மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தச் சமயச் சான்றுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பூம்புகார் எனப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தைப் போல சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த பௌத்த மையமாக விளங்கியது . இவ்வூர் சங்க காலம் முதற்கொண்டு பௌத்த சமயச் செல்வாக்கினைக் கொண்டிருந்தது . கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது . அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்தது . பூம்பட்டினம் எனவும் , பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்த பெயர்களை ஆராயும்போது , ஓர் அழகிய கடற்கரை நகராக அது விளங்கியதை உணரமுடிகிறது . பொ . ஆ . மு .3 ஆம் நூற்றாண்டில் மகிந்தர் இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கு முன்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு பௌத்த விகாரங்களைக் கட்டினார் என்றும் , சிலப்பதிகாரத்திலும் , மணிமேகலையிலும் கூறப்படுகின்ற இந்திர விகாரங்கள் இவர்...