மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்





மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தச் சமயச் சான்றுகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது பூம்புகார் எனப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஆகும். தொண்டை நாட்டில் காஞ்சிபுரத்தைப் போல சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த பௌத்த மையமாக விளங்கியது. இவ்வூர் சங்க காலம் முதற்கொண்டு பௌத்த சமயச் செல்வாக்கினைக் கொண்டிருந்தது. கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. அந்நாளில் பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்தது. பூம்பட்டினம் எனவும், பூம்புகார் எனவும் அந்நகர்க்கு அமைந்த பெயர்களை ஆராயும்போது, ஓர் அழகிய கடற்கரை நகராக அது விளங்கியதை உணரமுடிகிறது

பொ..மு.3ஆம் நூற்றாண்டில் மகிந்தர் இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கு முன்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு பௌத்த விகாரங்களைக் கட்டினார் என்றும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் கூறப்படுகின்ற இந்திர விகாரங்கள் இவர் கட்டியவை என்றும், மகிந்தர் கட்டிய இந்த விகாரங்களை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள். இவற்றையன்றி உவவனம் என்னும் பூஞ்சோலையின் நடுவில் பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் இருந்த புத்தருடைய பாத பீடிகையை  அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கி வந்தார்கள்

இவ்வாறான பெருமைகளைக் கொண்டுள்ள பூம்புகாரில் இன்றும் காணப்படுகின்ற விகாரமும், புத்த பாதமும், அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளும் பௌத்தம் குறித்த முக்கியமான சான்றுகளாக உள்ளன.

பல்லவனேஸ்வரத்தில் பொ..4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த விகாரம், பொ..6-7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் கோயில் ஆகியவற்றின் இடுபாடுகள் உள்ளன. தற்போது 20 மீ. கிழக்கு-மேற்காகவும், 16 மீ. வடக்கு-தெற்காகவும், 2 மீ. உயரத்திலும் உள்ள, செங்கற்களால் ஆன பௌத்தக்கோயிலின் அடித்தளம் மட்டுமே உள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை சுண்ணாம்புக்கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் பாதமும், பூமியைத் தொட்டமர்ந்த கோலத்தில் உள்ள புத்தரின் செப்புத்திருமேனியும் ஆகும்.

இவ்விடத்தில் பொ..5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அமர்ந்த நிலையில் இரு கால்களையும் மடக்கி வைத்து, இரு உள்ளங்கைகளையும் ஒன்றன்மீது ஒன்றை வைத்துத் தியானக்கோலத்தில் இருக்கும் புத்தர் செப்புத் திருமேனி கிடைத்தது. பொ..8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, நின்ற நிலையில் அமைதியே உருவான போதிசத்துவ மைத்ரேயரின் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட இத்திருமேனி பல்லவர்காலப் படைப்பிற்கு மிகவும் சிறந்த எடுத்துக்காட்டாகும். சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது இருந்தது.

புத்தர் பாதம், புத்த விகாரம், செப்புத்திருமேனிகள் ஆகியவற்றுடன் இம்மாவட்டத்தில் எழுமகளூர், சின்னமேடு, குத்தாலம், பெருஞ்சேரி ஆகிய நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன

குத்தாலம் வட்டம் எழுமகளூரில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை குளத்தின் கரையில் ஒரு புத்தர் சிலை உள்ளது. இந்தச் சிலை அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவற்றுடன் உள்ளது. கைகளின் அமைப்பு இச்சிலை தியானக்கோலத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. இடுப்பிற்குக் கீழுள்ள பகுதி முற்றிலும் உடைந்துள்ளதுசோழ நாட்டில் கழுத்திலிருந்து இடுப்பு வரை மட்டுமே உள்ள புத்தர் சிலை இது ஒன்றேயாகும்.

சின்னமேடு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட, காலத்தால் முந்தைய புத்தர் சிலை பூம்புகாரிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகத்தில் உள்ளது.  2000 ஆண்டுக்கு முற்பட்ட, நின்ற நிலையிலுள்ள இந்தச் சிலை சின்னமேட்டின் அருகே கரையிலிருந்து 1 கி.மீ. தொலைவில் கடலில் கிடைத்ததாகும். 57 செ.மீ. உயரமும் 25 செ.மீ. அகலமும் உள்ள இச்சிலை சாம்பல் நிறமுடைய ஒருவகைப் பளிங்குக்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. கழுத்து முதல் கால் வரை ஆடை காணப்படுகிறது. கைகளும் பாதங்களும் உடைந்துள்ளன. பெரும்பாலான பகுதிகள் கடற்பூச்சிகள் அரித்துச் சிதைந்துள்ளனஇந்த அரிய சிலையின் கலையமைதி ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நாகார்ஜுனகொண்டா சிலைகளோடு ஒத்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலில் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள புத்தர் சிலை இதுவாகும்

