிகக்குறைவாகவே உள்ளதால் அதைப் பார்க்கலாம் என்ற  ஆவல் எனக்கு எழுந்தது. தமிழகத்தில் நின்ற நிலையில் மூன்று இடங்களில் புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவை திருவலஞ்சுழி, சோழன்மாளிகை,  பூம்புகார் ஆகிய இடங்களைச் சார்ந்தவையாகும். நான் படித்தவரையிலும், விசாரித்தவரையிலும் இவற்றைத் தவிர நின்ற நிலையிலுள்ள புத்தர் சிற்பம் எங்குமில்லை. அவர் வேறு ஏதாவது சிற்பத்தைச் சொல்கின்றாரோ என்ற ஐயம் எனக்கு மேலிட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடம் விவரமாகப் பேசியபோது அவர் அந்த சிற்பம் புத்தர்தான் என்று உறுதியாகக் கூறினார். அடுத்த விடுமுறை நாளுக்காகக் காத்திருந்தேன்.   
      சிற்பம் இருப்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால் செல்லும்வழியில் ஏதாவது புத்தர் இருந்தால் பார்த்துவிட்டுப் பின்னர் சுந்தரபாண்டியன்பட்டினம் போகலாம் என முடிவெடுத்தேன். அப்போது கரூர் நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ள புத்தர் நினைவிற்கு வந்தார். பயணத்திட்டத்தை மாற்றி தஞ்சாவூர் புதுக்கோட்டை அறந்தாங்கி ஆவுடையார்கோயில் கரூர் என்ற நிலையில் பயணித்தேன். கரூர் புத்தரைப் பார்த்தேன். இந்த புத்தரைப் பார்த்த அனுபவம் பற்றி பி.ஆர்.சீனிவாசன் கூறியுள்ளதையும், அந்த புத்தரைப் பற்றிய செய்தியையும் மற்றொரு பயணத்தின்போது பரிமாறிக்கொள்வோம். பொன்பத்தி மீமிசல் வழியாக சுந்தரபாண்டியன்பட்டினம் சென்றடைந்தேன். முனைவர் சந்திரபோஸ் புத்தர் சிற்பம் இருக்கும் இடம் பற்றித் தெளிவாகக் கூறியிருந்ததால் தேட வேண்டிய அவசியம் எழவில்லை. அவர் கூறியிருந்த சிவன் கோயிலுக்குச் சென்றேன். அங்கிருந்த ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோயிலில் கருவறைக்கு முன்னர் வலப்புறத்தில் நின்ற நிலையில் புத்தர் சிற்பத்தைக் கண்டேன். சிற்பத்தைக் காணவும், புகைப்படமெடுக்கவும் அருகிலிருந்த திரு தியாகராசன் ஆச்சாரி உதவியாக இருந்தார். தமிழகத்தில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள நான்காவது புத்தரது கற்சிற்பத்தை முதன்முறையாகக் கண்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஓர் அரிய சிற்பத்தை எனக்கு அறிமுகப்படுத்திய முனைவர் சந்திரபோஸ் அவர்களுக்கு மனதார நன்றி கூறிக்கொண்டேன். இந்த சிற்பத்தைப் பார்த்தபின் எனக்கு சோழன்மாளிகையைச் சேர்ந்த  நின்ற நிலையிலான புத்தர் சிற்பம் நினைவிற்கு வந்தது. அச்சிற்பத்தைப் போலவே இச்சிற்பமும் இருந்தது. தவிரவும் இச்சிற்பம் சற்றொப்ப நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியின் அமைப்பைக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. செப்புச்சிற்பத்தைப் பார்த்து கல்லில் வடிவமைத்தால் காணப்படும் நேர்த்தி இந்த கற்சிற்பத்தில் காணப்பட்டது. ஆய்வேட்டினை பல்கலைக்கழகத்தில் அளிக்கும் நேரம் நெருங்கவும், பின்னர் தேர்வுக்கு ஆயத்தமாகவும் இருந்த சூழலில் இதனைப் பத்திரிக்கைச் செய்தியாகத் தர எனக்கு நேரம் கிடைக்கவில்லை.  

நவம்பர் 2002













சுந்தரபாண்டியன்பட்டினம் 
புத்தர் (2002)
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் முனைவர் ராஜா முகமது அவர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்புகொண்டு "புதுக்கோட்டைப் பகுதியில் நின்ற நிலையிலுள்ள புத்தர் சிற்பம் எதையாவது பார்த்துள்ளீர்களா" எனக் கேட்டார். அவர் சுந்தரபாண்டியன்பட்டினம் புத்தரைத்தான் கூறுகிறார் என்பதையறிந்து கொண்டேன். நான் பார்த்த விவரத்தைக் கூறியதும் அவர் மிகவும் மனமுவந்து புதுக்கோட்டை இராமநாதபுரம் கடற்கரையில் உள்ள புத்தரின் சிறப்புக்கூறுகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்தச் சிற்பம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகேயுள்ள மண்டபத்தின் கட்டட அமைப்பை நினைவுகூர்ந்தஅவர் அது ஒரு பௌத்தப்பள்ளியாக இருந்திருக்கக்கூடும் என்றும் கூறினார். எனது களப்பணியின்போது அந்த மண்டபத்தை நான் பார்த்ததையும் கூறினேன். நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த புத்தர் சிற்பத்தைத் தமிழ்கூர் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற அவரது ஆவலை வெளிப்படுத்தியபோது நான் நெகிழ்ந்துபோனேன். பின்னர் அதனை பத்திரிக்கைச்செய்தியாகத் தந்து நான் கூறியிருந்த செய்திகளையும் அதில் கூறியிருந்தார். அவரது முயற்சியால் இந்த புத்தரைப் பற்றிய செய்தி வெளியானது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆய்வுக்களத்திலுள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றி மட்டுமே எழுதியும், செய்திகளைச் சேகரித்தும் வந்த எனக்கு இந்த புத்தர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் சற்றே வித்தியாசமானது. களப்பணி மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் நின்ற நிலையிலான மிக  அழகிய புத்தர் சிற்பத்தை முதன்முதலாக நேரில் பார்க்கும் ஒரு நல்ல வாய்ப்பை இழந்திருப்பேன். பத்திரிக்கைச்செய்தியைப் பார்த்தவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பத்திரிக்கைகளில் வெளிவர ஏற்பாடு செய்தமைக்காக முனைவர் இராஜா முகமது அவர்களுக்கும், முதன்முதலாகச் செய்தியைத் தந்து உதவிய முனைவர் சந்திரபோஸ் அவர்களுக்கும்  நன்றி தெரிவித்தேன். இவ்வாறான நல்லுள்ளங்களின் ஆதரவு எனது பௌத்த ஆய்விற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.




நன்றி : 
முனைவர் சந்திரபோஸ்
முனைவர் ராஜா முகமது
செய்தியை வெளியிட்ட இதழ்கள் 


20. அக்டோபர் 2022இல் மேம்படுத்தப்பட்டது/

Comments

  1. தங்களின் அயரா முயற்சி தொடரட்டும். புதிய நூல் ஒன்றினை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment