பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1) : முனைவர் சு.மாதவன்









ஆய்வு வாழ்த்துரை

முனைவர் சு.மாதவன் எழுதியுள்ள பௌத்தத் தமிழியல்-பொதுவியல் 1 என்ற இந்நூல் எட்டு கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பெரிய தேடலை இந்நூலின் மூலம் ஆரம்பிக்கின்ற நூலாசிரியர் பௌத்த மற்றும் சமணம் தொடர்பான மொழி, வரலாறு, மெய்யியல் உள்ளிட்ட பொருண்மைகளை தமிழ் இலக்கியத் தளத்திலும், பிற தளங்களிலும் அமைத்து அவற்றை நடைமுறை வாழ்வியலோடு ஒத்து நோக்குகின்றார். இக்கட்டுரைகளைப் பற்றிய ஒரு பறவைப்பார்வை மூலமாக ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தினை அறியமுடியும்.

“அறம், தருமம், நீதி : இந்தியத் தத்துவ மரபும் இலக்கியத் தமிழ் மரபும்” என்ற முதல் கட்டுரையில் அறம், தருமம், நீதி ஆகிய மூன்றும் இலக்கியத் தமிழ் மரபிலும் இந்தியத் தத்துவ மரபிலும் கொண்டுள்ள தனித்த சிறப்பியல்புகளும், பொதுவியல்புகளும், பயனுறும் இடம், சூழல், விளைவு ஆகியவற்றுக்கேற்ப பொருள் வேறுபாடுகளும் கொண்டுள்ளமை ஒப்புநோக்கீட்டு அளவில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மரபில் வைதீக மரபு, அவைதீக மரபு கலந்து வெளிப்படும் நிலையில் தருமம், நீதி என்பதோடு மட்டுமன்றி புண்ணியம் என்பதோடும் இணைத்து குறிப்பிடப்படும் அனைத்து நன்னெறிகளையும் சுட்டும் ஒரே சொல்லாக ‘அறம்’ என்பது அமைந்துள்ளதும், இந்தியத் தத்துவ மரபில் வைதீக மரபில் தருமம், நீதி இரண்டும் வருணாசிரம அடிப்படையிலும், அவைதீக மரபில் மானுடநேய சமத்துவ நோக்கிலும் அணுகப்படுவதும் உரிய உதாரணங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.

“தமிழர் வாழ்வியலுக்குப் பெளத்த, சமணத்தின் கொடை” என்ற கட்டுரையில் பௌத்த சமணத்தின் தாக்கத்தில் உண்டான தமிழர் வாழ்வியல் மாற்றம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அகம், புறம் என்ற திணை அடிப்படையில் சங்க காலத் தமிழர் வாழ்வியலில் அறம் ஒரு முக்கியக்கூறாக இருந்ததிலும், அற இலக்கிய வாழ்வில் திணை அடிப்படை குறைய ஆரம்பித்து, அறம் முக்கிய இடத்தைப் பிடித்ததும், காப்பிய காலங்களில் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிறும் காப்பியங்களும் பௌத்த சமணக் காப்பியங்களாகவே அமைந்து, அகத்திணையில் கருப்பொருள், உரிப்பொருள் என்ற பின்னணிக்கு மாறாக பௌத்த சமண அறநெறிகள் முதன்மை இடத்தைப் பெற ஆரம்பித்ததும், அச்சூழலில் அகத்திணை இல்லறமாகவும், புறத்திணை துறவறமாகவும் மாறி, பௌத்த சமண நெறி வென்று, புறத்திணையில் இருந்த போர், வேள்வி என்பன அற்றுப்போய் தமிழர் வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டதும் உதாரணங்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