குத்தாலத்தில் ராஜகோபாலபுரம் அருகில் பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில்  ஒரு புத்தர் சிலை இருந்தது. இந்தச் சிலை நீண்ட காதுகள், தலையில் சுருள்முடி, அதற்கு மேல் தீச்சுடர், பிரபை, அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மேலாடை, சிலையின் பின்புறத்தில் அரை வட்ட வடிவில் வேலைப்பாடுகளுடன் கூடிய வளைவு ஆகியவற்றோடு இருந்தது. முகம் தெளிவின்றியும், வலது காலுக்கு அருகில் சிறு பகுதி உடைந்தும், வலது காது சிதைந்தும் இருந்தன. மழை வராத சமயங்களில் சிலையைச் சாய்த்து வைத்ததாகவும், அவ்வாறு வைத்த பின்னர் மழை வந்ததாகவும் உள்ளூரில் கூறினர். அடுத்தடுத்த களப்பணியின்போது இச்சிலையைக் காணமுடியவில்லை

மயிலாடுதுறை அருகில் பெருஞ்சேரியில் செங்கல் கட்டுமானத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலில் பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியானக்கோலத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளது. சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், நெற்றியில் அழகான திலகக்குறி, தலையில் வரிசையாகச் சுருள்முடி, அதற்குமேல் தீச்சுடர், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், மார்பின் இடப்புறம் குறுக்கே செல்லும் ஆடை, இடுப்பில் ஆடை, வலது உள்ளங்கையில் தர்மசக்கரக்குறி முதலியவை இச்சிலையின் கூறுகளாகும். தலையின் பின்புறத்திலும் சுருள்முடி அழகாக உள்ளதுஇந்தச் சிலையின் பீடத்தில் எழுத்துப்பொறிப்பு தெளிவின்றி உள்ளது. அண்மைக்காலமாக விளக்கேற்றுவதோடு, சிலை முழுவதும் திருநீறு பூசியும், நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டும் வணங்குகின்றனர். முன்னர் இச்சிலையைரிஷி’  என்றழைத்தனர். சோழ நாட்டில் புத்தர் சிலை உள்ள இரு கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இவ்வாறான, புத்தர் சிலையைக் கொண்ட மற்றொரு கோயில் நாகப்பட்டினத்தில் புத்தமங்கலம் என்னுமிடத்தில் உள்ளதாகும்.

 

பௌத்தச் சான்றுகளை அதிகம் கொண்டுள்ள நாகப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக அத்தகைய பெருமையை  பூம்புகார் கொண்டுள்ளதை இன்றும் இச்சான்றுகள் நிறுவுகின்றன


துணை நின்றவை

  • வேங்கடசாமி, மயிலை சீனி.  (1940, மூன்றாம் பதிப்பு 1957). பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
  • சேதுப்பிள்ளை, ரா.பி. (1976). தமிழகம் ஊரும் பேரும். பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
  • நெடுஞ்செழியன், கா. (ஜூலை 1996). கடலில் கிடைத்த புத்தர் சிற்பம். கல்வெட்டு, 47.
  • தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு. (1997). தமிழ்நாட்டு வரலாறு: பல்லவர்-பாண்டியர் காலம், இரண்டாம் பகுதி, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை.
  • (2013, பிப்ரவரி 1). பௌத்த சுவட்டைத்தேடி : பெருஞ்சேரி, சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2013/02/blog-post.html
  • (2022, ஜனவரி 1). பௌத்த சுவட்டைத்தேடி : எழுமகளூர்சோழ நாட்டில் பௌத்தம், https://ponnibuddha.blogspot.com/2022/01/blog-post.html
  • ஜம்புலிங்கம், பா. (2022). சோழ நாட்டில் பௌத்தம். புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.
  • Jambulingam, B. (2023). Buddhism in Chola Nadu. Pudhu Ezuthu, Kaveripattinam.
  • Arun Raj, T. (Ed.). (2023). Dharohar: Protected Monuments/Sites of Trichy Circle – at a Glance.: ASI, Trichy Circle, Trichy.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: போதி முரசு, ஏப்ரல் 2025
-------------------------------------------------------------------------------------------

Comments