“நாளந்தாவும் காஞ்சியும் : இந்தியத் தமிழ் பெளத்த மையங்கள்” என்ற கட்டுரையில் இந்திய, தமிழ் பௌத்த மையங்களாக முறையே நாளந்தாவும் காஞ்சியும் அனைத்து வகையான சிந்தனைகளுக்குமான தளங்களாகவும், வட இந்தியா-தென்னிந்தியா, வைதீகம்–அவைதீகம் என்ற பல்வேறு முரண்களுக்கிடையே மண்சார்ந்தும் சிந்தனை சார்ந்ததுமான ஒருங்கிணைப்புப் பாலங்களாகவும் இயங்கியமை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. நாளந்தாவில் இருந்த பௌத்த அறிஞர்களுள் தருமபாலர், சுமதிசேனா இருவரும் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்கள் ஆவர். பௌத்த மெய்யியலிலும், இந்தியத் தரிசனங்களிலும், வடமொழியிலும் புலமை பெற்றிருந்த தருமபாலர் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக நீண்டகாலம் இருந்தவர். தருமபாலர் பிறப்பால் தமிழராதல் கூடும் என்பதும், இவருக்குப் பின்னர் இவரின் பொறுப்பை இவரது மாணவரான சீலபத்திரர் ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் நோக்கும்போது இந்தியத் தமிழ் பெளத்த மையங்களாக இவை செயல்பட்டு வந்ததை அறியமுடிகிறது.

“திருவாசக உருவாக்கத்தில் பெளத்த அறநெறிகள்” என்ற கட்டுரையில் தமிழ்ச் சமூக வாழ்வியலின் இயல்பான தேவையாலும் பௌத்த சமண வருகையாலும் உருவான அறநெறிகள் மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் கையாளப்பட்டுள்ள விதம் நுணுகி ஆராயப்பட்டுள்ளது. அறநெறிகளும் ஞானமும் கலந்த பௌத்த நெறிகள் திருவாசகத்தின் உருவாக்கத்திற்கும் உயிர்ப்பிற்கும் செயலாக்கத்திற்கும் உரியனவாக உள்ளன. வாழ்வியல் ஞானத்தையும் மானுட அன்பையும் பௌத்தமும், சிவஞானத்தையும் சிவபக்தியையும் திருவாசகமும் முன்னிலைப்படுத்துகின்றன. பௌத்த, சமண சமயங்கள் அறநெறிக்கு முதன்மையிடம் தந்ததைப் பின்பற்றி அவ்வாறே அறநெறிகளுக்குரிய ஓர் இடத்தைத் தரவேண்டிய நிலையில் சைவ, வைணவ சமயங்கள் இருந்தன. பௌத்த மெய்யியல் அறவியல் அடிப்படைகளான ஆசை, அனிச்சா, அவிஜ்ஜா போன்றவையும், பௌத்த பஞ்சசீலங்களான கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஆகியனவும் திருவாசகத்தில் காணப்படுவதன்மூலம் திருவாசக உருவாக்கத்தில் பௌத்த அறநெறிகளின் முக்கியத்துவத்தை உணரமுடியும் என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

“முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டில் பெளத்த, சமணக் கலைச்சொற்கள்” என்ற தலைப்பிலான கட்டுரைக்கு ஆதாரமாக வை.சுந்தரேச வாண்டையார் தொகுத்துள்ள முப்பது கல்வெட்டுகள் என்ற நூலிலிருந்து ஒரு கல்வெட்டு எடுத்து ஆராயப்படுகிறது. பௌத்த வருகையால் கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழில் பாலி மொழிச்சொற்கள் கலந்துவிட்டன. ‘குந்தவை ஜினாலயம்’ (‘ஜினாலயம்’ என்பது சமண கலைச்சொல்), ‘பள்ளிச்சந்தம்’ (பௌத்தப் பள்ளிகளும், சமணப்பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்ட கொடையைக் குறிக்கும் கலைச்சொல்), ‘தன்ம பாலன்’ (மன்னனின் பெயரைக் குறிக்கின்ற பௌத்தச் சார்புடைய சொல்) உள்ளிட்ட பல சொற்களைப் பற்றி இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ‘தம்மம்’ என்ற பாலி மொழி கலைச்சொல்லிற்கு தமிழில் ‘தன்மம்’ என்பது பொருளாகும். ‘தர்மம்’ என்ற சொல்லுக்கு வைதீகமும், சமணமும் வெவ்வேறு ஒட்டுமொத்த பௌத்த மெய்யியலைக் குறிக்கின்ற இச்சொல்லை பிற எந்த சமயமும் கையாளவில்லை என்பது தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“ஸ்ரீமத். உரையூர் காளங்கர் இயற்றிய 'நிகழ்காலத் திரங்கல்': படைப்பாக்க நெறியும் பதிப்பாக்க நெறியும்” என்ற கட்டுரையில் ஸ்ரீமத். உரையூர் காளங்கர் என்னும் பௌத்தத் தமிழ்ப் புலவர் இயற்றி, 1925இல் ஸ்ரீ சித்தார்த்த புத்தக சாலையாரால் பதிப்பிக்கப்பட்ட, நிகழ்காலத் திரங்கல் என்ற நூலைப் பற்றி ஆராயப்பட்டுள்ளது. புத்தர் இறந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் இரங்குவதால் இந்நூலுக்கு “நிகழ்காலத் திரங்கல்” எனப் பெயரிட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. புத்த ஆண்டும் (3411) இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரின் பிறப்பு, போதனைகள், அவற்றின் பின்னணிகள், நான்கு வாய்மைகள், பஞ்சசீலங்கள், அட்டாங்க மார்க்கம் அனைத்தும் காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் உள்ள எழுத்துப் பிழைகளை அவ்வாறே அச்சிட்டுப் பதிப்பித்துள்ளமை பதிப்பாசிரியர்களின் பதிப்பு நேர்மையைக் காட்டுகிறது. நூலின் இடையிடையே 38 இடங்களில் ஒன்றோ பலவோ செய்யுள்கள் விடுபட்டிருக்கக்கூடும் என்பன போன்றவற்றை இக்கட்டுரை எடுத்துக்கூறுகிறது.

“புத்தரும் வேதாத்திரி மகரிஷியும்” என்ற கட்டுரையில் இவ்வுலக வாழ்வில் துன்பம் உள்ளது, அதற்கான தோற்றுவாய் ஆசையில் அடங்கியுள்ளது, இத்துன்பங்களிலிருந்து நீங்க முடியும், துன்ப நீக்கங்களுக்கான வழிமுறை எண்வகை நெறிகள் என்ற பௌத்த மெய்யியலும், கடவுளைத் தேடிக்கொண்டேயிருந்தும் காண முடியாத குறை, வறுமை என்னும் பற்றாக்குறை, விளைவறியாமலோ விளைவையறிந்தும் அலட்சியம் செய்தோ, அவமதித்தோ துன்பத்தை அனுபவிக்கும் முறை, மனிதனின் சிறப்பறியாமல் பிறர்மீது அச்சமும், பகையும் கொண்டு துன்புறுத்தியும், துன்புற்றும் அல்லலுறும் குறை என்பனவற்றை துன்பங்களுக்கான காரணங்களாகும் என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்துகளும் ஆராயப்பட்டுள்ளன. ‘உலகம் துன்பமானது’ என்பதிலும், ‘இத்துன்பநிலை நீக்கப்படவேண்டியது’ என்பதிலும் புத்தரும் வேதாத்திரியும் வேற்றுமையில் ஒற்றுமை என்றவாறான கருத்துநிலையைக் கொண்டுள்ளதையும், மெய்யியல் உருவாக்கத்திற்கான கருத்தியல்களைத் தன்வயப்படுத்தும் முயற்சிக்குப் பௌத்த மெய்யியல் கருத்துக்களை வேதாத்திரி முன்மாதிரியாகக் கொண்டதும் இக்கட்டுரையில் நோக்கப்பட்டுள்ளது.

“பெளத்தமும் சமணமும் : மெய்யியலும் நடைமுறையும்” என்ற கட்டுரையில் ‘புத்தா’, ‘ஜைனா’ என்ற இரு சொற்களின் பொதுமைக்கூறு நோக்கப்படுகிறது. இரு சமயத் துறவியரும் அழைக்கப்படும் முறை, புத்தரின் பரிநிர்வாணம் மகாவீரரின் வீடுபேறு ஆகியவற்றின் பின்னரே அவர்களின் போதனைகளைத் தொகுத்த போக்கு, பௌத்தத்தின் பஞ்ச சீலமும், சமணத்தின் பஞ்சமா விரதங்களும் இட்டுச்செல்கின்ற வீடுபேறு ஆகியவை மெய்யியலாகின்றன. மாறாக, பௌத்தமும் சமணமும் சமயமாக மாறி புத்தரும் மகாவீரரும் கடவுளாக்கப்பட்ட நிலை, பௌத்தத்தில் பிக்குவை சாமியாராகப் பார்க்கும் பார்வை, சமணத்தில் சடங்கும் சம்பிரதாயங்களும் உருவாதல், சாதி இல்லை என்ற பௌத்தம் இந்தியாவில் இல்லாமல் போய் சாதி ஏற்பு நிலையால் சமணம் ஏற்கப்படல், சமத்துவப்பண்பை பௌத்தம் ஏற்கும்போது அந்த நிலையில் இடைவெளியைக் கொண்ட சமணம் என்ற நடைமுறை நிலைகளை இக்கட்டுரை ஆழமாக எடுத்துரைக்கிறது.

விவாதிக்கின்ற பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து உரிய இடங்களில் அதற்கான ஆதாரங்களைத் தந்துள்ளார். எந்தவொரு மெய்யியல் கருத்தையும் நடைமுறைக்குப் பொருத்திப்பார்க்கின்ற அவருடைய பாணியானது படிப்போரை வியக்கும் அளவில் உள்ளது. அவரின் தேடலானது வாசிப்போருக்கு பல நிலைகளில் தெளிவினைத் தருகிறது. இத்தகைய நோக்கு இக்காலகட்டத்திற்கு மிக அவசியமாகிறது. சமூகப்பிரக்ஞையினைக் கொண்ட நூலாசிரியரின் இந்தப் பயணம் தொடரவும், எல்லையை விரிவாக்கி அவர் மென்மேலும் பல நூல்களைப் படைக்கவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல்: பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1)
ஆசிரியர் : முனைவர் சு.மாதவன் (அலைபேசி +91 971513 30855)
பதிப்பகம் : அறம் பதிப்பகம், 3/582, முல்லைத்தெரு, கஸ்தூரிபாய் நகர், TNHB எதிரில், முள்ளிப்பட்டு கிராமம் மற்றும் அஞ்சல், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 632 316 
அலைபேசி : 91507 24997,  மின்னஞ்சல் arampublication50@gmail.com
பதிப்பாண்டு : ஜனவரி 2021
விலை : ரூ.180




21 மார்ச் 2025இல், சென்னையில் நடைபெற்ற விடுதலை கலை இலக்கியப்பேரவை நடத்திய இளவந்திகைத் திருவிழாவின்போது சிறந்த பௌத்த எழுத்திற்கான விருதினைப் பெற்ற நிகழ்வில் நூலாசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்கள் நூலின் படியை விழா மேடையில் தந்து தன்னுடைய அன்பினைப் பகிர்ந்து எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அவருக்கு மனமார்ந்த நன்றி.

-------------------------------------------------------------------------------------------
நூலில் வெளியான என்னுடைய வாழ்த்துரை
-------------------------------------------------------------------------------------------

Comments

  1. நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக நண்பரே...!

    ReplyDelete

Post a Comment